ஜெபமில்லாத ஒரு கிறிஸ்தவன் முரண்பாடுகளுக்கு உட்பட்டவன். எப்படி ஒரு பிறந்த குழந்தை உயிரற்றதுபோலவே இருக்கிறதோ, அதைப்போல ஜெபம் செய்யாமல் தன்னை விசுவாசி என்று அழைக்கிறவர்களும் ஆவிக்குரிய ஜீவன் இல்லாதவர்கள். பரிசுத்தவான்களுக்கு தேவனுடைய வார்த்தை ஆகாரமாய் இருப்பதுபோல், ஜெபமே அவர்களுக்கு சுவாசமாயிருக்கிறது. தர்சு பட்டணத்து சவுல் உண்மையாகவே மனந்திரும்பியிருக்கிறான் என்பதை தேவன் தமஸ்கு பட்டணத்து சீடனுக்கு உறுதிபடுத்தியபொழுது, அவர் அவனிடம் ‘அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்’ (அப் 9:11) என்று சொன்னார். பல தருணங்களில் இந்த சுயநீதியுள்ள பரிசேயன் தேவனுக்கு முன்பாக முழங்கால்களை முடக்கி தன்னுடைய ‘தியானங்களை’ செய்திருக்கிறான், ஆனால் அவன் ஜெபம் செய்வது இதுவே முதல் தடவை. எந்த வல்லமையுமில்லாத வடிவங்கள் காணப்படும் (2தீமோ 3:5) இந்நாட்களில் இந்த முக்கியமான வேறுபாடு மிகவும் குறிப்பிடப்பட வேண்டியதாயிருக்கிறது. மிக நேர்த்தியானமுறைகளில் தேவனைக்குறித்து திருப்தியடைந்திருப்பவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை என்றே சொல்லவேண்டும்; ‘கிருபையின் ஆவியும் விண்ணப்பங்களின் ஆவியும்’ (சக 12:10) ஒன்றையொன்று பிரிந்திருப்பதில்லை. மறுபடியும் பிறந்த தன்னுடைய குடும்பத்தில் தேவன் பேசமுடியாத பிள்ளைகளைக் கொண்டிருப்பதில்லை: ‘தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ?’ (லூக் 18:7). ஆம், அவரிடத்தில் ‘சத்தமிட்டுக் கூப்பிடுகிறார்கள்’, வெறுமையாக தங்கள் ஜெபங்களை ‘சொல்லுகிறதில்லை’.
அனேகமாக, தேவனுடைய சொந்த ஜனங்கள் வேறெந்த காரியங்களையும் செய்வதை விட ஜெபம் செய்யும்பொழுது அதிகமாக பாவம்செய்கிறார்கள் என்று இதை எழுதியவர் அறிவிக்கும்பொழுது, வாசிப்பவர் ஆச்சரியப்படலாம். எங்கே உண்மை இருக்க வேண்டுமோ அங்கே மாய்மாலம் இருக்கிறது! பணிந்துபோக வேண்டிய இடத்தில் எத்தனை தைரியமான கோரிக்கைகள்! நொறுங்குண்ட இருதயம் இருக்க வேண்டிய இடத்திலே என்ன ஒரு சடங்காச்சாரம்! நம்முடைய பாவங்களைக்குறித்து எந்த அளவுக்கு மிகவும் குறைவாக மதிப்பிட்டு அறிக்கை செய்கிறோம், எந்த அளவிற்கு மிகக்குறைவான ஆழத்திற்கு அவருடைய இரக்கங்களை நாம் நாடுகிறோம்! ஆனால் இங்கும் தேவன் பயங்கரமான பாவங்களிலிருந்து விடுவிக்கிறார், ஆனால் நாம் மிகவும் துக்கப்படும்படியாக எந்த அளவிற்கு குளிர்ந்துபோன இருதயம், எந்த அளவிற்கு அவிசுவாசம், எந்த அளவிற்கு சுய சித்தம், சுக ஜீவிகளாயிருக்கிறோம்! இவைகளின் மீது எந்த எண்ணமும் இல்லாதவர்கள் பரிசுத்தத்தன்மைக்கு அந்நியர்களாகவே இருக்கிறார்கள்.
எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையே ஜெபத்திலே நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். ஐயோ, எவ்வளவு முறை நம்முடைய மாம்சம் விரும்பினவற்றையே நாம் கேட்டிருக்கிறோம். ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக’ (2தீமோ 3:16) பரிசுத்த வேதவாக்கியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் ‘பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ண’ (யூதா 1:20) வேண்டியவர்களானதால், நம்முடைய ஜெபங்கள் வேதவாக்கியங்களுக்கு ஏற்புடையதாகவும், அவரே அதன் முழு ஆக்கியோனாகவும் இருக்க வேண்டும். எந்த அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தை ‘பரிபூரணமாக’ (கொலோ 3:16) அல்லது குறைவாக நம்மில் வாசம் செய்கிறதோ, ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுவதால்’ (மத் 12:34) அதற்கேற்றாற்போல், நம்முடைய விண்ணப்பங்களும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆவியின் சிந்தையுடன் இணைந்திருக்கும். வார்த்தையை நம்முடைய இருதயத்தில் மறைத்துவைக்கும் விகிதாச்சாரத்திற்கேற்ப அது நம்மை சுத்தப்படுத்தி, வனைந்து உள்ளான மனிதனைக் கட்டுப்படுத்துவதால் நம்முடைய ஜெபங்கள் தேவனுடைய பார்வையில் ஏற்புடையதாய் இருக்கும். வேறொரு பொருளிலே தாவீது சொன்னானே, ‘உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்’ (2நாளா 29:14) என்று, அப்படி நாமும் சொல்ல முடியும்.
