பவுல் அத்தேனே பட்டணத்தில் என்ன செய்தார் என்பதை கவனிக்கும்படி என்னுடைய வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
அவர் என்ன பார்த்தார் என்பதைக் கேட்டிருக்கிறீர்கள்; அவர் என்ன உணர்ந்தார் என்பது உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது; அவர் எப்படி செயல்பட்டார்?
அவர் சில காரியங்களை செய்தார். முழுவதும் விக்கிரகங்களால் நிறைந்திருந்த பட்டணத்தின் முன் “மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடிக்கொண்டு” வெறுமையாக நிற்கும் மனிதரல்ல அவர். நான் தனியாக நிற்கிறேன், நான் பிறப்பிலே யூதன், அந்நிய தேசத்திலே நான் ஒரு அந்நியன், கற்றறிந்த மனிதரின் கூட்டமைப்பையும் ஆழமான வேர்கொண்டிருக்கும் சமயத்திற்கு எதிரானவர்களையும் தான் எதிர்க்க வேண்டும், முழு நகரத்தின் பழைமையான சமயத்தை தாக்குதல் என்பது சிங்கத்தை அதின் குகையில் சந்திப்பதற்கு சமம், கிரேக்கத் தத்துவத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் நற்செய்தியால எந்தவகையிலும் பாதிக்கப்படாது போன்ற எண்ணங்களால் அவர் தனக்குள்ளாகவே போராடிக்கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் அவைகளில் ஒன்றும் பவுலின் மனதை கட்டுப்படுத்தவில்லை. அவர் ஆத்துமாக்கள் அழிவதைப் பார்த்தார்; வாழ்க்கை குறுகியது, காலம் கடந்துபோகிறது என்பதைப் பார்த்தார்; ஒவ்வொரு மனிதரின் ஆத்துமாவையும் சந்திக்க தனது எஜமானின் செய்தியின் வல்லமையில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார்; அவர் கிருபையைப் பெற்றிருந்தார், அதை அடக்கிவைக்க அவருக்குத் தெரியவில்லை. அவர் கரங்களால் என்ன செய்ய முடியுமோ அதை வல்லமையாக செய்தது முடித்தார். இந்நாட்களில் இப்படிப்பட்ட செயல்படும் மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அவர் என்ன செய்தாரோ அதை பரிசுத்த ஞானத்துடனும் வல்லமையுடனும் செய்தார். உதவிக்காகவும் உடன் ஊழியருக்காகவும் காத்திருக்காமல், இந்த கடினமான வேலையைத் தானே தனியாக ஆரம்பித்தார். ஒரு தனித் திறமையுடனும், நற்செய்தி அங்கே கால்பதிக்கும் விதத்திலேயும் அதை ஆரம்பித்தார். முதலில் ஜெப ஆலயத்திலுள்ள யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும் அவர் சம்பாஷனை பண்ணினார் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் அவர் சம்பாஷனைபண்ணினார். மிகவும் அனுபவசாலியைப்போல படிப்படியாக அவர் முன்னேறினார். உறுதியான வைராக்கியத்தையும் வலிமையையும் ஒன்றிணைத்தவராய் – பேச்சுத் திறமையுடன் பொது அறிவையும் இணைத்து, முன்னர் பார்த்தது போல, இங்கும் பவுல் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்நாட்களில் இப்படிப்பட்ட ஞானமுள்ள மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அப்போஸ்தலனாகிய பவுல் எதை போதித்தார்? யூதர்களிடத்திலும் கிரேக்கர்களிடத்திலும், ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் அவர் வழக்காடின, வாதம் செய்த, விவாதித்த கருத்தின் மையம் எது? அறியாமையிலிருந்த திரளானவர்களுக்கு விக்கிரக ஆராதனையின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினார் – கைகளால் செய்யப்பட்ட சொரூபங்களை வணங்கினவர்களுக்கு உண்மையான தேவனின் தன்மையை அவர்களுக்கு விளக்கிக்காட்டினார் – தேவன் நமக்கு சமீபமாயிருக்கிறார் என்பதை உரக்கக் கூறி, நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவனுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை எப்பிக்கூரியர்களுக்கும் ஸ்தோயிக்கர்களுக்கும் உறுதிபடக் கூறினார் – மார்ஸ் மேடையில் பவுல் நிகழ்த்திய உரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள உண்மைகள் இவைகளே.
