பரிசுத்த வேதவாக்கியங்கள் முழுவதுமாக இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவைகள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டவை. ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது’ (2தீமோ 3:16). இது தேவன் மனிதனுடைய மனதை உயர்த்தியதனால் அல்ல, மனிதர்களுடைய நினைவுகளை அவர் வழி நடத்தியதால் உண்டானது. ஏதோ சிலக் கொள்கைகளை மனிதர்களிடம் தேவன் சொல்லவில்லை; மாறாக, ஒவ்வொரு வார்த்தையையும் அவர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ‘தீக்கதரிசனமானது ஒருகாலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்’ (2பேது 1:21). வார்த்தையின் ஏவுதலை மறுக்கும் எந்த மனிதனின் ‘கொள்கையும்’, தேவனுடைய வார்த்தையைத் தாக்கும் சாத்தானின் கருவியே. தெய்வத்துவம் வேதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது. எழுதப்பட்டிருக்கிறவைகள் பரிசுத்தமானது, பரலோகத்திற்குறியது, பயத்துடன்கூடிய மதிப்பை நம்மில் ஏற்படுத்தக்கூடியது, மனிதனால் உருவாக்கப்பட்டிருக்க முடியாதது.
வேதவாக்கியங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனை வெளிப்படுத்துகிறது. இது ஏதோ திரும்பத்திரும்ப சொல்லப்படும் குறிப்புபோலத் தோன்றலாம், ஆனாலும் இன்றைக்கு இது சொல்லப்படவேண்டியதே. கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களில் பலர் நம்பும் ‘கடவுள்’ புறஜாதியாரைப் போலிருக்கிறது. தேசத்தின் வாழ்க்கையிலே இன்றைக்கு விளையாட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய இடம், உடல் சுகத்தின் மீதான அலாதி பிரியம், குடும்ப வாழ்க்கையின் அழிவு, சற்றும் வெட்கமில்லாத கன்னியமற்ற பெண்களின் நடக்கை போன்றவை, பாபிலோன், பெரிசியா, கிரேக்க மற்றும் ரோமப் பேரரசுகளை வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒரே வியாதியின் பல அறிகுறிகள். இந்த இருபதாம் நூற்றாண்டில், பெரும்பாலான மக்களால் பெயரளவில் ‘கிறிஸ்தவனைப்’-பற்றிய சிந்தையானது, ஏதோ பழங்காலக் கடவுள்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த குணநலன்களை அனுமானித்துக்கொள்கிறார்கள். ஆனால் இதிலிருந்து முற்றிலும்மாறாக, பரிசுத்த தேவனானவர் பரிபூரணத்தை உடுத்தியவராக, மனித அறிவு கண்டுபிடிக்கக்கூட முடியாத பண்பு நலன்களைக் கொண்டவராக இருக்கிறார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்படுத்துதலினாலேயே தேவன் அறிந்துகொள்ளப்பட முடியும். வேதவாக்கியங்களைத்தவிர, தேவனைப்பற்றிய கொள்கை அளவிலான விளக்கங்கள் கூட அவரை வெளிப்படுத்தமுடியாது. ‘உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில்’ (1கொரி 1:21) என்பது இன்றும் உண்மையே. எங்கே வேதவசனங்கள் மறக்கப்படுகிறதோ, அங்கே தேவன் ‘அறியப்படாத தேவனாகவே’ (அப் 17:23) இருக்கிறார். ஒரு ஆத்துமா தேவனை அறிந்துகொள்வதற்கு முன்னதாக வேதவாக்கியங்களைவிட சற்று அதிகமான ஒன்று தேவைப்படுகிறது. இது இன்று வெகுச்சிலராலேயே உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. வேதியியலைப்பற்றிய அறிவை எப்படி பாடப்புத்தகங்களை நன்றாகப் படிப்பதினால் பெற்றுக்கொள்ளமுடியுமோ, அதைப்போல தேவனைப்பற்றிய அறிவும் வேதத்தைப் படிப்பதினால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இன்றைக்கு பலரது எண்ணமாக இருக்கிறது. அறிவுப்பூர்வமாக வேண்டுமானால் தேவனை அறிந்துகொள்ளலாம்; ஆனால் ஆவிக்குறியரீதியாக அறிந்துகொள்ள முடியாது. இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் நம்முடைய இருதயத்தில் வெளிப்படுத்துவதன் மூலமாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்திலேயே அறிந்துகொள்ளபட முடியும் (அதாவது சாதாரண இயற்கை வெளிப்படுத்துவதைவிட மேலான வகையில் அறிந்துகொள்ளுதல்). ‘இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன், இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்’ (2கொரி 4:6). தேவனை இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தின் மூலம் கண்டுகொண்ட ஒருவன் ‘உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்’ (சங் 36:9) என்று சொல்லுவான்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட புலத்தின் மூலமே தேவன் அறிந்துகொள்ளப்படத் தக்கவராயிருக்கிறார். ‘ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்’ (யோவா 3:3) என்பதை இயேசு தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனைப்பற்றிய எந்த ஆவிக்குறிய அறிவும் அவனுக்கு இல்லை. ‘ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குறியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்கு பைத்தியமாய்த் தோன்றும்; அவைகள் ஆவிகேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கபடுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்’ (1கொரி 2:14). தண்ணீர் தானாகவே தன் மட்டத்தை விட்டு மேலெழுவதில்லை. அதைப்போல இயற்கையான மனிதன் இயற்கைக்கு மேலானவற்றை அறிந்துகொள்ள முடியாதவனாயிருக்கிறான். ‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதுமே நித்தியஜீவன்’ (யோவா 17:3). ‘உண்மையான கடவுளை’ அறிந்துகொள்வதற்கு முன்னர் நித்தியஜீவனைப்பற்றிய அறிவு கொடுக்கப்பட வேண்டும். 