நமது ஜெப வாழ்க்கையின் தூய்மையும் வல்லமையும், நாம் வேதவாசிப்பிலும் ஆராய்ச்சியிலும் எந்த அளவிற்கு ஆதாயம்பெறுகிறோம் என்பதை நிர்ணயிக்கும் அளவுகோல்கள். நம்முடைய வேதஆராய்ச்சி பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்திற்குக் கீழ் இல்லாமல், ஜெபமற்றத்தன்மையின் பாவத்தை உணர்த்தி, நம்முடைய அனுதின வாழ்க்கையில் ஜெபம் இருக்க வேண்டிய இடத்தை நமக்கு காட்டி, உன்னதமானவரின் மறைவிடத்திலே அதிகமாக நேரத்தை செலவிட உண்மையாகவே நம்மை எடுத்துச்சென்று, தேவன் ஏற்றுக்கொள்ளும்படியாக எப்படி ஜெபம் செய்ய வேண்டும், எப்படி அவருடைய வாக்குத்தத்தங்களை அப்பியாசப்படுத்தி அவருக்கு முன்பாக கெஞ்ச வேண்டும், எப்படி அவருடைய வழியில் அவைகளை நடைமுறைப்படுத்தி விண்ணப்பங்களாக மாற்ற வேண்டும் என்பவைகளை நமக்குக் கற்றுத்தராவிட்டால், வசனத்தின் மீது நாம் செலவிட்ட நேரங்கள் நம்முடைய ஆத்தும வளர்ச்சிக்கு உதவவில்லை என்பது மட்டுமல்ல, பெற்றுக்கொண்ட அந்த எழுத்துக்களின் அறிவே வரும் நாட்களில் நம்மீது ஆக்கினையைக் கொண்டுவரும். ‘நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்’ (யாக் 1:22) என்பது ஜெபத்தின் எச்சரிப்புக்கும் அதிலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்தும். இப்பொழுது நாம் ஏழு அம்சங்களையும் குறிப்பிடுவோம்.
இன்றைய நாளில் பல வேத வாசிப்பாளர்கள் (வேதபாட மாணவர்களும் கூட), ஜெபவாழ்க்கையானது பாவச் சேற்றின் வல்லமையிலிருந்தும், உலகத்தின் மயக்கத்திலிருந்தும், சாத்தானின் தாக்குதலிருந்தும் விடுதலைப் பெறவும் அனுதின நடக்கைக்கு மற்றும் தேவனுடனான ஐக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற உணர்த்துதல் இல்லாமல் இருப்பது பயப்படத்தக்க ஒன்று. உண்மையாகவே அந்த உணர்த்துதல் அவர்கள் இருதயத்தை பிடித்திருக்குமென்றால், தேவனுக்கு முன்பாக அவர்கள் அதிகமான நேரம் செலவிடாமல் இருப்பார்களா? ‘என்னுடைய விருப்பத்திற்குமாறாக இருந்தாலும், நான் செய்ய வேண்டிய அதிகமான வேலைகளுக்கிடையில் ஜெபிப்பதற்கு நேரமில்லை’ என்று சொல்வது சோம்பலாயிருப்பதைவிட மிகவும் மோசமானது. நாம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கும் செயல்களுக்கு நேரம் செலவிடுவது மட்டும் எப்பொழுதும் சாத்தியமாகிறது. நம்முடைய இரட்சகரைவிட மிகவும் அதிகமான வேலைப்பளுவுடன் வாழ்ந்தவர்கள் யார்? அப்படியிருந்தும் யார் அதிகமான நேரத்தை ஜெபத்திலே செலவிட்டது? நமக்கு இருக்கும் எல்லா நேரத்தையும் பயன்படுத்தி உண்மையாகவே நாம் தேவனுக்கு முன்பாக விண்ணப்பம் செய்யவும், வேண்டுதல் செய்யவும் வாஞ்சிப்போமென்றால், நாம் அதிகமான நேரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அவர் காரியங்களை ஒழுங்குபடுத்துவார்.
