முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

09. வேதவாக்கியங்களும் சந்தோஷமும்

வேதவாக்கியங்களும் சந்தோஷமும்

தேவபக்தியற்றவர்கள் ஓயாமல் சந்தோஷத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கண்டுபிடிப்பதில்லை: அதைத் தொடர்வதிலே அவர்கள் தீவிரமாய் செயல்பட்டு சோர்ந்து போகிறார்கள், ஆனால் அவைகளெல்லாம் வீணாண முயற்சியே. அவர்களுடைய இருதயங்கள் தேவனைவிட்டு திரும்பியிருப்பதால், சந்தோஷத்தை அது இல்லாத கீழான இடத்தை நோக்கித் தேடுகிறார்கள்; அதன் பொருளை (தேவனை) நிராகரித்துவிட்டு, அதனால் கேலி பண்ணப்படும்படியாக நிழலை நோக்கி சிரத்தையுடன் தேடுகிறார்கள். கிறிஸ்துவில் தேவன் மாத்திரமே பாவிகளை மகிழ்ச்சியாக்க முடியுமென்பது பரலோகத்தின் அநாதி கட்டளையாகும்; ஆனால் இதை அவர்கள் நம்புவதில்லை, ஆகவே எங்கே சிறந்த சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விசாரித்துக்கொண்டே ஒரு சிருஷ்டியிடமிருந்து மற்றுமொரு சிருஷ்டியை நோக்கி செல்கிறார்கள், ஒரு உடைந்த நீரூற்றிடமிருந்து மற்றொன்டிடம் செல்கிறார்கள். என்னிலே நீங்கள் அதைக் கண்டுகொள்ளலாம் என்று அவர்களை ஈர்க்கும் ஒவ்வொரு உலகப் பொருளும் சொல்கிறது, ஆனால் விரைவில் அது அவர்களை ஏமாற்றிவிடுகிறது. ஆனாலும் இன்றும் புதிதாக சந்தோஷத்தைத் தேடிக்கொண்டு நேற்று அவர்களை ஏமாற்றிய அதே சிருஷ்டியிடம் செல்கிறார்கள். ஒரு சொகுசான சிருஷ்டியிடம் பல மாதிரி பரிசோதனைகளுக்குப்பிறகு அவர்கள் இது வெறுமையே என்பதைக் கண்டுகொண்டால், ‘இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்’ (யோவா 4:13) என்ற நம்முடைய தேவனின் வார்த்தையை சரிபார்க்கும் விதமாக, அவர்கள் மற்றொரு சிருஷ்டியிடம் செல்கிறார்கள்.

இப்பொழுது மற்றுமொரு உச்ச நிலைக்கு நாம் செல்கிறோம்: சந்தோஷமாயிருப்பது பாவம் என்று கருதுகிற சில கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இதைக் கேட்கும்பொழுது நம்முடைய வாசகர்களில் பலர் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை, அந்த குறைந்த பாக்கியமுள்ளவர்களுடன் நாம் செயல்படும் அதேவேளையில், அவர்களாவது (நம்முடைய வாசகர்களாவது) சூரியஒளிமிக்க சூழ்நிலைக்கு வந்திருப்பதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கட்டும். வெளிப்படையாக பதியவைப்பதற்குப்பதிலாக, பெருவாரியாக உதாரணங்கள் மூலமும், சிலவற்றை சம்மந்தப்படுத்திக்காட்டியும், அவர்கள் எப்பொழுதும் வெளிச்சம் குறைந்த இடத்திலேயே இருப்பது அவர்கள் கடமையென்று ஒரு சிலர் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தோஷத்தின் உணர்வுகள் ஒளியின் தூதனைப்போல காணப்படும் சாத்தானால் ஏற்படுத்தப்பட்டவையென்று அவர்கள் கற்பனை செய்து கொள்ளுகிறார்கள். இந்த பாவம் நிறைந்த உலகத்தினுள் நாம் இருப்பதால் மகிழ்ச்சியாயிருப்பதே துன்மார்க்கமான ஒன்றென்று அவர்கள் முடிவுகட்டிவிடுகிறார்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டது என்றறிந்து மகிழ்ச்சியாயிருப்பது ஒரு துணிகரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள், மேலும் அப்படி மகிழ்ச்சியாயிருக்கும் இளம் கிறிஸ்தவர்களிடம், நீங்கள் மீண்டும் பாவக் குலத்தில் இடறிவிழ அதிக காலம் செல்லாதென்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட எல்லாரையும் இந்த அதிகாரத்தின் பின்வரும் பகுதியை ஜெபத்துடன் அவர்கள் எண்ண ஓட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும்படி மென்மையுடன் வேண்டுகிறோம்.

‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ (1தெச 5:16). தேவன் நம்மை என்ன செய்ய கட்டளையிட்டிருக்கிறாரோ அதைச்செய்வது நிச்சயமாக பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்க முடியாது. சந்தோஷமாயிருப்பதற்கு தேவன் தடைவிதிப்பதில்லை. இல்லை, சாத்தானே நாம் நம்முடைய சுரமண்டலத்தை (மகிழ்ச்சியின் கீதத்தை) கீழே வைக்கச்செய்யப் போராடுகிறான். ‘கர்த்தருக்குள் துக்கமாயிருங்கள்: துக்கமாயிருங்களென்று மறுபடியும் சொல்லுகிறேன்’ என்று கட்டளையிடும் எந்தக் குறிப்பும் வேதவாக்கியங்களில் இல்லை; ஆனால், ‘நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூறுங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்’ (சங் 33:1) என்று உற்சாகப்படுத்தும் புத்திமதி இருக்கிறது. வாசகரே, நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவரானால் (இத்தருணத்தில் வேதவாக்கியங்களினால் உங்களை பரிசோதித்து இக்கருத்தை உறுதிசெய்துகொண்டிருக்க வேண்டும்), கிறிஸ்து உங்களுடையவர், அவருக்குள் இருக்கிற எல்லாம் உங்களுக்குள் இருக்கிறது. அவர் உங்களை உற்சாகப்படுத்தி கட்டளையிடுகிறார், ‘சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள்; பூர்த்தியாய்க் குடியுங்கள்’ (உன் 5:1): அவருடைய அன்பின் விருந்துக்கு எதிராக நீங்கள் செய்யகூடிய ஒரே பாவம் என்னவென்றால் மிகக் குறைவான அளவில் அதில் நீங்கள் பங்குபெறுவதே. ‘உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்’ (ஏசா 55:1) என்பது ஏற்கனவே பரலோகத்திலிருப்பவர்களுக்காக சொல்லப்பட்டதல்ல, மாறாக தற்பொழுது பூமியிலிருக்கும் பரிசுத்தர்களுக்கே சொல்லப்பட்டது. இது எங்களை இப்படியாகச் சொல்லச் செய்கிறது:

1. சந்தோஷமாயிருப்பது நம்முடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்’ (பிலி 4:4). இங்கே சந்தோஷமாயிருப்பதை ஒரு விசுவாசி தனிப்பட்டவிதத்தில், தற்காலத்தில் மற்றும் நிரந்தரமாக செய்யவேண்டியக் கடமையாகப் பரிசுத்த ஆவியானவர் பேசுகிறார். நாம் சந்தோஷமாயிருக்க வேண்டுமா அல்லது கவலையாயிருக்க வேண்டுமா என்ற ஒரு தெரிந்தெடுத்தலை கர்த்தர் நமக்கு கொடுக்கவில்லை, ஆனால் மகிழ்ச்சியாயிருப்பதைக் கடமையாக்கியிருக்கிறார். நாம் சந்தோஷமாயில்லாதிருப்பது, செய்ய வேண்டிய ஒன்றை நாம் செய்யாமலிருப்பதால் செய்யும் பாவமாகும் (Sin of omission). அடுத்தமுறை நீங்கள் ஒரு பிரகாசமானக் கிறிஸ்தவனை சந்திக்கும்பொழுது, அவனைக் கடிந்துகொள்ளாதீர்கள், சந்தேகக் கோட்டைக்குள் வாழும் நீங்கள் உங்களையே கடிந்துகொள்ளுங்கள்; தெய்வீக ஊற்றாகிய அவனது உற்சாகத்தை கேள்விக் கேட்பதற்கு நீங்கள் ஆயத்தமாகுவதற்குப்பதிலாக, உங்களுடைய பரிதாபத் தன்மையை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.

நாங்கள் இங்கே விரும்பிக் கேட்டுக்கொண்டிருப்பது மாம்சபிரகாரமான மகிழ்ச்சியல்ல, அதாவது மாம்சத்தின் மூலம் வரும் சந்தோஷத்தை நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. பூமிக்குறிய ஐஸ்வரியத்திலிருந்து சந்தோஷத்தைத் தேடுவது பயனற்றது, அது அடிக்கடி தனக்கென்று இறக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு பறந்துவிடுகிறது. சிலர் தங்களுடைய குடும்ப வட்டங்களில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள், அது அதிகபட்சம் சில வருடங்கள் மட்டுமே நீடிக்கிறது. இல்லை, நாம் ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கவேண்டுமென்றால்’ அது எப்பொழுதுமே நிலைநிற்கிற பொருளில் தான் இருக்க முடியும். பொருளாதாரம் சம்மந்தப்பட்ட மகிழ்ச்சியையும் நாங்கள் குறிப்பிடவில்லை. பைத்தியக்காரர் போல் நடந்துகொள்ளும்பொழுது மாத்திரமே உற்சாகமூட்டும் மகிழ்ச்சியுடன் காணப்படும் சிலர் இருக்கிறார்கள், அதின் விளைவோ பயங்கரமானது. இல்லை, இது புத்திக்கூர்மையாக, நிலையாக ஒரு இருதயம் தேவனுக்குள் மகிழுவது. தேவனுடைய ஒவ்வொரு குணாதிசயமும், விசுவாசத்துடன் சிந்திக்கப்படும்பொழுது, அது இருதயத்தைக் கீதம் பாடச்செய்யும். நற்செய்தியின் ஒவ்வொரு போதனையும் உண்மையாகப் புரிந்துகொள்ளப்படும்பொழுது, அது மகிழ்ச்சியையும் துதியையும் முன்னின்று அழைக்கும்.