1யோவான் 5:20ல் இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது, ‘நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்’. ஆம், புதிய சிருஷ்டிமூலமாக, தேவன் ஆவிக்குறியவகையில் அறிந்துகொள்ளப்படுவதற்கு முன்னர், ஒரு ‘புரிந்துகொள்ளுதல்’ ஆவிக்குறிய வெளிப்பாடு கொடுக்கப்பட வேண்டும்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுடைய அறிவு, நம்மில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைக் கொடுக்கிறது, ஆனால் திருச்சபை மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த அனுபவத்திற்கு அந்நியர்களாகவே இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற ‘பல சமயங்களில்’ பெரும்பாலனவை ‘பழைய ஆதாமைத்’ தொடுவதாகவே உள்ளன. இது உருவிழந்த கல்வெட்டுகளை அலங்காரப்படுத்துவதுபோலாகும். இது ஒரு வெளிப்படையான ‘தோற்றம்’. சிறந்த சமய நம்பிக்கை இருக்கும் இடங்களில்கூட, பலசமயங்களில் அது உயிரற்ற சமய நம்பிக்கையாகவே இருக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதுகாலம் காலமாக இப்படித்தான் இருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோதும் இப்படித்தான் இருந்தது. யூதர்கள் சமயக் கொள்கைகளிலே உறுதியாயிருந்தார்கள். அந்த நாட்களில் அவர்கள் விக்கிரக ஆராதனைகளுக்கு விலகியே இருந்தார்கள். தேவாலயம் எருசலேமில் இருந்தது, நியாயப்பிரமாணம் விளக்கி போதிக்கப்பட்டது, யெகோவா தேவன் ஆராதிக்கப்பட்டார். அப்படி இருந்தும் இயேசு அவர்களிடம் சொன்னார், ‘என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்’ (யோவா 7:28). ‘என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிவீகளானால் என் பிதாவையும் அறிவீர்கள்’ (யோவா 8:19). ‘என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை’ (யோவா 8:54:55). நன்றாகக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள், இந்த வார்த்தைகள் வேதவாக்கியங்களை தங்களிடத்தில் வைத்திருந்து, அதை சிரத்தையுடன் ஆராய்ந்த, தேவனுடைய பரிசுத்த வார்த்தை என்று மதிப்புகொடுத்த மக்களைப்பற்றிதான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது! அவர்கள் தேவனைப்பற்றி கொள்கையளவிலே நன்றாக அறிந்திருந்தார்கள், ஆனால் ஆவிக்குறியவகையிலே அவரை அறிந்திருக்கவில்லை.
யூத உலகத்தில் இருந்தபடியே, இன்று கிறிஸ்தவ உலகமும் இருக்கிறது. பரிசுத்த திரித்துவத்தை ‘நம்பும்’ பலரும், தேவனைப்பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது ஆவிக்குறிய அறிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இதை நாம் எப்படி உறுதியாகச் சொல்கிறோம்? இப்படியாகத்தான்: ஒரு மரத்தின் குணநலனை, அதன் கனியின் தன்மையே வெளிப்படுத்துகிறது; நீரூற்றின் தன்மையை அதிலிருந்து வரும் தண்ணீரின்தன்மை வெளிப்படுத்துகிறது. தேவனைப்பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட அறிவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தைத் தருகிறது, அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவம், மனிதனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட கனிகளிலே வெளிப்படுகிறது. உண்மையில் தேவன் இருதயத்தில் வாசம்பண்ணி, முழு மனமாற்றத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் இயற்கைக்கு எதிரான, இயற்கையால் கொண்டுவரமுடியாத ஒன்று வெளிப்படுகிறது. மேலும் தங்களை தேவனுடைய பிள்ளைகள் என்று அழைத்துக்கொள்கிறவர்களில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பேர்களுடைய வாழ்க்கையில் இந்த அனுபவம் காணப்படுகிறதில்லை. சராசரியாக தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களில் பலருடைய வாழ்க்கையில் இயற்கையாக தோன்றக்கூடிய காரியங்களைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. அவன் சத்தியத்திலும், அதிசயமானக் கிருபையிலும் இருக்கிறான்; அவன் ‘கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறான்’ (2கொரி 5:17). அவனுடைய அனுபவமும், வாழ்க்கையும் இயற்கைக்கு அப்பாற்பட்டது.