ஜெபத்தின் ஆழமான தேவைக்கான நேர்மறையான உணர்த்துதல் இல்லாமல் இருப்பது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களின் இயந்திரமான வாழ்க்கையிலிருந்து வெளிப்படையாகவே தெரிகிறது. ‘என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும்’ (மத் 21:13) என்று தேவன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். ‘போதிக்கும் அல்லது பாடல் பாடும் வீடல்ல’ ஆனால் அது ஜெபவீடு என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். இன்னும் முதல்நிலை திருச்சபைகள் என்று அழைக்கப்படும் சபைகளில்கூட ஜெபம் மிகச்சிறிய அளவிலேயே இருக்கிறது. சுவிசேஷக் கூட்டங்களும், வேதபோதனை கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன, ஆனால், இரண்டு வாரங்கள் சிறப்பு ஜெபம் நடைபெறும் என்ற செய்தியை எவ்வளவு அரிதாகக் கேள்விப்படுகிறோம்! மேலும் திருச்சபைகளின் ஜெபவாழ்க்கை பலப்படுத்தப்படாவிட்டால் இத்தகைய ‘வேதபோதனைக் கருத்தரங்குகள்’ எந்த அளவிற்கு சாதனைபடைக்க முடியும்? ‘நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்’ (மாற் 14: 38), ‘எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ (பிலி 4:6), ‘இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்’ (கொலோ 4:2) போன்ற வார்த்தைகளை தேவஆவியானவர் வல்லமையுடன் நம்முடைய இருதயங்களில் வைக்கும்பொழுது, நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.
‘நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்’ (ரோம 8:26). எப்படி கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் வெகுச்சிலரே இதை நம்புகிறார்கள்! பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கருத்து என்னவெனில், எதற்காக ஜெபம் பண்ணவேண்டும் என்று அநேகருக்குத் தெரியும், ஆனால் அவர்களுடைய கவனக்குறைவாலும், துன்மார்க்கத்தினாலும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஜெபமாகிய கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்பதே. ஆனால் இந்தக் கொள்கையானது ரோமர் 8:26ல் ஆவியானவரின் தூண்டுதலினாலே அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நேர்எதிராக உள்ளது. பொதுவாக, உறுதியான மாம்சத் தாழ்மை மனிதனால் ஏற்படுத்தப்படுவதல்ல, குறிப்பாக தேவனுடைய பரிசுத்தர்களாலும் ஏற்படுத்தப்படுவதல்ல, அவர்களில் பவுல் அப்போஸ்தலன் தன்னையும் சேர்த்துக்கொள்ளத் தயங்கவில்லை: ‘நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறோம்’ என்பதை கவனிக்க வேண்டும். மறுபடியும் பிறந்தவனுடைய நிலைமை இதுவாக இருக்குமென்றால், மறுபிறப்படையாதவனுக்கு எத்தனை அதிகம்! மேலும் தேவன் நம்மிடத்திலிருந்து என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பதை இருதயத்தில் உணர்த்தி, அவர் நம்மில், நம்மூலமாய் கிரியை செய்ய வேண்டுமாகையால், ஒருபுறம் இந்த வசனத்தை வாசித்து, அது சொல்வதை மனதளவிலே ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றொரு புறம் செயல்முறையான அனுபவத்தைக்கொள்ள வேண்டும்.
‘நான் பலமுறை என் ஜெபங்களை சொல்லுகிறேன்,
ஆனால் எப்பொழுதாவது நான் ஜெபிக்கிறேனா?
மேலும் என்னுடைய இருதயத்தின் வாஞ்சைகள்
நான் சொல்லும் வார்த்தைகளுடன் ஒத்திருக்கிறதா?
நான் முழங்கால்படியிட்டு கல்லானான கடவுள்களை வணங்கலாம்
உயிருள்ள கடவுளுக்கு செலுத்துவதுபோல,
வெறும் வார்த்தைகளான ஜெபத்தை மட்டும் சொல்லி’
இந்த பாடல் வரிகளை இதை எழுதியவருக்கு அவருடைய தாயார் கற்றுக்கொடுத்து, இப்பொழுது ‘தேவனுடைய சந்நிதிக்கு கடந்து சென்றிருந்தாலும்’ பல ஆண்டுகளுக்குப்பிறகும் அவர்களுடைய ஆராய்ந்து பார்க்கச்செய்யும் செய்திகள் இன்னும் வல்லமையுடன் அவருடைய வீட்டிற்கு வருகின்றன. ஒரு கிறிஸ்தவன் உலகத்தை சிருஷ்டிக்க முடியாததுபோல, அவன் பரிசுத்த ஆவியானவரின் நேரடியான வழி நடத்துதல் இல்லாமல் ஒருபோதும் ஜெபிக்கவும் முடியாது. உண்மையான ஜெபமானது ஆவியானவரால் நம்மில் உணர்த்தி தட்டியெழுப்பப்பட்டு, அவருடைய பரிசுத்த சித்தத்திற்கு ஏற்றவிதமாக, கிறிஸ்துவின் நாமத்தினாலே, நம்மை தேவனிடத்தில் கேட்கச்செய்கிறதாய் இருக்க வேண்டும். ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிக் கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்’ (1 யோவா 5:14). ஆனால் நாம் எதையாகிலும் தேவனுடைய சித்தத்தின்படி கேட்காவிட்டால் அது ஜெபமல்ல, யூகம். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சித்தமானது அவருடைய வார்த்தையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதென்பது உண்மை, ஆனாலும் அது சமையற்கலை புத்தகத்தில் உள்ளதைப் போன்று பல உணவுவகைகளை தயார் செய்வதைப்போன்றதல்ல. வேதவாக்கியங்கள், தொடர்ச்சியாக இருதயம் செயல்படுத்த வேண்டிய விதிகளைக்குறித்தும், வித்தியாசமான சூழ்நிலைகளில் மற்றும் தருணங்களில் அவைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான தெய்வீக உதவியைக்குறித்தும் பல விதிகளை வரிசைப்படுத்துகின்றன. ‘ஆண்டவரே, நீர் எங்களுக்கு ஜெபம்பண்ண போதிக்க வேண்டும்’ (லூக் 11:1) என்ற ஜெபத்தின் ஆழமான தேவையைக்குறித்து வேதவாக்கியங்கள் மூலமாக நாம் போதிக்கப்பட்டு, ஜெபத்தின் ஆவிக்காக அவரை வேண்டிக்கொள்ளும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம் பெறுகிறோம்.
