இரண்டாவதாக அத்தேனே பட்டணத்தில் பவுல் எதை உணர்ந்தார் என்பதை கவனியுங்கள்.
“பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருப்பதைக்” கண்டார். அந்த காட்சி அவரை எப்படி பாதித்தது? அவர் எப்படி உணர்ந்தார்?
ஒரே காட்சி வெவ்வேறு விதங்களில் எப்படி பலரை பாதிக்கிறது என்பது முக்கியமானது. இரு மனிதர்களை ஒரே இடத்தில் நிறுத்துங்கள்; இருவரும் பக்கம் பக்கமாக நிற்கட்டும்; ஒரே பொருள் அவர்கள் இருவருக்கும் காண்பிக்கப்படட்டும். ஒருவரிலிருந்து வெளிவரும் உணர்ச்சிகள், மற்றொருவரிலிருந்து வெளிவரும் உணர்ச்சிகளுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கும். இருவரிலிருந்தும் பிறக்கும் நினைவுகள் எதிரெதிர் தூண்களாக நிற்கும்.
அத்தேனே பட்டணத்தை முதல்முறையாக பார்க்கும் ஒரு கட்டிடக் கலைஞன் சந்தேகமே இல்லாமல் அதன் அழகில் மூழ்கிவிடுவான். ஒரு அரசியல் தலைவர் அல்லது சொற்பொழிவாளர் பெரிகிளையோ (Pericles) அல்லது தீமோதென்ஸையோ (Demosthenes) நினைவு கூர்ந்திருப்பார். ஒரு கல்வியாளர் துசிடிடெஸையோ (Thucydides) சோபோகிளஸையோ (Sophocles) பிளாட்டோவையோ நினைவு கூர்ந்திருப்பார். ஒரு வியாபாரி அதன் துரைமுக நகராகிய பிரேயுவையும் கடலையும் கண்டு வியந்திருப்பார். ஆனால் கிறிஸ்துவின் அப்போஸ்தலன் இதைவிட உன்னதமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட ஒரு காரியம் அவரது கவனத்தை ஈர்த்தது, மற்றவையெல்லாம் அவரது கண்களுக்கு சிறிதாகத் தெரிந்தன. அத்தேனே பட்டணத்தாரின் ஆவிக்குறிய நிலைமையும், அவர்களது ஆத்துமாவின் நிலைமையுமே அந்த காரியம். புறஜாதியாரின் அந்த உன்னத அப்போஸ்தலன், அந்த ஒரு காரியத்தைக் குறித்து கரிசனைக் கொண்டவனாயிருந்தான். அவரது தெய்வீக எஜமானைப்போல அவரும் எப்பொழுதும் “பிதாவுக்கடுத்தவைகளையே” (லூக் 2:49) சிந்தித்துக்கொண்டிருந்தார். அத்தேனே பட்டணத்தில் நின்று, அத்தேனியர்களின் ஆத்துமாவைத்தவிர வேறொன்றையும் அவர் நினைக்கவில்லை. மோசே, பினேகாஸ், எலியா என்பவர்களைப்போல, “பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனைக்குள் இருப்பதைக் கண்டு அவருடைய இருதயம் அவருக்குள் கலங்கிற்று”.
பூமியிலுள்ள காட்சிகளிலெல்லாம், அந்த உன்னத பட்டணத்தின் காட்சியைப்போல, எதிரொளிக்கும் மனதைக் கவரக்கூடிய, நுண்ணிய காட்சிகள் எங்குமில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் அல்லது ஒதுக்குப்புறமாக வசிப்பவர்கள் புரிந்துக்கொள்ள முடியாத வகையில், அந்த பட்டணத்திலுள்ள அனுதின சம்பாஷனைகள் அறிவைக் கூர்மையாக்குவதாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் இருந்தன. சரியோ தவறோ, அந்த பட்டணத்தில் வசிப்பவர், ஒரு கிராமத்தில் வசிப்பவரை விட இருமடங்கு அதிகமாகவும் வேகமாகவும் சிந்தித்தார்.