கிறிஸ்தவனின் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவம், தேவனைப்பற்றிய அவனது மனப்போக்கிலே காணப்படுகிறது. தேவனுடைய வாழ்க்கையைத் தன்னில் கொண்டவனாய், ‘தெய்வீக குணநலன்களில்’ (2பேது 1:4-7) தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறவனாய், நிச்சயமாக தேவனில் அன்புகூறுகிறான், தேவனுடைய காரியங்களில் அன்புகூறுகிறான், தேவன் விரும்புகிறதை அவனும் விரும்புகிறான், மேலும், தேவன் வெறுக்கிறதை தானும் வெறுக்கிறான். இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவம் அவனில் தேவனுடைய ஆவியினாலேயே, அதாவது தேவனுடைய வார்த்தையினாலேயே ஏற்படுத்தப்படுகிறது, தேவஆவியானவர் அவருடைய வார்த்தையைத்தவிர வேறு எந்தவகையிலும் செயல்படுகிறதில்லை. அந்த வார்த்தையினாலேயே அவர் உயிர்பிக்கிறார். அந்த வார்த்தையினாலேயே அவர் பாவத்தைக்குறித்து உணர்த்துகிறார். அந்த வார்த்தையினாலேயே அவர் பரிசுத்தப்படுத்துகிறார். அந்த வார்த்தையினாலேயே அவர் வாக்களிக்கிறார். அந்த வார்த்தையினாலேயே தன்னுடைய பரிசுத்தர்களை அவர் வளர்க்கிறார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் வேதத்தைப் படிப்பதின்மூலம், ஆராய்வதின்மூலம், ஆவியானவர் நம்மிலே ஏற்படுத்துகிற நடைமுறை மாற்றங்களில் எந்த அளவிற்கு ஆதாயம் பெறுகிறோம் என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டும். இனி சற்று விரிவாக பார்ப்போம். உண்மையாகவே வேதவாக்கியங்களிலிருந்து ஆவிக்குறிய ஆதாயம்பெறும் ஒருவன் பின்வருவனவற்றைப் பெற்றிருக்கிறான்.
சிருஷ்டிகருக்கும், சிருஷ்டிகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய கருத்து வேற்றுமை என்னவென்றால், தேவனாயிருக்கவேண்டியது அவரா (சிருஷ்டிகர்) அல்லது அவைகளா (சிருஷ்டிகள்), செயல்களை வழி நடத்தும் சித்தாந்தங்கள் அவருடைய ஞானத்தின்படியா அல்லது அவைகளின் ஞானத்தின்படியா, அவருடைய சித்தம் உயர்ந்ததா அல்லது அவைகளுடைய சித்தம் உயர்ந்ததா என்பவைகளே. தன்னுடைய சிருஷ்டிகருக்கு அடிபணிந்து இருப்பதை விரும்பாததே லூசிபரின் வீழ்ச்சிக்குக் காரணமானது. ‘நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், ... உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று நீ உன் இருதயத்தில் சொன்னாயே’ (ஏசா 14:13,14). நம்முடைய முதல் பெற்றோரை இச்சித்த பாம்பின் பொய்யும், ‘நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள்’ (ஆதி 3:5) என்பதே. அதுமுதல், இயற்கையான மனிதனின் இருதயத்தின் உணர்வுகள், ‘எங்களைவிட்டு விலகியிரும்; உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; சர்வ வல்லவரை நாம் சேவிக்க அவர் யார்?’ (யோபு 21:14,15) என்பதே. ‘எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன்’ (சங் 12:4). ‘நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லை’ (எரே 2:31).
பாவமே தேவனிடத்திலிருந்து மனிதனை அந்நியனாக்கியது (எபே 4:18). அவனுடைய இருதயம் அவருக்கு எதிராகவும், அவனுடைய சித்தம் அவருக்கு எதிராகவும், அவனுடைய நினைவுகள் தேவனுக்கு எதிராகவும் இருக்கிறது. மாறாக, இரட்சிப்பு என்பது தேவனிடத்தில் சமாதானமாயிருப்பது. ‘கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்’ (1பேது 3:18). சட்டப்படி அது ஏற்கனவே செய்யப்பட்டாகிவிட்டது; செயல்முறையாக அது நடந்தேறிக்கொண்டிருக்கிறது. இரட்சிப்பு என்பது தேவனிடத்தில் ஒப்புரவாகியிருப்பது; அது நம்மீதான பாவத்தின் அதிகாரம் உடைக்கப்பட்டதை உள்ளடக்கியது, நமக்குள்ளான பகையுணர்வு வெட்டப்பட்டுள்ளது, நம்முடைய இருதயம் தேவனுக்கென்று வெற்றிச்சிறக்கப்பட்டுள்ளது. உண்மையான மனமாற்றம் என்பது இதுதான்; எல்லா விக்கிரங்களையும் உடைத்தெறிதல், ஏமாற்று உலகின் வெற்றுப் பெருமையிலிருந்து மனந்திரும்புதல், தேவனை நம்முடைய பங்காக, ராஜாவாக, நம்முடைய எல்லாவற்றிற்கும் எல்லாமாக வைத்துக்கொள்ளுதல். ‘தேவனுடைய சித்தத்தினாலே தங்களைத் தாங்களே கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள்’ (2 கொரி 8:5) என்று கொரிந்தியர்களைப்பற்றி வாசிக்கிறோம். உண்மையாகவே மனந்திரும்பியவர்களின் ஆசையும் தீர்மானமும், ‘பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்க வேண்டும்’ (2கொரி 5:15) என்பதாகவே இருக்கும்.