முதலாவது, அவர் நமது உண்மையானத் தேவையை நமக்குத் தெரியப்படுத்துவார். உதாரணமாக, நம்முடைய உலகப்பிரகாரமானத் தேவையை எடுத்துக்கொள்வோம். எத்தனை முறை நாம் வெளிப்படையான பணத்தேவையில் இருக்கிறோம், வெளிப்பிரகாரமான காரியங்கள் நம்மை மிகவும் அழுத்துகிறது, நாம் இந்த உபத்திரவங்களிலிருந்தும் பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட விரும்புகிறோம். இங்கே நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று ‘அறிந்திருக்கிறோம்’. ஆனால் அது உண்மையல்ல, அது மிகவும் தொலைவிலிருக்கிறது! உண்மை என்னவென்றால், நாம் நிவாரணம் பெற வேண்டுமென்பது இயற்கையான விருப்பமாயிருந்தாலும், தேவன் எதிர்பார்க்கும் அவருடைய விருப்பத்திற்கு கீழ்ப்படிதலை (நமக்கு அது என்ன என்பது தெரிந்திருக்கும்பொழுது கூட) அல்லது நம்முடைய உள்ளான நன்மைக்கு ஏற்றவிதமாய் அந்த பாடுகளை அவர் எப்படி பரிசுத்தமாக்குவார் என்பதை நாம் அறியாதபடிக்கு, நாம் மிகவும் அறியாமையிலிருக்கிறோம், நம்முடைய புத்தி மந்தமாயிருக்கிறது. உலகப்பிரகாரமான உபத்திரவங்களிலிருந்து நிவாரணம் கேட்பவர்களில், பலருடைய விண்ணப்பங்களை தேவன் ‘பெரும் அலறல்’ என்றழைக்கிறார், ‘தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை’ (ஓசி 7:14) என்கிறார். ‘மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?’ (பிர 6:12). தேவனுடைய சிந்தைக்கேற்ற விதமாக ஜெபம்பண்ணத்தக்கதாக நம்முடைய உலகப்பிரகாரமான ‘தேவையை’ நமக்குத் தெரிவிக்க பரலோக ஞானம் தேவைப்படுகிறது.
இப்பொழுது சொல்லப்பட்டிருக்கிறவைகளுடன் இன்னும் சில வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டியதாயிருக்கிறது. பின்வரும் மூன்றடுக்கு விதிகளுக்குட்பட்டு, உலகப்பிரகாரமானத் தேவைகள் (மத் 6:11) ஆவிக்குறியப்பிரகாரமாக ஜெபிக்கப்படலாம். முதலாவதாக, கிறிஸ்தவர்கள் இத்தேவைகளைக்குறித்து முதன்மையாக கவலைப்படுகிறவர்களில்லையாதலால் (மத் 6:33) அவைகளை முதன்மைப்படுத்தாமல் எதேச்சையாகக் கேட்கலாம். உலகத்தின் காரியங்களைவிட உன்னதமான முக்கியத்துவம்வாய்ந்ததாகவும் மதிப்புமிக்கதாகவும் இருப்பதால், பரலோகத்திற்குறிய நித்தியமானவைகளே (கொலோ 3:1) முதலாவதாகவும் முக்கியமாகவும் நாடப்பட வேண்டும். இரண்டாவதாக, மிகக்குறைந்த முக்கியத்துவத்துடன் முடிவிலே கேட்கலாம். தேவனிடத்திலிருந்து உலகப்பொருள்களைக் கேட்கும்பொழுது, நம்மைத் திருப்திபடுத்திக்கொள்ளும்விதமாக அல்ல, மாறாக, இன்னும் அதிகமாக அவரை மகிழ்விக்க உதவியாக இருக்குபடியாக. மூன்றாவதாக, அது யூகத்தின் பாவமாயிருக்கலாமாகையால் அதிகாரத்தோரனையுடன் அல்ல, கீழ்ப்படிதலுடன் கேட்க வேண்டும். மேலும், உலகப்பிரகாரமான இரக்கம் உண்மையாகவே உன்னத நன்மைக்குப் பங்களிக்குமா என்பது நமக்குத் தெரியாது (சங் 106:18), ஆகவே தேவன் அதைத் தீர்மானிக்கும்படி அவரிடம் விட்டுவிட வேண்டும்.