“சாத்தானுடைய சிங்காசனம்” (வெளி 2:13) அந்தப் பட்டணத்தில் இருந்தது. அந்தப் பட்டணத்தில் எல்லாவித தீமைகளும் சிந்திக்கப்பட்டு, விதைக்கப்பட்டு, கனிந்து முதிர்ச்சியடைந்தது. அந்தப் பட்டணத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்று வாழ்க்கையை துவங்குகிற ஒரு இளைஞன், அனுதின நிகழ்வுகளாகிய பாவத்தின் காட்சிகளினால், விரைவில் கடினப்பட்டு சிந்தனையில் வீணரானான். அந்தப் பட்டணத்தில் மாம்ச இச்சைகளும், குடிவெறியும், உலகின் மிக மோசமான களியாட்டுகள் உச்ச கட்டத்திலேயும், அவைகளுக்கு சாதமான சூழ்நிலையும் நிலவின. அந்தப் பட்டணத்தில் தேவனற்ற தன்மையும், சமயமற்ற தன்மையும் ஒன்றையொன்று உற்சாகமாக சந்தித்துக்கொண்டன, கிருபையை உதாசீனப்படுத்தி, மகிழ்ச்சியற்ற ஓய்வு நாள் கட்டளையை மீறுபவர், மற்றவர்களுடைய முன்மாதிரியினால் தன்னைக் மறைத்துக்கொண்டு, “நான் தனியாக இல்லை” என்ற பரிதாபமான உணர்வினால் தன்னைத் தேற்றிக்கொண்டான். அந்தப் பட்டணம், எல்லாவிதமான மூட நம்பிக்கைக்கும், சம்பிரதாயத்துக்கும், உற்சாகத்திற்கும், வீண் சிந்தனைக்கும் இடமளித்தது. ஸ்தோயிக்கம், எப்பிக்கூரியம், அறிவியலாமையம், சமய சார்பின்மை, ஐயுறவியல், நேர்மறை சிந்தனை, விபச்சாரம், நாத்தீகம் போன்ற எல்லாவித தவறான தத்துவங்களின் பட்டணமாயிருந்தது. உன்னதமான புதிய கண்டுபிடிப்புகள், அச்சு இயந்திரங்கள், நன்மை தீமைக்கான உன்னத சக்திகள், புதிய காரியங்களை சிந்திக்கும்படியாக ஓய்வில்லாமல் எப்பொழுதும் வேலை செய்துக் கொண்டிருந்தன. அந்தப் பட்டணத்தில் நாளேடுகள் தொடர்ச்சியாக மனதுக்கு உணவையும், பொதுக் கருத்துக்களை மெருகேற்றியும் வழி நடத்தியும் வந்தன. நாட்டின் பல்வேறு செயல்பாடுகளின் மையமாக அந்தப் பட்டணம் விளங்கியது. வங்கிகள், நீதிமன்றங்கள், பங்குச் சந்தை, பாராளுமன்றம், சட்டமன்றம் எல்லாம் அப்பட்டணத்துக்குள் இருந்தது. அப்பட்டணம் தன்னுடைய காந்தத் தன்மையினால், நாட்டின் நடப்பு வழக்கையும் (fashion), பிரபலமானவைகளையும் தன்னகத்தே கவர்ந்திழுத்து, சமுதாயத்திற்கு அதன் சுவையையும் வழிகளையும் வழங்கியது. அந்தப்பட்டணம் தன்னுடைய தேசத்தின் முடிவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
வெளி மாவட்டங்களில் சிதறியிருந்த இலட்சக் கணக்கானவர்கள், அத்தேனே பட்டணத்துடன் தொடர்பில்லாமையால், அந்தப் பட்டணத்துக்குள் வசித்து தங்கள் சிந்தனைகளை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துக் கொண்ட அந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு முன் எந்த சக்தியும் இல்லாதவர்களாயிருந்தார்கள். அப்பட்டணம் அந்த நாட்டையே கட்டுப்படுத்தியது. தூய பவுல் தேவாலயத்தின் உச்சியில் நின்று, எந்த உணர்ச்சியும் இல்லாமல் லண்டன் மாநகரைப் பார்த்து, ஒட்டுமொத்த நாகரிகமடைந்த உலகத்தால் உணரப்பட்ட இதயத் துடிப்பை பிரதிபலிக்காதவரைப் பார்த்து நான் பரிதாப்பபடுகிறேன். அத்தேனேயின் காட்சி புறஜாதியாரின் உன்னத அப்போஸ்தனின் “ஆவியை கலங்கச் செய்ததைக்” குறித்து நான் ஒரு கனம் வியக்கலாமா? நான் வியப்பதற்கு இடமில்லை! மனந்திரும்பிய தர்சு பட்டணத்தானும், ரோமருக்கு நிருபம் எழுதியவனும், இயேசு கிறிஸ்துவை முக முகமாய் தரிசித்தவனுடைய இருதயத்தை அக்காட்சி பாதித்தது.