சந்தோஷமென்பது கிறிஸ்தவக் கடமைகளில் ஒன்று. ஒருவேளை இதை வாசிப்பவர் வியப்படைய ஆயத்தமாகலாம், என்னுடைய உணர்வுகளாகிய சந்தோஷமும் கவலையும் என்னுடையக் கட்டுப்பாட்டில் இல்லை; சூழ்நிலைகள் உத்தரவிடுவதால் சந்தோஷமாயிருப்பதற்கோ அல்லது கவலையாயிருப்பதற்கோ எனக்கு நானே உதவிசெய்துக்கொள்ள முடியாதென்று சொல்லலாம். ஆனால் நாங்கள் மறுபடியும் சொல்கிறோம், ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்’ என்பது தெய்வீகக் கட்டளை, ஆகவே அதற்குப் பெருமளவில் கீழ்ப்படிய வேண்டியது ஒருவனுடைய சொந்த சக்திக்குட்பட்டதாயிருக்கிறது. என்னுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதற்கு நானே பொறுப்பு. கவலையான நினைவுகள் இருக்கும்பட்சத்தில் கவலையாக இருப்பதில் எனக்கு நானே உதவிசெய்துகொள்ள முடியாதென்பது உண்மை, ஆனால் என்னுடைய மனம் அதிலே வாழ்வதை நான் தடுத்து நிறுத்த முடியும். என்னுடைய இளைப்பாறுதலுக்காக நான் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் ஊற்ற முடியும், என் பாரத்தை அவர்மேல் போட முடியும். அவருடைய நல்லத் தன்மையையும், நல்ல வாக்குத்தத்தங்களையும், எனக்காகக் காத்திருக்கும் மகிமையான எதிர்காலத்தையும் தியானிக்கும்படியாக அவருடைய கிருபையை நான் நாட முடியும். நான் வெளிச்சத்திலேபோய் நிற்க வேண்டுமா அல்லது நிழலிலே மறைந்துகொள்ள வேண்டுமா என்பதை நானே தீர்மானிக்க வேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாயில்லாதிருப்பதென்பது துர்துஷ்டத்தைவிட மோசமானது, இது அறிக்கைசெய்து விட்டுவிட வேண்டிய ஒரு தவறு.

2. நாம் உண்மையான சந்தோஷத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

1யோவான் 1: 3,4ம் வசனங்களில் அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’. தேவனுடனான நம்முடைய ஐக்கியத்தின் குறைந்ததன்மையையும், அதனுடைய குறுகியத்தன்மையையும் நாம் பார்க்கும்பொழுது, ஒப்பீட்டு அளவில் பல கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாயிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ‘ஓ, மகிழ்ச்சியின் நாள் என் பங்கை உம்மீது வைத்தது, என் இரட்சகா, என் தேவனே! இந்த மின்னும் இருதயம் மகிழ்ச்சியாயிருக்கட்டும், வருகையை உலகெங்கும் சொல்லட்டும்’ என்று பலமுறை நாம் பாடுகிறோம். ஆம், ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர வேண்டுமானால், கிறிஸ்துவானவர் தொடர்ச்சியாகவும் நிலையாகவும் நம்முடைய மனதிலும், இருதயத்திலும் வைக்கப்பட வேண்டியவராயிருக்கிறார். எங்கே மிகுந்த விசுவாசமும் அதைத் தொடர்ந்த அன்பும் இருக்கிறதோ அங்கு மாத்திரமே மிகுந்த மகிழ்ச்சியும் இருக்கும்.

‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’. நாம் ‘எப்பொழுதுமே’ மகிழ்ச்சியாயிருக்கக்கூடிய வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. மற்ற எல்லாம் மாறக்கூடியது நிலையில்லாதது. இன்று நம்மை மகிழ்வூட்டும் ஒன்று நாளை நம்மை துக்கப்படுத்தலாம். ஆனால் செழுமையான காலங்களைப்போல, வறட்சியான காலங்களிலும் மகிழ்ந்திருக்கும்படி, கர்த்தர் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார். இதற்கு வலுசேர்க்கும்வகையில் அதற்கு அடுத்த வசனம் சொல்கிறது, ‘உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக, கர்த்தர் சமீபமாயிருக்கிறார்’ (பிலி 4:5). எல்லா வெளிப்பிரகாரமான காரியங்களிலும் சுயக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்; அவைகள் உங்களை அதிகம் மகிழ்வூட்டுவதாகத் தோன்றும்பொழுது அதில் இழுப்புண்டு விடாதீர்கள், மகிழ்ச்சியாக்காதபொழுது துவண்டுவிடாதீர்கள். உலகம் உங்களிடத்தில் புன்னகை பூக்கும்பொழுது உச்சத்திற்கு செல்லாதீர்கள், அது உங்களை முரைத்துப் பார்க்கும்பொழுது சோர்ந்துபோகாதிருங்கள். வெளிப்பிரகாரமான சொகுசுகளுடன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்: தேவனே ‘சமீபத்திலிருக்கும்பொழுது’ நாம் ஏன் அவைகளுடன் எப்பொழுதும் நிரம்பியிருக்க வேண்டும்? துன்பங்கள் கோரமாக இருந்தாலும், உலகப்பிரகாரமான இழப்பு பெரிதாக இருந்தாலும், ‘தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்’ (சங் 46:1) – தங்களை அவர்மேல் ஊற்றிவிடுபவர்களை ஆதரிக்கவும் தாங்கவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் உங்களை விசாரிக்கிரவரானபடியால், ‘நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாதிருங்கள்’ (பிலி 4:6). உலகபிரகாரமானவைகள் பயமுறுத்தும் கவலைகளை உள்ளடக்கியது, ஒரு கிறிஸ்தவன் அப்படியிருக்க முடியாது.

‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ (யோவா 15:11). கிறிஸ்துவின் இந்த மதிப்புமிக்க வார்த்தைகள் மனதிலே சிந்திக்கப்பட்டு இருதயத்தில் நம்பப்படும்பொழுது அவை சந்தோஷத்தைத்தவிர வேறொன்றையும் பிறப்பிக்கமுடியாது. கிறிஸ்துவில் இருப்பதைப்போன்று ஒரு மகிழ்ச்சியான இருதயமானது சத்தியத்தை அறிகிற அறிவின் அன்பிலிருந்து வருகிறது. ‘உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கும் மகிழ்ச்சியுமாயிருந்தது’ (எரே 15:16). ஆம், கர்த்தருடைய வார்த்தைகளை போஷித்து, உண்பதன்மூலமே ஆத்துமா கொழுமையாகிறது, நம்மால் அவரை நோக்கிப் பாடவும் இருதயத்தில் கீதஞ்சொல்லவும் முடிகிறது.

‘அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன்’ (சங் 43:4). ஸ்பர்ஜன் அவர்கள் நன்றாய் சொன்னதுபோல, பலிபீடத்தின் அடையாளமாயிருக்கும் கிறிஸ்துவண்டை, எத்தனை உற்சாகத்துடன் ஒரு கிறிஸ்தவன் நெருங்க வேண்டும்! தெளிவான வெளிச்சம் மிகப்பெரும் ஆழமான ஆசையைத் தூண்ட வேண்டும். சங்கீதக்காரன் புறஜாதிகளின் சம்பிரதாயத்தை நம்பாதவனாகையால், அவன் விரும்பியது வெறும் பலிபீடத்தையல்ல: அவனுடைய ஆத்துமா ஆவிக்குறிய ஐக்கியத்தையும், தன்னுடைய அந்த செயலின் மூலம் தேவனுடைய ஐக்கியத்தையே அவன் நாடினான். தேவன் இல்லாவிட்டால் அந்த ஆராதனையில் என்ன கடமை இருக்கிறது? வெறுமையான ஓடுகளையும் பதரையும்தவிர உண்மையில் அதில் என்ன இருக்கிறது? பரிசுத்த வெளிப்பாடுகளுடன் தாவீது தன்னுடைய ஆண்டவரை போற்றுவதை கவனியுங்கள்! அது அவனுடைய மகிழ்ச்சிமட்டுமல்ல, ஆனந்த மகிழ்ச்சி; மகிழ்ச்சியின் ஊற்றல்ல, மகிழ்ச்சியைத் தருபவரல்ல அல்லது மகிழ்ச்சியைக் கொண்டிருப்பவரல்ல; அவரே அந்த மகிழ்ச்சி! “என்னுடைய மகிழ்ச்சியின் சந்தோஷம்” அதாவது, ஆத்துமாவே, அந்த முக்கியமானதே, என்னுடைய சந்தோஷத்தின் பொருள் என்பதே அதன் அடிக்குறிப்பு.

‘அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒளிவமரத்தின் பலன் அற்றுபோனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்’ (ஆப 3: 17, 18). இது உலகப்பிரகாரமானது அறியாத ஒன்று; ஐயோ! இந்த அனுபவத்திற்கு கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளும் பலரும் அந்நியராகவே இருக்கிறார்கள்! ஆவிக்குறிய மற்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியின் ஊற்றானது தேவனில் புறப்படுகிறது; அவரிடத்திலிருந்து அது முன்னோக்கிப் பாய்கிறது. பழைய ஏற்பாட்டு திருச்சபை, ‘எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது’ (சங் 87:7) என்று சொன்னபொழுது இது அவளால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த இரகசியம் உண்மையாய் போதிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா மகிழ்ச்சியானது!