நமக்கு உள்ளார்ந்த தேவைகளும் உண்டு வெளிப்பிரகாரமானத் தேவைகளும் உண்டு. நியாயப்பிரமானத்தின் வெளிப்படையானத்தன்மை மற்றும் வெளிச்சத்தில் அவைகளில் குற்றம் மற்றும் தீட்டான பாவம் போன்ற சிலவற்றை நமது மனதின் வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடியும். இருந்தபோதிலும், நம்முடைய அறிவின் மூலம் நமக்கு நாமே கொண்டிருக்கிற மன உணர்வானது மிகவும் இருளானது மற்றும் குழப்பமடைந்தது, ஆவியினாலன்றி, உண்மையான சுத்திகரிப்பின் ஊற்றை நாம் கண்டுபிடிக்க முடியாது. விசுவாசிகள் தங்கள் விண்ணப்பங்களில் தேவனிடத்தில் முதலாவது உள்ளான காரியங்கள் மற்றும் தங்கள் ஆத்துமாவின் ஆவிக்குறிய குணநலன்களைக் கேட்க வேண்டும். ஆகவே, தாவீது தன்னுடைய உண்மையான பாவத்தையும் தனக்குத் தெரிந்த மீறுதல்களையும் அறிக்கைசெய்ததோடு திருப்தியடைந்து விடவில்லை (சங் 51:1-5), ஒருவனும் தன்னுடைய தப்பிதங்களை உணர்ந்துகொள்ள முடியாது என்ற ஏற்றுக்கொள்ளுதலுடன் அல்ல, ‘மறைவான குற்றங்களிலிருந்தும்’ (சங் 19:12) அவன் கழுவப்பட விரும்பினான்; தேவன் முதலாவதாக ‘உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறார்’ (சங் 51:6) என்பதை அறிந்தவனாய், வேதனை உண்டாக்கும் வழி தன்னிடத்தில் உண்டோ என்று அறிய, தன்னுடைய இருதயத்தை தேவன் ஆராய்ந்து அறியும்படியும் அவரை வேண்டிக்கொண்டான் (சங் 139:23). ஆகவே, 1கொரிந்தியர் 2:10-12 வசனங்களின் அடிப்படையில் தேவன் ஏற்றுக்கொள்ளும்விதத்தில் ஜெபம்செய்ய, நாம் நிச்சயமாக ஆவியானவரின் உதவியை நாட வேண்டும்.
ஜெபத்திற்கான விதிகளை ஏற்படுத்தியிருக்கும் தேவன், குறைந்தது மூன்று அம்சங்களை அதில் வடிவமைத்திருக்கிறார். முதலாவதாக, ஜெபமானது ஆராதனையாக இருப்பதால், எல்லாவற்றையும் கொடுக்கும் பிதாவானவர், அவரை அண்டிச் சேர்வதற்கு ஏற்றவிதமாக, குமாரனுடைய நாமம், உந்தித்தள்ளி வழிநடத்தும் வல்லமையான ஆவியானவராகிய உன்னதமான திரித்துவ தேவன் மதிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய எல்லாவற்றிற்காகவும், நாம் அவருடைய அன்பிலே வேண்டி நிற்கிறவர்களானபடியால், நம்முடைய இருதயத்தைத் தாழ்த்தி, நம்மை அவரிடத்தில் சார்ந்துகொள்ளும்விதமாக, நம்முடைய உதவியற்றதன்மையை நமக்கு உணர்த்தி, தேவனில்லாமல் நாம் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ளும்விதமாக ஜெபமானது அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறது. ஆனால் ஆவியானவர் நம்முடைய கையைப்பிடித்து, பெருமையை நம்மைவிட்டு விலக்கி, நம்முடைய இருதயத்திலும் நினைவுகளிலும் தேவனுக்கு அவருடைய உண்மையான இடத்தை கொடுக்கச் செய்யும்வரை இந்த உண்மை நம்மால் எவ்வளவு குறைவாக உணர்ந்து கொள்ளப்படுகிறது! மூன்றாவதாக, நமக்கென்று நாம் கேட்கும் நல்ல காரியங்களைப் பெற்றுக்கொள்ளும்விதமாக நடத்துகிறார்.