விக்கிரக ஆராதனையின் நகரத்தில், அப்போஸ்தலனின் செயல்பாடுகளிலிருந்து நாம் மேலும் அறிந்துக்கொள்ள வேண்டியவைகள் உண்டா? அத்தேனேயில் பவுல் முன்னிலைப்படுத்திய கிறிஸ்தவத்திற்கே உரிதான வேறுஎதும் முக்கியமானது உண்டா? உண்மையாகவே நாம் அறிந்துக்கொள்ள வேண்டியவை இன்னும் அதிகம் உண்டு. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் 18ம் வசனத்திலே, பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய வாக்கியம் ஒன்று உண்டு – உன்னதமான புறஜாதியாரின் அப்போஸ்தலன் இயற்கை தெய்வங்களைக் குறித்து பேசுகிறார் என்று சிலர் கூறத் துணிந்தபோது, அந்த ஆதாரமில்லாத பேச்சை அந்த வாக்கியம் அடைத்தது! பவுல் இயேசு கிறிஸ்துவையும் உயிர்த்தெழுதலையும் குறித்துப்பேசினது, அத்தேனியர்களின் கவனத்தை ஈர்த்தது என்று 18-ம் வசனத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்! அந்த வாக்கியம் எத்தனை ஆழமான கருத்தை உள்ளடக்கியிருக்கிறது! இந்த வாக்கியத்திலிருந்து எத்தனை அருமையாக கிறிஸ்தவ விசுவாசத்தின் முழுமையான சாரம்சத்தை வெளிக்கொணர முடியும்! அது கிறிஸ்தவ விசுவாசத்தின் சாரம்சமே, எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதன் அர்தத்தை மாற்றி, மட்டுப்படுத்தி, அது கிறிஸ்துவின் மாதிரி மற்றும் தீர்க்க தரிசன நிறைவேறுதல் மட்டுமே என்று விளக்கமளிப்பவர்களைப் பார்த்து நான் பரிதாப்படுகிறேன். “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து” அல்லது சிலுவையின் உபதேசத்தை சில நாட்களுக்குப் பின்பு கொரிந்து பட்டணத்தில் பிரசங்கித்த இதே அப்போஸ்தலனாகிய பவுல், சிலுவையை அத்தேனியர்களின் காதுகளுக்கு விலக்கி வைத்திருந்தால் அது நம்ப முடியாததாகும். “இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்” என்ற வாக்கியம் முழு நற்செய்தியையும் குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். நற்செய்தியை ஸ்தாபித்தவரின் பெயரும், அதன் அடிப்படை உண்மைகளில் ஒன்றும் (உயிர்த்தெழுதல்), முழு கிறிஸ்தவத்தின் உண்மையாக நம்முன் நிற்கிறது.
இந்த வாக்கியம் எதை அர்த்தப்படுத்துகிறது? பவுல் பிரசங்கித்தவைகளிலிருந்து நாம் எதை புரிந்துக்கொள்ள வேண்டும்?
(அ) கர்த்தராகிய இயேசு என்னும் நபரை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – அவருடைய தெய்வத்துவம், மானுடப்பிறவி, இந்த உலகத்தில் அவருடைய ஊழியமான பாவிகளை இரட்சித்தல், அவருடைய வாழ்க்கை மற்றும் மரணம், அவருடைய பரமேருதல், அவருடைய குணாதிசயங்கள், போதனைகள், மனிதரின் ஆத்துமாக்களின் மீது அவர் கொண்டிருந்த அன்பு.
(ஆ) கர்த்தராகிய இயேசுவின் செயல்களை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் - சிலுவையில் அவருடைய பலி, அனைத்து மனிதருக்குமான பாவ நிவிர்த்தி, அநீதருக்காய் நீதிபரராகிய அவருடைய பதிலீடு, எல்லாருக்காகவும் அவர் கிரயம் செலுத்தி வாங்கின இரட்சிப்பு, அவரை விசுவாசிப்பவர்களுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள பாவம், மரணம், நரகத்தின் மீது வெற்றி.