3. நமக்கு சந்தோஷத்தின் உன்னத மதிப்பு கற்றுக்கொடுக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

பறவைக்கு அதன் இறக்கைகள்போல, ஒரு ஆத்துமாவிற்கு மகிழ்ச்சியிருக்கிறது, அது நம்மை இந்த உலகத்தின் காரியங்களைவிட்டு உயரே எழும்பச்செய்கிறது. இது நெகேமியா 8:10ல் வெளிப்படையாகக் காண்பிக்கப்பட்டுள்ளது: ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்’. இஸ்ரவேலின் சரித்திரத்தில் நெகேமியாவின் காலம் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறிய கூட்டம் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு பாலஸ்தீனத்திற்கு திரும்பியிருந்தது. சிறையாகக் கொண்டுபோகப்பட்டவர்களால் நீண்டகாலமாக மறக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணமானது, இப்பொழுது மறுபடியும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள காணியாட்சியின் சட்டமாக நிலைநாட்டப்பட வேண்டியதாயிருந்தது. அச்சமயத்தில் கடந்தகாலத்தின் அவர்களுடைய பல பாவங்கள் நினைவுக்கு வந்தது, தெய்வீக ஆராதனையயும் தெய்வீக நியாயப்பிரமாணத்தையும் தங்கள் நடுவில் கொண்டவர்களாய் புதிய தேசமாக உருவெடுத்திருப்பதில், அவர்களுடைய கண்ணீர் இயற்கைக்குமாறாக அவர்களுடைய நன்றிதலுடன் கலந்தது. ஜனங்களுடைய ஆவியின் வல்லமை குறைய ஆரம்பித்தால் அவர்களால் தற்பொழுதைய கடினமான நிலமையை எதிர்கொள்ள முடியாதென்பதை நன்றாக அறிந்திருந்த அவர்களின் தலைவன் அவர்களிடம்: ‘நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன் என்றான்’.

பாவ அறிக்கையும், பாவத்திற்காக மனஸ்தாபப்படுதலும் முக்கியமான ஒன்று, அவைகள் இல்லாமல் தேவனுடனான ஐக்கியத்தைத் தொடர முடியாது. ஆனாலும், உண்மையான மனந்திரும்புதல் ஏற்படும்பொழுது, தேவனுடன் காரியங்கள் சரிசெய்யப்படும்பொழுது, நாம் ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாட’ (பிலி 3:13) வேண்டியவர்களாயிருக்கிறோம். நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதால் நாம் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல முடியும். ஒருவன், தனக்கு அன்பானர் இறந்திருக்கும்பொழுது, அந்த இடத்தை நெருங்குவது அவனுக்கு எத்தனை வேதனைத் தருவதாக இருக்கிறது! அதே மனிதன் தன்னுடைய மணவாட்டியை சந்திக்கப் புறப்படும்பொழுது எத்தனை உற்சாகத்துடன் செல்கிறான்! வாழ்க்கையின் போராட்டங்களுக்கு புலம்பல்கள் ஏற்புடையதல்ல. எங்கே நம்பிக்கை இல்லையோ அங்கே அவர்கள் கீழ்ப்படிவதற்கும் எந்த பெலனும் இல்லை. அங்கே சந்தோஷம் இல்லையென்றால், அங்கே ஆராதனையும் இருக்க முடியாது.

என் பிரியமான வாசகரே, செய்யப்படவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன, மற்றவர்களுக்குத் தேவைப்படுகிற சேவை செய்யப்படவேண்டியதாயிருக்கிறது, மேற்கொண்டு வர வேண்டிய சோதனைகள் உள்ளன, போர்செய்ய வேண்டிய போராட்டங்கள் உண்டு; நம்முடைய இருதயங்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்துகொண்டிருப்பதால் நாம் அவைகளுடன் சோதனை அடிப்படையிலேயே இணைந்துள்ளோம். நம்முடைய ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்குள் இளைப்பாறிக்கொண்டிருக்குமென்றால், நம்முடைய இருதயங்கள் கவலையில்லா மகிழ்ச்சியில் நிறைந்திருக்குமென்றால், நம்முடைய வேலை எளிதாயிருக்கும், கடமைகள் இன்பமாயிருக்கும், கவலைகள் தாங்கக்கூடியதாயிருக்கும், பொறுமை சாத்தியமாகும். கடந்தகால தோல்விகளின் சோகமான நினைவுகளோ அல்லது உற்சாகமான எதிர்காலத் தீர்மானங்களோ நம்மை இழுத்துச் சென்றுவிடாது. கரங்கள் வேகமாக அடிக்க வேண்டுமென்றால், அது அதை தாங்ககூடிய இருதயத்தையே அடிக்க வேண்டும். இரட்சகரைப்பற்றி இப்படியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது, ‘அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணவில்லை’ (எபி 12:2).

4. நாம் சந்தோஷத்தின் ஆணி வேரிலே பங்குபெறும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