அவர் பரிசுத்த மனதுருக்கத்தினால் கலங்கினார். மிகப்பெரும் கூட்டம், அறிவில்லாமல், தேவனில்லாமல், நம்பிக்கையில்லாமல், அழிவுக்குச்செல்லும் விசாலமான பாதைவழியாய் சென்று அழிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அவருடைய இருதயம் கலங்கினது.
அவர் பரிசுத்த கவலையினால் கலங்கினார். அதிகமான திறமை தவறாக பயன்படுத்தப்படுவதைக் கண்ட அவரது இருதயம் கலங்கினது. சிறந்த வேலைகளைச் செய்யக்கூடிய கைகளும், சிறப்பாக சிந்திக்கக்கூடிய மனதும் இங்கே இருந்தன. ஆனாலும், ஜீவனை, சுவாசத்தை, வல்லமையைக் கொடுத்த தேவன் மகிமைப்படுத்தப்படவில்லை.
பாவம் மற்றும் சாத்தானுக்கெதிராக பரிசுத்த கோபத்தால் அவர் கலங்கினார். இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் பெருந்திரளான கூட்டத்தின் கண்களைக் குருடாக்கி தன்னுடைய விருப்பத்தின் கீழ் அவர்களை கட்டி வைத்துள்ளான். மனிதனின் கெட்டுப்போனத் தன்மை ஒரு பொதுவான வியாதியாக பட்டணத்தில் இருந்த மொத்த மக்களையும் தொற்றி, ஆவிக்குறிய மருந்தோ, எதிர்ப்பு சக்தியோ அல்லது மீட்போ இல்லாதிருப்பதை அவர் கண்டார்.
தன்னுடைய எஜமானரின் மகிமைக்காக பரிசுத்த வாஞ்சையினால் கலங்கினார். “ஆயுதம் தாங்கிய பலவான்” சட்டரீதியாக தனக்கு சொந்தமில்லாத வீட்டை ஆக்கிரமித்து வைத்திருப்பதையும், அதன் சொந்தக் காரர்களை வெளியே தள்ளியிருப்பதையும் அவர் கண்டார். தன்னுடைய தெய்வீக எஜமான், தன்னுடைய சொந்த சிருஷ்டிகளினாலேயே கண்டுக்கொள்ளப்படாமலும், அறியப்படாமலும் இருப்பதையும், இராஜாதி இராஜாவுக்குரிய மரியாதையை விக்கிரங்கள் பெற்றுக்கொண்டிருப்பதையும் அவர் கண்டார்.