தேவனுடைய எதிர்பார்ப்புகள் இப்பொழுது உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நம்மேல் உள்ள அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, அவர் தேவனாக சொந்தம் கொண்டாடப்படுகிறார். மனமாற்றம் அடைந்தவர்கள் ‘தங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் அவயங்களை நீதிக்குறிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்’ (ரோம 6:13). நம்மிடத்திலே அவர் கேட்பது இதுதான்: அவர் நம்முடைய தேவனாகவும், நம்மால் சேவிக்கப்படுபவராகவும், எந்த தயக்கமும் இல்லாமல், அவர் நம்மிடத்தில் எதைக்கேட்டாலும், நம்மை முழுமையாக அற்பணிப்பதையே எதிர்பார்க்கிறார் (லூக் 14: 26, 27, 33). நம்மை ஆளுகைசெய்தல், நமக்காக பரிந்துரைத்தல், நம்மைப்பற்றி முடிவெடுத்தல் ஆகியவை இனி தேவனுக்கு சொந்தமானது; அவருடைய விருப்பத்தின் படி, அவரால் கட்டுப்படுத்தப்படுவது, ஆளுகைசெய்யப்படுவது, உபயோகப்படுத்தப்படுவது இனி நமக்கு சொந்தமானது.
நம்முடைய இருதயமாகிய சிங்காசனத்தை அவருக்கு கொடுப்பதே, தேவன் நம்முடைய தேவன் என்று சொந்தம்கொண்டாடுவதாகும். ஏசாயாவின் (26:13) வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘எங்கள் தேவனாகிய கர்த்தாவே உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மைமாத்திரம் சார்ந்து, உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்’. சங்கீதக்காரனோடு சேர்ந்து, மாய்மாலமாக அல்ல, உண்மையாக, ‘தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்’ (சங் 63:1) என்று சொல்வது. இது நம்முடைய உண்மையான அனுபவமாக மாறும்பொழுது, இந்த ஆதாயத்தை நாம் வேதவாக்கியங்களிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். வேதவாக்கியங்களில், வேதவாக்கியங்களில் மட்டுமே தேவனுடைய எதிர்பார்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது, தேவனுடைய உரிமைகளைப்பற்றிய தெளிவான முழு தோற்றத்தையும் அறிந்து நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்கும்பொழுது, நாம் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
‘பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் கர்த்தருக்கு அஞ்சியிருப்பதாக’ (சங் 33:8). தேவன் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர், அவருடைய மகத்துவம் நம்மை நடுங்கச்செய்ய வேண்டும். அவருடைய வல்லமை மிகவும் உயர்ந்தது என்பது நம்மை பயமுறுத்த வேண்டும். அவர் மிக உயர்ந்த பரிசுத்தமானவர், பாவத்தைப்பற்றிய அவருடைய வெறுப்பு முடிவில்லாதது, தவறு செய்யவேண்டும் என்ற நினைவே நம்மை பயங்கரத்தில் ஆழ்த்த வேண்டும். ‘தேவன் பரிசுத்தவான்களின் ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்; தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்’ (சங் 89:7).
‘கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ (நீதி 9:10), மேலும் ‘அறிவை’ சரியாக பயன்படுத்துவதே ‘ஞானம்’. தேவன் உண்மையாகவே சரியாக அறியப்பட்டிருப்பாரென்றால், அவர் சரியாக பயப்படப்படுவார். துன்மார்க்கரைப்பற்றி இப்படி எழுதப்பட்டிருக்கிறது, ‘அவர்களுடைய கண்களுக்கு முன்னால் தெய்வ பயம் இல்லை’ (ரோம 3:18). அவர்கள் தேவனுடைய மகத்துவத்தை உணர்ந்துகொள்ளவில்லை, அவருடைய அதிகாரத்தைக்குறித்த அக்கரையில்லை, அவருடைய கட்டளைகளுக்கு மதிப்பில்லை, அவர் அவர்களை நியாயம் தீர்ப்பார் என்ற எச்சரிப்பும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவருடைய உடன்படிக்கையின் கீழ் உள்ள மக்களுக்கு, ‘அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்கு பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்திருக்கிறேன்’ (எரே32:40) என்று வாக்களித்திருக்கிறார். ஆகையால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு நடுங்கி (ஏசா 66:5) அவருக்கு முன்பாக பொறுமையாக நடந்துகொள்வார்கள்.