விசுவாசமே மகிழ்ச்சியின் ஊற்று: ‘நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக’ (ரோம 15:13). நம்மிடத்திலிருந்து சிலவற்றை எடுத்துக்கொள்ளுவதினாலும், நமக்கு சிலவற்றை கொண்டுவருவதினாலும், ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் அமைதியையும் நிரந்தரமான பளபளப்பையும் கொடுக்கும் ஒரு அதிசயமான ஏற்பாடு நற்செய்தியில் இருக்கிறது. குத்திக்கொண்டிருக்கும் மனசாட்சிக்கு சமாதானத்தைச் சொல்லி குற்றசுமையை அது அகற்றுகிறது. ஒரு ஆத்துமா ஆக்கினைத்தீர்ப்பிற்கு கீழே இருக்கையில் இருந்த மரண திகிலையும் தேவன் மீதான பயத்தையும் இது அகற்றுகிறது. இது நமக்கு தேவனையே நம்முடைய இருதயத்தின் பங்காகவும், நம்முடைய ஐக்கியத்தின் பொருளாகவும் தருகிறது. ஆத்துமா தேவனில் இளைப்பாறுவதால் நற்செய்தி சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் தனிப்பட்டவிதத்திலே அப்பியாசப்படுத்திக்கொள்வதன் மூலமே இந்த ஆசீர்வாதங்கள் நமக்கு சொந்தமாகின்றன. விசுவாசம் அவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், அது அப்படி செய்யும்பொழுது இருதயம் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிறைந்திருக்கும். தொடர்ச்சியான சந்தோஷத்தின் ரகசியம், நாம் ஆரம்பித்தபொழுது (இரட்சிக்கப்பட்டபொழுது) இருந்தபடியே அது தொடர குழாயை திறந்தே வைத்திருக்க வேண்டும். அவிசுவாசமே அந்த குழாயை அடைக்கிறது. ஒரு வெப்பமானியின் பாதரசக்குமிழியை சுற்றி வெப்பம் இல்லாதிருந்தால், பாதரச அளவு மிகக்குறைந்த டிகிரியிலேயே இருக்கும் என்பதில் வியப்பேதுமில்லை. விசுவாசம் பெலவீனமாயிருக்கையில் சந்தோஷம் வலிமையாயிருக்கமுடியாது. நற்செய்தியின் விலைமதிப்பில்லாத் தன்மையை புதிதாய் உணர்ந்துகொள்ளும்படியும், அதன் ஆசீர்வதிக்கப்பட்டவைகளை புதிதாக அப்பியாசப்படுத்திக்கொள்ளும்படிக்கும் நாம் தினமும் ஜெபிக்க வேண்டும்; அப்பொழுது நம்மில் ஒரு புதுப்பிக்கப்பட்ட சந்தோஷம் இருக்கும்.

5. நம்முடைய சந்தோஷத்தை பாதுக்காத்துக்கொள்ள நாம் கவனமாயிருக்கும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘பரிசுத்த ஆவியில் சந்தோஷம்’ என்பது இயற்கையாக ஆவியில் உற்சாகமாயிருப்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக வேறுபட்டது. இது நம்முடைய சரீரத்திலும் இருதயத்திலும் வாசம்செய்யும் தேற்றரவாளனின் தயாரிப்பு, கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தி, மன்னிப்பிற்கும் சுத்தமாகுதலுக்கும் தேவையான எல்லா பதில்களையும் அளித்து, அதன்மூலம் தேவனுடன் சமாதானம் ஆகும்படிச் செய்கிறது; கிறிஸ்துவை நம்மில் அமையச்செய்து, அதனால் அவர் நம்முடைய ஆத்துமாவை ஆளுகைச் செய்து, அவருடையக் கட்டுப்பாட்டிற்கு நம்மைக் கீழ்ப்படுத்துகிறார். ‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்’ என்ற கட்டளை இருப்பதினாலே, நாம் சந்தோஷத்தை விட்டு விலகி இருப்பதற்கான எந்த ஒரு சோதனையோ, பாடுகளின் சூழ்நிலையோ இல்லை. இந்தக் கட்டளையைக் கொடுத்தவர் நம்முடைய வாழ்க்கையின் எல்லா இருண்ட பக்கங்களையும், எப்பக்கத்திலிருந்தும் நம்மை நெருக்கும் பாவங்களையும், கவலைகளையும், தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க நாம் செல்ல வேண்டிய ‘மகா உபத்திரவத்தையும்’ அறிந்து வைத்திருக்கிறார். இயற்கையான களியாட்டு இந்த உலகத்தின் கவலைகளை மறக்கச்செய்கிறது; இது வாழ்க்கையின் கஷ்டங்களிலே விரைவில் தளர்ந்துவிடுகிறது: நண்பர்களை இழந்தாலோ அல்லது உடல் ஆரோக்கியத்தை இழந்தாலோ இது மறைந்துவிடுகிறது. ஆனால் நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் சந்தோஷமானது எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அமைப்பிற்கோ அல்லது குணாதிசயத்திற்கோ உட்பட்டதல்ல; நம்முடைய மாறும் மனநிலையையோ அல்லது அதிர்ஷ்டத்தையோ பொறுத்து ஏறி இறங்குவதும் அல்ல.