நம்முடைய ஜெபங்களுக்கு பதில் வராததிற்கு மிக முக்கியமான காரணம், நாம் தவறான, அற்பமான முடிவைக்கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் பயப்படத்தக்கது. நம்முடைய இரட்சகர் சொன்னார், ‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்’ (மத் 7:7) என்று; ஆனால் யாக்கோபு மேலும் சிலவற்றை உறுதிபடுத்துகிறார், ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்ற செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்’ (யாக் 4:3). நாம் எதற்காகவாவது ஜெபிக்கும்பொழுது, தேவன் வடிவமைத்திருக்கும் நோக்கத்தை நோக்கி அது இல்லாமல் இருக்கும்பொழுது, நாம் தகாதவிதமாய்க் கேட்கிறோம், அதிலே எந்த நோக்கமும் இல்லை. நம்முடைய சொந்த ஞானத்திலும் நன்னடத்தையிலும் பெரிய அளவிற்கு நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், நாம் நம்முடைய சொந்த சித்தத்திற்கு விட்டுக்கொடுத்தோமானால் அது ஒருபோதும் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதாயிருக்காது. ஆவியானவர் நம்மில் இருக்கும் மாம்சத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், நம்முடைய சொந்த இயற்கையான வலிமையற்ற உணர்வுகள் நம்முடைய விண்ணப்பங்களில் ஒன்றுடன் ஒன்று கலந்து, எல்லாவற்றையும் விருதாவாக்கிவிடுகிறது. ‘எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்’ (1கொரி 10:31), இன்னும் தேவனுடைய மகிமைக்கென்று நம்முடைய விருப்பங்களைக் கீழ்ப்படுத்துவது, ஆவியானவரைத்தவிர வேறு எதுவும் நம்மில் செய்யமுடியாது.
ஜெபம் கண்டிப்பாக விசுவாசத்தில் இருக்க வேண்டும் (ரோம 10:14), இல்லாவிட்டால் தேவன் அதைக்கேட்க மாட்டார். இப்பொழுது விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கிறது (எபி 4:1; ரோம 4:21); ஆகையால், தேவன் நமக்கு கொடுப்பேன் என்று உறுதியளித்திருக்கிறதை நாம் அறிந்திருக்காவிட்டால், நாம் ஜெபம்பண்ணவே முடியாது. நம்முடைய ஜெபமானது தேவனுடைய வாக்குத்தத்தங்களிலேயே இருக்கிறது, நாம் ஜெபிக்கும் அளவை அவை வரையறுக்கிறது. தேவன் எதை வாக்குப்பண்ணியிருக்கிறாரோ, அந்த வாக்குத்தத்தத்திற்காகவே நாம் ஜெபம்பண்ண வேண்டும், வேறு எதற்கும் அல்ல. ‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்’ (உபா 29:29), ஆனால் அவருடைய சித்தத்தின் அறிவிப்பும், கிருபையின் வெளிப்பாடும் நமக்கு சொந்தமானவைகள், நம்மை ஆளுகைசெய்ய வேண்டியவைகள். உண்மையாகவே நாம் எதைக்குறித்தும் தேவையோடிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், தேவன் சில வரம்புகளுக்குட்பட்டு அந்த வழிகளில் நமக்கு நல்லவற்றை உபயோகமானவற்றைத் தருவேன் என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். தேவன் நமக்கு இந்த உலத்திற்குத் தேவையானவைகளையும் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபைக்குத் தேவையானவைகளையும் கூட வாக்குப்பண்ணியிருக்கிறார். எனவே, தெய்வீக வாக்குத்தத்தங்களுடன் எந்த அளவிற்கு நாம் பரீட்சயமாகியிருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் நன்மையானதைப் புரிந்துகொள்கிறோம், கிருபையும் இரக்கமும் ஆயத்தமாக்கப்பட்டு அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது, மேலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஜெபத்திற்காக நாம் நன்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
தேவனுடைய வாக்குத்தத்தங்களில் சில பொதுவானவைகள், குறிப்பானவைகளல்ல; சில நிபந்தனைக்குட்பட்டவைகள்; மற்றவை நிபந்தனையில்லாதவை; சில இந்த வாழ்க்கையில் நிறைவேற்றப்படுகிறது, மற்றவை வருகிற உலகத்திற்கானவை. நம்முடைய குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கோ அல்லது அவசரத்தேவைகளுக்கோ அல்லது நம்முடைய விசுவாசத்திற்கு ஏற்றவிதமாக தேவனிடத்தில் கேட்பதற்கு எந்த வாக்குத்தத்தம் மிகவும் பொருத்தமானது என்று நாம் நாமாகவே நிதானிக்கமுடியாது. ஆகவே, நமக்கு வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது, ‘மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குறியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குறியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படும் ஆவியையே பெற்றோம்’ (1கொரி 2:11,12). ஏற்றுக்கொள்ளக் கூடிய ஜெபத்திற்கு இத்தனை அதிகமானவைகள் தேவைப்படுமென்றால், நீங்கள் குறிப்பிடுவதைப்போல் எந்தக்கடினமும் இல்லாமல் தேவனிடத்தில் சரியாக விண்ணப்பம்செய்ய முடியாதென்றால், குறைவான எண்ணிக்கையில் கூட எவரும் இந்தப்பணியில் தொடரமுடியாது என்று எவரேனும் சொல்வாரென்றால், அந்த பொருளுடையவர்க்கு ஜெபிப்பதென்றால் என்னவென்று தெரியவுமில்லை, அதைக் கற்றுக்கொள்ளவும் அவருக்கு விருப்பமுமில்லை என்று நாங்கள் பதிலுரைக்கிறோம்.