(இ) கர்த்தராகிய இயேசுவின் பணிகளை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – மனுகுலத்திற்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக, பாவ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு உன்னத மருத்துவராக, மனபாரமுள்ளவர்களுக்கு சமாதானத்தையும் விடுதலையையும் அளிப்பவராக, சிநேகிதரில்லாதவர்களுக்கு சிநேகிதராக, தங்களுடைய ஆத்துமாக்களை அவருடைய கையில் கொடுப்பவர்களுக்கு பிரதான ஆசாரியராகவும் பரிந்துபேசுபவராகவும், சிறைப்பட்டவர்களுக்கு பதிலீடாகவும், தேவனைவிட்டு அலைந்து திரிபவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.
(ஈ) கர்த்தராகிய இயேசு தன்னுடைய வேலையாட்கள் உலகெங்கிலும் சென்று பிரசங்கிக்க சொன்ன செய்தியை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – பாவிகளில் பிரதான பாவியை ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாயும் ஆர்வமாயும் இருக்கிறார்; அவராலே தேவனித்தில் சேரும்படி வருகிற எல்லாரையும் இரட்சிக்க அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்; அவரை விசுவாசிக்கும் எல்லாருக்கும் முழுமையான, உடனடியான பாவ மன்னிப்பை அவர் கொடுக்கிறார்; எல்லாவகையான பாவங்களிலிருந்தும் அவருடைய இரத்தம் முழுமையாக கழுவுகிறது; விசுவாசமே, தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குத் தேவையான ஒன்று; கிரியைகள் அல்லது செயல்கள் மூலமல்ல, விசுவாசத்தின்மூலமே முழுவதும் நீதிமானாக்கப்படுவார்கள்.
(உ) கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – அவருடைய ஊழிய அதிகாரத்தின் முழு பங்கும் அவரிடத்திலேயே இருந்த அதிசய உண்மையை அவர் பிரசங்கித்தார், எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், எந்த வகையிலும் குற்றம் காணாதபடி மிக அதிகமான ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்ட உண்மையை அவர் பிரசங்கித்தார். முழு மீட்பின் பணியின் முதற்கல், கிறிஸ்து எடுத்துக்கொண்ட பணியை முழுவதுமாக முடித்தார், பதிலீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது, பாவ மீட்பு முடிவடைந்துவிட்டது, சிறைக்கதவுகள் நித்திய காலத்திற்கும் திறக்கப்பட்டது என்ற உண்மைகளை அவர் பிரசங்கித்தார். மாம்சத்தில் நம்முடைய உயிர்த்தெழுதலின் சாத்தியத்தையும் நிச்சயத்தையும் சந்தேகமின்றி நிரூபித்து, தேவன் மரித்தோரை உயிரோடெழுப்ப முடியுமா? என்ற மாபெரும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவைகளையும், பவுல் அத்தேனேயில் பிரசங்கித்த மற்ற செய்திகளையும் நான் சந்தேகப்பட இயலாது. கனப்பொழுதும் நான் சந்தேகப்பட இயலாது, ஏனெனில் ஒரு இடத்தில் ஒரு செய்தியையும் மற்றொரு இடத்தில் வேறொரு செய்தியையும் பவுல் பிரசங்கிக்கவில்லை. “இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்” என்ற அவருடைய வல்லமையான செய்தியின் சாரம்சங்களை பரிசுத்த ஆவியானவரே பவுலுக்கு கொடுத்தார். அந்தியோகியாவிலும், பிசிடியாவிலும், பிலிப்பியிலும், எபேசுவிலும் பவுல் இந்த காரியங்களை எப்படி கையாண்டார் என்பதை அதே பரிசுத்த ஆவியானவர் முழுவதுமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போஸ்தல நடபடிகளும், நிரூபங்களும் இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன. “இயேசு மற்றும் உயிர்த்தெழுதலை” நான் விசுவாசிக்கிறேன், இதன் பொருள் – இயேசு அவருடைய மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும், அவருடைய அபிஷேகிக்கும் இரத்தம், அவருடைய சிலுவை, அவருடைய பதிலீடு, அவருடைய மத்தியஸ்ததுவம், பரலோகத்தில் அவருடைய வெற்றிப் பிரவேசம், அதன் விளைவாக அவரை விசுவாசிக்கும் பாவிகளுக்கு முழு இரட்சிப்பு என்பதாகும். பவுல் போதித்து சத்தியம் இதுவே. பவுல் அத்தேனேயில் இருந்த பொழுது செய்த வேலையும் இதுவே.