இயற்கையானது அதன் தன்மையை தன்னுடைய பொருளிலே வெளிப்படுத்தலாம், இயேசுவும் லாசருவின் கல்லரையருகே கண்ணீர் விட்டார். ஆகிலும், அவைகள் பவுலுடன் இணைந்து வியப்படையலாம், ‘துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறோம்’ (2கொரி 6:10). ஒருவேளை கிறிஸ்தவனின் மீது அதிக பொறுப்புகள் ஏற்றப்படலாம், அவனுடைய வாழ்க்கை தொடர்ச்சியான பின்னடைவுகளைக் கொண்டிருக்கலாம், அவனுடையத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நம்பிக்கை தகர்ந்துபோயிக்கலாம், அவனுக்கு இந்த உலக வாழ்க்கையையும் அதின் உற்சாகத்தையும் இனிமையையும் கொடுத்த அன்புக்குறியவர்கள் மரணத்திற்கு மிக அருகில் இருக்கலாம், ஆனாலும், அவனுடைய எல்லா ஏமாற்றங்கள் மற்றும் கவலைகளுக்கு மத்தியிலும், அவனுடைய தேவன் அவன் ‘சந்தோஷமாயிருக்க’ வேண்டுமென்று கட்டளையிடுகிறார். பிலிப்பி பட்டணத்தில் சிறையிலிருந்த அப்போஸ்தரைக் கவனியுங்கள், உட்காவலறையிலே, கால்கள் தொழுமரத்தில் மாட்டியிருக்கையில், பயங்கரமாக அடித்ததினாலே அவர்கள் உடலிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? புகார் சொல்லிக்கொண்டும் முரைத்துக்கொண்டும் இருந்தார்களா? இந்தஅளவு மோசமாக நடத்தப்படும்படிக்கு நாம் என்ன செய்துவிட்டோமென்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருந்தார்களா? இல்லை! ‘நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத்துதித்துப் பாடிக்கொண்டிருத்தார்கள்’ (அப் 16:25). அவர்களுடைய வாழ்க்கையிலே பாவம் இல்லை, கீழ்ப்படிந்து நடந்தார்கள், ஆகவே பரிசுத்த ஆவியானவர் தங்குதடையின்றி கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து அவர்களுடைய இருதயங்களுக்கு காட்டினார், ஆகவே அவைகள் வழிந்து ஓடும்படி நிரம்பியிருந்தது. நாம் நம்முடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக்கூடாது.

கிறிஸ்து இருதயத்தில் பிரதானமாக இருக்கும்பொழுது, சந்தோஷம் அதை நிரப்புகிறது. நம்முடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் அவர் தேவனாயும், ஒவ்வொரு நோக்கத்திற்கும் மூலமாயும் (Source), எல்லா இச்சைகளையும் அடக்கியாள்பவராகவும் இருக்கும்பொழுது, இருதயத்தை சந்தோஷம் நிரப்பும், மேலும் உதடுகளிலிருந்து துதி எழும்பும். இவைகளைக் கொண்டிருப்பது நாளின் ஒவ்வொரு மணியிலேயும் சிலுவையை சுமந்து கொண்டிருப்பதை உள்ளடக்கியது; நாம் ஒன்று இல்லாமல் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ளாதபடிக்கு தேவன் அப்படி செய்திருக்கிறார். சுயத்தை துறத்தல், வலது கையை தறித்துப்போடுதல், வலது கண்ணைப் பிடுங்கிப்போடுதல் ஆகியவை ஆவியானவர் ஆத்துமாவில் நுழையும் வழிகள், உள்ளே வரும்பொழுது தேவனின் ஏற்றுக்கொள்ளப்பட்ட புன்முறுவல், அவருடைய அன்பின் நிச்சயம், நிலைத்திருக்கும் பிரசன்னம் ஆகிய சந்தோஷங்களைத் தன்னுடன் எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் நாம் எந்த ஆவியுடன் (மனநிலையுடன்) உலகத்தில் நுழைகிறோம் என்பதையும் இது அதிகமாகச் சார்ந்திருக்கிறது. மற்றவர்கள் நம்மை செல்லமாகவும் மென்மையாகவும் நடத்த வேண்டுமென்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். நாம் உயர்வாக நடத்தப்பட வேண்டுமென்று விரும்பினால், அப்படி நடக்காதபொழுது நாம் சோர்ந்துபோவோம். சுயத்தை மறந்து மற்றவர்கள் மகிழ்ச்சிபெற ஊழியம் செய்வதே மகிழ்ச்சியின் இரகசியமாகும். ‘வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே அதிக பாக்கியம்’, ஆகவே நமக்கு ஊழியம் கொள்ளுவதைவிட மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதே மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

6. நம்முடைய சந்தோஷத்திற்கு தடையாயிருப்பவைகளை விடாமுயற்சியுடன் தவிர்கும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