மேலே குறிப்பிட்டதுபோல, ஜெபத்தைக் கட்டளையாகக் கொடுத்ததில் தெய்வீக வடிவமைப்புகளில் ஒன்று, நாம் நம்மை தாழ்த்த வேண்டும் என்பதே. தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிடும்பொழுது இது வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. ஜெபமானது நம்முடைய ஒன்றுமில்லாத்தன்மையை ஏற்றுக்கொண்டு, நமக்கு எல்லா உதவிகளையும் செய்கிற அவரை நோக்கிப்பார்ப்பதே. நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திப்பதற்கு அவருடைய போதுமானத்தன்மையை சொந்தம் கொண்டாடுவதாகும். இது நம்முடைய ‘விண்ணப்பங்களை’ (பிலி 4:6) தேவனுக்குத் தெரியப்படுத்துவதாகும்; ஆனால் விண்ணப்பங்கள் அவரிடமிருந்து அதிகாரமாகக் கேட்பதிலிருந்து வித்தியாசமானது. ‘கிருபையின் ஆசனம் என்பது ஏதோ தேவனுக்கு முன்னால் வந்து நம்முடைய விருப்பங்களை கொட்டும் இடமல்ல’ (குர்னால்). நாம் தேவனுக்கு முன்னால் நம்முடைய நிலையை விரித்துக்காட்ட வேண்டியவர்களாயிருக்கிறோம், ஆனால் அது அவருடைய உயர்ந்த ஞானத்தினாலே தீர்மானிக்கப்பட விட்டுவிடப்பட வேண்டும். அவருடைய இரக்கத்தைச்சார்ந்து நாம் வேண்டி நிற்கிறவர்களானபடியால், தேவனிடத்தில் உத்தரவிடவோ அல்லது அதிகாரமாகக் கேட்கவோ அங்கே இடமில்லை. நம்முடைய எல்லா ஜெபங்களிலும் நாம் இதை சொல்ல வேண்டும், ஆயினும் என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின் படி ஆகக்கடவது.
விசுவாசமானது தேவனுடைய வாக்குத்தத்தங்களில் மன்றாடி ஒரு பதிலை எதிர்பார்க்கக்கூடாதா? நிச்சயமாக; ஆனால், அது தேவனுடைய பதிலாக இருக்க வேண்டும். தன்னுடைய மாம்சத்திலிருந்த முள்ளை அகற்றும்படியாக பவுல் மூன்றுமுறை தேவனை வேண்டிக்கொண்டார்; ஆனால் அதை நீக்குவதற்குபதிலாக, தேவன் அதைத் தாங்கிகொள்ளத்தக்கதான கிருபையை அவருக்குக் கொடுத்தார் (2கொரி 12). பெரும்பாலான தேவனுடைய வாக்குத்தத்தங்கள் பலதரப்பட்டவை, தனிப்பட்டதல்ல. தன்னுடைய திருச்சபை போதகர்களுக்கு, மேய்ப்பர்களுக்கு, சுவிசேஷகர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார், ஆனாலும் அவருடைய பல பரிசுத்த கூட்டத்தார் அவைகளைப் பெற்றுக்கொள்ளாமல் கடினமான பாதையில் நடந்திருக்கிறார்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்களில் சில முடிவில்லாதவை மற்றும் பொதுவானவை, உதாரணமாக எபேசியர் 6:2,3. நாம் விசுவாசத்தினாலே கேட்டாலும், நாம் கேட்கும் குறிப்பிட்ட காரியத்தை அந்த வகைக்குட்பட்டே கொடுக்க தேவன் நமக்குக் கடமைப்பட்டவரல்ல. மேலும், அவருடைய இரக்கங்களைக் கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தையும் காலத்தையும் தீர்மானிப்பதற்கான உரிமையை அவர் தன்னிடத்தில் வைத்திருக்கிறார். ‘கர்த்தரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்’ (செப் 2:3). ஒருவேளை சில உலகபிரகாரமான இரக்கங்களை எனக்குக் கொடுப்பது தேவனுடைய சித்தமாய் இருக்கலாம், ஆனாலும் அவருடைய அந்த நல்ல மகிழ்ச்சியின் செய்கைக்காக முழுக் கீழ்ப்படிதலுடன் என்னை அவர்மீது ஊற்றி அதற்காக ஜெபிப்பது எனது கடமையாயிருக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் வெறும் ‘ஜெபத்தை சொல்வது’ என்பது ஒரு எரிச்சலூட்டும் செயல், அது செய்து முடிக்கப்பட்டவுடன் ஒரு நிவாரணத்தைத் தருவதால் அது ஒரு கடமையாகிறது. ஆனால் உண்மையான தேவனுடைய பிரசன்னத்திற்கு வருவதென்பது, அவருடைய மகிமையான வெளிச்சத்தின் சாயலைக் காண்பதென்பது, அவருடைய கிருபையின் ஆசனத்தின் பங்குபெறுவதென்பது, நமக்காக பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிற அந்த விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை முன்னரே சுவைத்துப்பார்ப்பதாகும். இந்த அனுபவத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவன் சங்கீதக்காரனுடன்சேர்ந்து, ‘தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்’ (சங் 73:28) என்று அவனும் சொல்லுவான். ஆம், அமைதிப்படுத்துவதால் இது இருதயத்திற்கு நல்லது; பலப்படுத்துவதால் விசுவாசத்திற்கு நல்லது; ஆசீர்வதிக்கப்படுவதால் ஆத்துமாவிற்கு நல்லது. ஆத்துமாவிற்கு இப்படிப்பட்ட ஐக்கியம் தேவனுடன் இல்லாமல் இருப்பதே நம்முடைய பதில்வராத ஜெபங்களுக்கு மூலக்காரணம்: ‘கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்’ (சங் 37:4).