‘தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம்’ (நீதி 8:13). மேலும், ‘கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையைவிட்டு விலகுவார்கள்’ (நீதி 16:6). கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு வாழ்கிற மனிதன் எப்பொழுதும், ‘கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும், தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது’ (நீதி 15:3) என்கிற நினைவோடு, தன்னுடைய தனிப்பட்ட நடத்தையிலும், பொதுவான நடத்தையிலும் கவனமாக இருப்பான். ஒருவன் பொது இடத்தில் மனிதருடைய கண்கள் அவன் மேல் இருப்பதினால் சில பாவங்களை செய்யாமல் தவிர்த்து, தனிமையிலே அவைகளை செய்யத் தயங்காதபொழுது அவன் தேவபயம் அற்றவனாகவே இருக்கிறான். கிறிஸ்தவர்கள் தன்னைச் சுற்றி இருக்கும்பொழுது தன்னுடைய வார்த்தைகளில் கவனம் உள்ள ஒருவன், மற்ற நேரங்களில் அப்படி இல்லாமல் இருக்கும்பொழுது அவன் தேவபயம் அற்றவனாக இருக்கிறான். எல்லா நேரங்களிலும் தேவன் தன்னைப் பார்க்கிறார், கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற ஆச்சரியமூட்டும் உணர்வு இல்லாதவனாயிருக்கிறான். உண்மையாக மனந்திரும்பின ஆத்துமா தேவனுக்கு கீழ்ப்படியாமையையும், மீறுதலையும் குறித்து பயப்படும். அவன் தேவன் விரும்பாததை செய்ய விரும்புவதில்லை. மாறாக, அவனுடைய உண்மையான, ஆழமான விருப்பம் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா வற்றிலும் தேவனைப் பிரியப்படுதுவதே. ‘நான் உமது நாமத்திற்கு பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப் படுத்தும்’ (சங் 86:11) என்பதே அவனுடைய இருதயத்தின் வேண்டுதலாயிருக்கிறது.
தேவனுடைய பரிசுத்தர்கள் கூட, அவருக்கு பயப்படுதலைக்குறித்து போதிக்கப்பட வேண்டியவர்களாயிருந்தார்கள் (சங் 34: 11). இங்கும், எப்போதும்போல, வேதவாகியங்களின் மூலமாகவே நாம் போதிக்கப்படுகிறோம் (நீதி 2: 5). தேவனுடைய கண்கள் எப்பொழுதும் நம்மேல் இருக்கிறது, நம்முடைய செய்கைகளைக்குறித்து, நம்முடைய நினைவுகளை நிறுத்துப்பார்க்கிறது என்பதையும் நாம் அவைகள் மூலமாகவே அறிந்து கொள்கிறோம். பரிசுத்தஆவியானவர் வேதவாக்கியங்களை நம்முடைய இருதயத்தில் வைக்கும்பொழுது, அந்த கட்டளைக்கு நாம் உயரிய அளவிலே செவிசாய்க்கிறோம், ‘நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு’ (நீதி 23:17). ஆகவே, இதுவரை, நாம் தேவனுடைய ஆச்சரியமூட்டும் மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே, ‘நீர் என்னைக் காண்கிற தேவன்’ (ஆதி 16:13) என்ற உணர்வுக்குள்ளாக வந்து, ‘பயத்தோடும், நடுக்கத்தோடும்’ (பிலி 2:12) நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவோமென்றால், நாம் வேதவாக்கியங்களைப் படிப்பதின் மூலமும் ஆராய்வதின் மூலமும் உண்மையாகவே ஆதாயம் பெறுகிறோம்.
ஆதாம் தேவனுடையக் கட்டளையை மீறியதினால் பாவம் இந்த உலகத்திற்குள் வந்தது, அவனுடைய எல்லா விழுந்துபோன பிள்ளைகளும் அவனைப்போலவே நன்னடத்தையற்றவர்களாகவே பெற்றெடுக்கப்பட்டார்கள் (ஆதி 5:3). ‘நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்’ (1யோவா 3:4). பாவம் நம்மையே அழிக்கக்கூடியது, ஆவிக்குறிய ஒழுங்கின்மையை ஏற்படுத்தக்கூடியது. பாவம் தேவனுடைய ஆளுகையை ஏற்றுக்கொள்ள மறுத்து, தேவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டு, அவருடைய சித்தத்திற்கு எதிராகக் கலகம் செய்கிறது. நம்முடைய சொந்த வழியைத் தெரிந்தெடுப்பதே பாவமாகும். பாவத்திலிருந்தும், குற்ற மனசாட்சியிலிருந்தும், அதன் வல்லமையிலிருந்தும் அதன் தண்டனையிலிருந்தும் விடுதலைப்பெறுவதே இரட்சிப்பாகும். தேவனுடைய கிருபையின் அவசியத்தைக்குறித்து உணர்த்தும் அதே பரிசுத்த ஆவியானவர் தான் தேவனுடைய ஆளுகை நம்மை அரசாள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறார். ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலேவைத்து, அவர்களுடைய இருதயங்களிலே அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன் அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்’ (எபி 8:10).