ஏன் அனேகக் கிறிஸ்தவர்கள் சந்தோஷமில்லாமல் காணப்படுகிறார்கள்? அவர்களெல்லாரும் ஒளியின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமில்லையா? ‘ஒளி’ என்ற வார்த்தை, தேவனுடைய தன்மையையும், அவருடனான நம்முடையத் தொடர்பையும், எதிர்காலத்தில் நாம் சேருமிடத்தையும், மேலும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நமக்கு விளக்கிக்காட்டுவதற்காக வேதவாக்கியங்களிலே பலமுறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையிலே ஒளியைப்போல நன்மைபயக்கும் மற்றும் அழகான பொருள் வேறு எது? ‘தேவன் ஒளியாயிருக்கிறார்; அவரில் எவ்வளவேனும் இருளில்லை’ (1யோவா 1:5). நாம் ஒளியில் தேவனுடன் நடக்கும்பொழுது மட்டுமே நம்முடைய இருதயம் உண்மையான சந்தோஷத்தினால் பூரிப்படையும். அவருடனான ஐக்கியத்தைத் தடுக்கும் காரியங்களை நாம் வேண்டுமென்றே அனுமதிப்பதே நம்முடைய ஆத்துமாவைக் குளிர்ந்துபோகச் செய்து இருளடையச் செய்கிறது. மாம்சத்தைத் திருப்திபடுத்துவதும், உலகத்துடன் ஒத்துப்போவதும், தடைசெய்யப்பட்ட பாதையில் நுழைவதுமே நம்முடைய ஆவிக்குறிய வாழ்க்கையை நோய்வாய்ப்படச்செய்து, நம்மை உற்சாகமற்றவர்களாக மாற்றுகிறது. ‘உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்ப எனக்குத் தாரும்’ (சங் 51:12) என்று தாவீது கதற வேண்டியிருந்தது. அவன் கட்டுப்பாடற்றவனாகவும், சுயத்தைத் திருப்திபடுத்துபவனாகவும் மாறியிருந்தான். சோதனை வந்தபொழுது அதை எதிர்த்து நிற்க அவனில் பெலனில்லை. அதற்கு அடிபணிந்தான், ஒரு பாவம் மற்றொன்றிற்கு வித்திட்டது. அவன் பின்வாங்கிப்போய் தேவனுடனான தொடர்பை இழந்தான். அறிக்கை செய்யப்படாத பாவம் அவனது மனசாட்சியை அழுத்தியது. ஓ, என்னுடைய சகோதர சகோதரிகளே! அப்படிப்பட்ட வீழ்ச்சியிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் நம்முடைய சந்தோஷத்தை இழந்துபோகாதிருக்க வேண்டுமென்றால், நம்முடைய சுயம் மறுக்கப்பட வேண்டும், மாம்ச இச்சைகளும் ஆசைகளும் சிலுவையிலறையப்பட வேண்டும். சோதனைக்கெதிராக நாம் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நம்முடைய முழங்காலில் நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து நாம் அடிக்கடி பருக வேண்டும். நாம் எப்பொழுதும் தேவனுக்கென்றே இருக்க வேண்டும்.

7. சந்தோஷத்திற்கும் கவலைக்குமிடையே ஒரு சரியான சமனிலையை நாம் பாதுகாத்துக்கொள்ளும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

கிறிஸ்தவ விசுவாசம் சந்தோஷத்தைப்பிறப்பிக்க மாற்றம் பெற்றிருக்குமென்றால், அது கிட்டத்தட்ட சமஅளவில் கவலையையும் பிறப்பிக்கத்தக்க வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. அந்த கவலை பரிசுத்தமானது, துணிச்சலானது, உன்னதமானது. ‘துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்’ (2கொரி 6:10) என்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் சட்டமாகும். விசுவாசம் தன்னுடைய ஒளியை நம்முடைய நிலையின்மீதும், தன்மையின்மீதும், நம்முடைய பாவங்களின்மீதும் வீசும்பொழுது, துக்கமடைதலென்பது அதன் விளைவுகளில் ஒன்றாயிருக்க வேண்டும். அமைதியான, பொறுமையான துக்கத்தின் மீது எந்த ஆழமான அஸ்திபாரமுமில்லாத, வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல், மிகக் குறைந்த அளவே ஈடுபட்டு, ஒரு நிழலாட்டம் கூட இல்லாத மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதை விட மேலான வெறுக்கத்தக்க ஒன்று இல்லை; துக்கம், ஏனென்றால் நான் எப்படி இருக்கிறேனென்றும், நான் எப்படி இருக்க வேண்டியவனாயிருக்கிறேனென்றும் எனக்குத் தெரியும்; துக்கம், ஏனென்றால் நான் உலகத்தைப் பார்க்கையில் அதன் களிப்பின் பின்னால் இருக்கும் நரக அக்கினியைப் பார்க்கிறேன், மேலும் மனிதன் எதை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

தன்னுடைய தோழரைப்பார்க்கிலும் ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டவரே (சங் 45:7) ‘துக்கப்பட்டு வியாகுலப்பட்டார்’ (மத் 26:37). இந்த இரண்டு குணாதிசயங்களும் அவருடைய நற்செய்தியின் செயல்பாட்டில் உண்மையாகவே அதை ஏற்றுக்கொள்ளும் இருதயத்தில் திரும்பத்திரும்ப வருகிறது. மேலும், ஒருவகையில் இது நம்மிடமிருந்து பயத்தை அகற்றுகிறது, நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஐக்கியத்தை நமக்குள் அறிமுகப்படுத்துகிறது, மகிழ்ச்சியின் தைலத்தால் நாம் அபிஷேகம் பண்ணப்படுகிறோம்; வேறொருவகையில் நம்முடைய சொந்த மோசமானத்தன்மையை இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது, மாம்சத்திற்கும் ஆவியானவருக்கும் இடையேயான போராட்டத்தினால், வருத்தத்தை உட்செலுத்துகிறது – அது இப்படியாகச் சொல்லச் செய்கிறது, ‘நிர்பந்தமான மனுஷன் நான்!’ (ரோம 7:24). இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானதல்ல, ஒன்றையொன்று நிரப்புபவை. ஆட்டுக்குட்டியானது ‘கசப்பான கீரையுடன்’ (யாத் 12:8) உட்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.