ஆவியானவரின் ஆசீர்வாதத்தின் கீழ், ஜெபத்திலே இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி அதை அதிகரிக்கச் செய்வது எது? முதலாவதாக, தேவனே ஜெபத்தின் மையப்பொருளாக இருதயத்தில் மகிழ்ச்சியடைதல் மற்றும் குறிப்பாக தேவனை நம்முடைய பிதாவாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளுதல். ஆகவே, சீஷர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஜெபிக்கக் கற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டபொழுது, அவர் சொன்னார், ‘நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே’. மேலும், ‘அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தம்முடைய குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்’ (கலா 4:6), பிள்ளைகள் பெற்றோரை பாசத்துடன் அழைப்பதுபோல், இதுவும் புத்திரசுவிகாரத்தில் தேவனில் பரிசுத்த மகிழ்ச்சி. ஆதலால் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்காகவும், இருதய ஆறுதலுக்காகவும், மறுபடியும், எபேசியர் 2:18ல் ‘அந்தபடியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்’ என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நம்முடைய பிதாவைக் கிட்டிச் சேருகிறோம் என்பது நம்முடைய ஆத்துமாவுக்கு என்ன ஒரு சமாதானத்தை, ஒரு நிச்சயத்தை, ஒரு சுதந்தரத்தைக் கொடுக்கிறது!
இரண்டாவதாக, ஜெபத்தின் மகிழ்ச்சியானது இருதயத்தின் பயத்தினாலும், தேவனை கிருபையின் ஆசனத்தின் மீது ஆத்துமா காண்பதினாலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது – காணுதலோ அல்லது எதிர்பார்ப்போ, அது மாம்சபிரகாரமான கற்பனையல்ல, அது ஆவிக்குறிய வெளிச்சம், நாம் விசுவாசத்தினாலே ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறோம்’ (எபி 11:27); விசுவாசமானது ‘காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது’ (எபி 11:1). தேவனை அத்தகைய ‘சிம்மாசனத்தின்’ மீது பார்ப்பது உன்னதமான மகிழ்சியைத் தருகிறது. ஆதலால், ‘நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேர’ (எபி 4:16) நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம்.
மூன்றாவதாக, இறுதியாகக் குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து, இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் தன்னிடத்தில் கேட்கும் பாவிகளுக்கு இரக்கத்தையும் கிருபையையும் கொடுக்க ஆவலாயிருக்கிறார் என்ற உணர்வை மனதிலே பெற்றுக்கொள்ளும்பொழுது ஜெபத்தில் விடுதலையும் மகிழ்ச்சியும் நம்மில் அதிகரிக்கிறது. இதற்காக நாம் கடந்து வர வேண்டிய அளவுக்கு அவரிடம் எந்த தயக்கமும் இல்லை. ஆகவே தான் ஏசாயா 30:18ல் ‘உங்களுக்கு இறங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்; அவருக்கு காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆம், தேடப்படும்படிக்கு அவர் காத்திருக்கிறார்; ஆசீர்வதிக்கும்படிக்கு விசுவாசமானது அவருடைய ஆயத்தத்தைப்பற்றி பிடிக்கும்படிக்கு காத்திருக்கிறார். நீதிமான்களுடைய கூப்பிடுதலுக்கு அவருடைய செவிகள் எப்பொழுதும் திறந்திருக்கிறது. அதன்பிறகு நாம், ‘உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் அவரிடத்தில் சேரக்கடவோம்’ (எபி 10:22); ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள், அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ (பிலி 4:6,7)