கீழ்ப்படிதலின் ஆவி, ஒவ்வொரு மனந்திரும்பின ஆத்துமாவுடனும் தொடர்பில் உள்ளது. ‘ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்’ (யோவா 14:23) என்று இயேசு சொன்னார். பரிசோதனை இங்குதான் உள்ளது: அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். நம்மில் ஒருவரும் அதை பரிபூரணமாக கைக்கொள்ளாவிடினும், ஒவ்வொரு உண்மையானக் கிறிஸ்தவனும் அதைக் கைகொள்ள விரும்புகிறான், முயற்சி செய்கிறான். பவுலுடன் சேர்ந்து ‘உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன்’ (ரோம 7:22) என்று அவனும் சொல்லுகிறான். சங்கீதக்காரனுடன் சேர்ந்து, ‘மெய்வழியை நான் தெரிந்துகொண்டு’, ‘உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன்’ (சங் 119:30,111) என்று சொல்லுகிறான். தேவனின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும், தேவனுடைய கற்பனைகளைப் புறந்தள்ளும் போதனையானது, அவன் எவ்வளவு மிருதுவாக பேசினாலும் அந்த கிறிஸ்தவன் தேவனின் சட்டத்திற்குக் கீழ் இல்லை, அவன் சாத்தானுக்குக் கீழிருக்கிறான் என்பதை உறுதிபடுத்துகிறது. கிறிஸ்து தன்னுடைய ஜனங்களை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுதலையாக்கியிருக்கிறார், அதனுடைய கட்டளைகளிலிருந்து அல்ல; அவர் நம்மை தேவனுடைய கோபத்திலிருந்து மீட்டிருக்கிறார், அவருடைய ஆளுகையிலிருந்து அல்ல. ‘உன் முழு இருதயத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூறுவாயாக’ என்பது ஒரு போதும் மாற்றப்படவில்லை.
‘நாம் கிறிஸ்துவின் பிரமாணத்திற்குட்பட்டவர்களாயிருக்கிறோம்’ என்று 1கொரிந்தியர் 9:21 வெளிப்படையாக உறுதிபடுத்துகிறது. ‘அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்’ (1 யோவா 2: 6). இயேசு எப்படி ‘நடந்தார்’? பரிபூரணமாக தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்; தன்னை முழுவதுமாக நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படுத்தி, தன்னுடைய நினைவிலும், வார்த்தையிலும், செயல்களிலும் அதற்குக் கீழ்ப்படிந்து கனப்படுத்தினார். அவர் நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கல்ல, அதை நிறைவேற்றுவதற்கே வந்தார் (மத் 5:17). தேவன் மேலுள்ள நம்முடைய அன்பு, மகிழ்வூட்டும் உணர்வுகளினாலோ அல்லது அழகான வார்த்தைகளினாலோ அல்ல, அவருடைய கற்பனைகளைக் கைகொள்வதினால் வெளிப்படுத்தப்படுகிறது (யோவா 14:15), மேலும் கிறிஸ்துவின் கற்பனைகள், தேவனின் கற்பனைகளே (யாத் 20:6). ஒரு உண்மையான கிறிஸ்தவனின் விண்ணப்பமானது, ‘உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்’ (சங் 119:35) என்பதாகவே இருக்கிறது. இதுவரை நம்முடைய வேதவாசிப்பும், வேதஆராய்சியும், தேவனின் கற்பனைகளின் மீது மேலான அன்பையும், ஆழ்ந்த மரியாதையையும், சரியான கைக்கொள்ளுதலையும், ஆவியானவரின் நடைமுறைப்படுத்துதலின் மூலம் நம்மில் பெற்றுத் தந்திருக்குமென்றால், நாம் உண்மையாகவே அதினால் ஆதாயம் பெற்றிருக்கிறோம்.
எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஒரு மனிதன் தன்னுடைய ‘கடவுளின்’ மீது அதிகமாய் நம்பிக்கை வைக்கிறான். சிலர் தங்களுடைய ஆரோக்கியத்திலும், மற்றவர்கள் தங்களுடைய சொத்திலும், சிலர் சுயத்திலும், மற்றவர்கள் தங்களுடைய நண்பர்களையும் நம்புகிறார்கள். உண்மையாக மனந்திரும்பாத அனைவருக்கும் உள்ள ஒரு போதுவானத்தன்மை, அவர்கள் அனைவரும் மாமசத்தின் கைகளின் மீது சார்ந்திருக்கிறார்கள். ஆனால் கிருபையினால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிருஷ்டிப்பின் மீதான நம்பிக்கையிலிருந்து தங்களுடைய இருதயத்தைவிலக்கி, உயிருள்ள தேவனின் மீது வைக்கிறார்கள். தேவனுடைய ஜனங்கள் விசுவாசத்தின் பிள்ளைகள். ‘தேவனே உம்மை நம்பியிருக்கிறேன்; நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்’ (சங் 25:2), மேலும், ‘அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்’ (யோபு 13:15) என்பதே அவர்களின் இருதயத்தின் வார்த்தையாயிருக்கிறது. அவர்கள் தேவன் தங்களுக்கு கொடுப்பார், பாதுகாப்பார் ஆசீர்வதிப்பார் என்பதை சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் பார்த்திராத வளத்தை நோக்கிப் பார்க்கிறார்கள், பார்க்கமுடியாத தேவனை எண்ணுகிறார்கள், மறைவான கையின் மீது சாய்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் விசுவாசத்தை அசைக்கும் நேரங்கள் அவர்களுக்கு உண்டு என்பது உண்மை, அவர்கள் அதில் தவறி விழுந்தாலும், முழுவதுமாக இழக்கப்பட்டுப்போவதில்லை. இந்த அனுபவம் எல்லாருக்கும் ஒரே சீராக இல்லாவிட்டாலும், சங்கீதம் 56:11 அவர்களுடைய பொதுவான ஆத்தும நிலைமையைக்குறித்து, ‘தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்’ (ரோம 10:17) என்பதே அவர்களின் இருதயத்தின் விண்ணப்பமாயிருக்கிறது. ஆகவே வேதவசனங்கள் தொடர்ச்சியாக சிந்திக்கப்படும்பொழுது, அவைகளின் வாக்குத்தத்தங்கள் மனதிலே உள்வாங்கப்படுகிறது, விசுவாசம் உறுதிப்படுகிறது, தேவன்மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது, உறுதித்தன்மை ஆழமாகிறது.
அது தன்னுடைய ‘கடவுளின்’ மீது ஒரு மனிதன் அதிகமாக ஆனந்திப்பது. இந்த மோசமான உலகம் தன்னுடைய முயற்சியிலும், இன்பங்களிலும், உடைமைகளிலும் திருப்தியை நாடுகிறது. உண்மையானவற்றைப் புறந்தள்ளி, நிழலானவைகளை விருதாவாய் நாடித்தேடுகிறான். ஆனால் ஒரு கிறிஸ்தவன் அதிசயமான தேவனின் பரிபூரணத்தின்மீது ஆனந்தமடைகிறான். உண்மையாகவே தேவனை நம்முடைய கடவுளாக சொந்தம் கொண்டாடுதல் என்பது அவருடைய செங்கோளுக்கு அடிபணிவது மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாருக்கும் மேலாக அவரை மதிப்பதே, இந்த உலகத்தை விட தேவன் மேல் அன்பாயிருக்கிறோம் என்பதாகும். சங்கீதக்காரனுடன் இணைந்து, ‘என் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது’ (சங் 87:7) என்ற செயல்முறையான உணர்வைக்கொள்வதாகும். இந்த மோசமான உலகம் தரக்கூடாத சந்தோஷத்தை விடுவிக்கப்பட்டவர்கள் தேவனிடத்திலிருந்துப் பெற்றுகொள்வதுமல்லாமல், அவர்கள் ‘தேவனைக்குறித்து மேன்மைப்பாராட்டுகிறார்கள்’ (ரோம 5:11); ஆனால் இதைக்குறித்து இந்த மோசமான உலகம் எதையும் அறிந்திருக்கவில்லை. ‘கர்த்தர் என் பங்கு’ (புல 3:24) என்பதே அவர்களின் வார்த்தையாயிருகிறது.
‘அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைச் செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்’ (ஆப 3:17,18) என்பதே கர்த்தருடைய பரிசுத்தர்களின் வார்த்தையாயிருக்கிறது. ஆஹா, இது உண்மையாகவே இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவமல்லவா! ஆம், தன்னுடைய உலகத்தின் உடைமைகளெல்லாம் எடுக்கப்பட்டுவிட்டாலும் ஒரு கிறிஸ்தவன் களிகூரமுடியும் (எபி 10:34). அவன் மோசமான சிறையிலே வைக்கப்பட்டு அடிக்கப்பட்டாலும், அவன் தேவனைத் துதித்துப்பாட முடியும் (அப் 16:25). ஆகவே இந்த உலகத்தின் வெறுமையான இன்பங்களை நீ படிப்படியாக மறந்து, தேவனுக்கு வெளியே எந்த ஆசீர்வாதமும் இல்லை என்பதை நீ அறிந்துகொள்ளும்பொழுது, எல்லா சிறப்புகளுக்கும் அவர்தான் காரணகர்த்தா என்பதை நீ கண்டுபிடிக்கும்பொழுது, உன்னுடைய இருதயம் அவருக்கு நேராக செல்கிறது, உன்னுடைய மனம் அவர்மீது தங்குகிறது, உன்னுடைய ஆத்துமா அவரில் சந்தோஷத்தையும், திருப்தியையும் கண்டுகொள்கிறது, மேலும் வேதவாக்கியங்களிலிருந்து உண்மையாகவே நீ ஆதாயம் பெற்றுக்கொள்கிறாய்.
சூழ்நிலைகள் எதிராக செல்லும்பொழுது முறுமுறுப்பது இயற்கையானதே, ஆனால் அமைதிகாப்பது (லேவி 10:3) இயற்கைக்கு அப்பாற்பட்டது. நம்முடையத் திட்டங்கள் தவறும்பொழுது விரக்தியடைவது இயற்கையானது, ஆனால் அவருடைய திட்டங்களுக்கு தலைவணங்குவது இயற்கைக்கு அப்பாற்பட்டது. நம்முடைய சொந்த வழியைத் தெரிந்தெடுப்பது இயற்கையானதே, ‘என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது’ என்று சொல்வது இயற்கைக்கு அப்பாற்பட்டது. நமக்கு அன்பானவர்கள் மரணத்தை சந்திக்கும்பொழுது கூக்குரலிடுவது இயற்கையானதே, ஆனால் ‘கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்’ (யோபு 1:21) என்று சொல்வது இயற்கைக்கு அப்பாற்பட்டது. தேவன் உண்மையாகவே நம்முடைய பங்கை ஏற்படுத்தியிருப்பதால், அவருடைய ஞானத்தை அதிசயிக்க கற்றுக்கொள்கிறோம், அவர் எல்லா காரியங்களையும் சரியாகவே செய்கிறார் என்பதை அறிந்துகொள்கிறோம். நம்முடைய மனம் அவர்மேல் தங்கியிருப்பதால், நம்முடைய இருதயம் ‘பூரண சமாதானத்தில்’ (ஏசா 26:3) வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மற்றுமொரு உறுதியான சோதனை இருக்கிறது: உங்களுடைய வேதஆராய்ச்சி தேவனுடைய வழிகள்தான் சிறந்தவை என்பதை போதிக்குமென்றால், அவருடைய எல்லா சிறப்புக் கட்டளைகளுக்கும் உங்களை முழுமனதுடன் கீழ்ப்படியச் செய்யுமென்றால், எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றிசெலுத்தச் செய்யுமென்றால் (எபே 5:20), நீங்கள் உண்மையாகவே ஆதாயம் பெறுகிறீர்கள்.
துதித்தல், உண்மையாகவே தேவனில் திருப்தியடைந்த இருதயத்தின் வெளிபாடாகும். அப்படிப்பட்டவன், ‘கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோதரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்’ (சங் 34:1) என்று சொல்லுவான். தேவனுடைய ஜனங்கள் அவரைத் துதிப்பதற்கு எத்தனை அதிகமான காரணங்கள் உள்ளன! அநாதி சிநேகத்தால் சிநேகிக்கிறார், பிள்ளைகளும் சுதந்தரருமாக்கியிருக்கிறார், சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறுகிறது, அவர்களின் ஒவ்வொரு தேவையும் சந்திக்கப்படுகிறது, ஒரு நித்தியமான சொல்லமுடியாத மகிழ்ச்சி அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது, அவர்களுடைய மகிழ்ச்சியான கின்னரம் ஒருபோதும் அமைதியாயிருக்க முடியாது. இல்லாவிட்டால் அவனால் ‘முற்றிலும் அன்பாயிருக்கும்’ தேவனுடைய ஐக்கியத்தில் மகிழ்ச்சியாயிருக்க முடியாது. எந்த அளவிற்கு நாம் ‘தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைகிறோமோ’ (கொலோ 1:10) அந்த அளவிற்கு நாம் அவரைத் துதிப்போம். ஆனால் இது எந்த அளவிற்கு வேதவாக்கியம் நம்மில் நிலைத்திருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் ‘ஞானப்பாட்டுகளினாலே’ நிறைந்து (கொலோ 3:16) நம்முடைய இருதயத்தில் தேவனுக்கு சங்கீதம் பாடிக்கொண்டிருப்போம். எந்த அளவிற்கு நம்முடைய ஆத்துமா உண்மையான ஆராதனைக்கு நேராக செல்கிறதோ, அந்த அளவிற்கு நாம் தேவனை ஸ்தோத்தரிக்கிறவர்களாகவும் துதிக்கிறவர்களாகவும் காணப்படுவோம், அவருடைய வார்த்தையிலிருந்து நாம் ஆதாயம் பெறுகிறோம் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.