வாசகரே, அப்போஸ்தலனை கலங்கப்பண்ணின இந்த உணர்ச்சிகள், ஆவியினால் பிறந்தவனுடைய குணாதிசயங்கள். இவைகளில் எதையாகிலும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எங்கே உண்மையான கிருபை இருக்கிறதோ, அங்கே மற்றவர்களைக்குறித்த ஆத்தும பாரமும் துளிர்விடும். எங்கே தேவனுடைய பிள்ளைகள் என்ற உண்மையான புத்திர சுவிகாரம் இருக்கிறதோ, அங்கே தகப்பனுக்கு மகிமையை சேர்க்க வேண்டும் என்கிற வாஞ்சையும் இருக்கும். அவர்கள் மரணத்துக்குப் பாத்திரமானவைகளை செய்கிறது மட்டுமல்லாமல், அவைகளை செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள் (ரோம 1:32) என்று தேவனற்றவர்களைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடையவர்களுக்கும் இதே உண்மை சொல்லப்படலாம், அவர்கள் தங்களுடைய பாவத்துக்காக தங்கள் இருதயங்களில் மனஸ்தாபப்படுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய பாவங்களுக்காகவும் அவர்கள் மனம் வருந்துகிறார்கள்.
சோதோமில் வசித்த லோத்தைக் குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் – “நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான்” (2பேது 2:8). தாவீதைப்பற்றி என்ன எழுதியிருக்கிறது என்று கேளுங்கள் – “உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது” சங் 139:136. எசேக்கியேலின் நாட்களில் தேவனுடையவர்களைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் – “எருசலேமிற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு” (எசே 9:4). நம்முடைய கர்த்தராகிய இரட்சகரைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கேளுங்கள் - அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுதார்” (லூக் 19:41). பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்படாதவன், ஆவியின் சிந்தை உடையவனல்ல என்பதை வேதம் குறிப்பிடும் சமயத்தின் தத்துவமாக்க் கொள்ளலாம். தேவனுடைய பிள்ளைகள் வெளிப்படுத்துவதில் இதுவும் ஒன்று, இதன் மூலம் சாத்தானின் பிள்ளைகள் வேறுபடுத்தப்படுகிறார்கள்.
இந்தக் கருத்தில் சிறப்புக் கவனம் செலுத்தும்படி என் வாசகர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். பாவம், துன்மார்க்கம், தவறான சமயம் ஆகியவைகளை குறித்த நமது உணர்ச்சிகள் இந்நாளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலில், நம்முடைய நாட்டுக்கு வெளியே துன்மார்க்க உலகத்தைப் பாருங்கள். தற்பொழுது குறைந்தது 600 கோடி அழிவில்லா வாசிகள் அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும், விக்கிரக ஆராதனையிலும் மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் தேவனின்றி, கிறிஸ்துவின்றி, நம்பிக்கையின்றி வாழ்ந்து மடிகிறார்கள். வியாதியில், துன்பத்தில் அவர்களுக்கு எந்த ஆறுதலும் இல்லை. முதுமை மற்றும் மரணத்தில் கல்லறையைத் தாண்டி அவர்களுக்கு வாழ்வில்லை. மீட்பரின் வழிவரும் உண்மையான சமாதானத்தைப்பற்றியோ, கிறிஸ்துவின் அன்பைப் பற்றியோ, இலவசமான கிருபையைப் பற்றியோ, பாவத்திலிருந்து விடுதலையைப் பற்றியோ, நித்தியத்திற்கென்று உயிர்த்தெழுதலைப் பற்றியோ அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் மெத்தனமாக தூங்கிக்கொண்டிருக்கையில் அல்லது சடங்காச்சாரங்கள் அல்லது பாரம்பரியங்களைப் பற்றி அவர்கள் பிரயோஜனமற்ற வாக்குவாதங்களிலும், தர்க்கங்களிலும், சண்டைகளிலும் தங்கள் சக்தியை வீணடித்துக் கொண்டிருந்த காலங்களில் அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். இது “ஆவியைக் கலங்கச்செய்ய” வேண்டிய காட்சியில்லையா?
இக்காலாத்து சந்ததியினர் துன்மார்க்கத்தையும், உண்மையற்ற தன்மையையும், தவறான சமயத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் விரும்புகிறார்கள் என்பது வருத்தத்துக்குறிய உண்மையாகும். உள் நாட்டிலோ, வெளி நாட்டிலோ உள்ள கிறிஸ்தவ ஸ்தாபனங்களைக் குறித்து அவர்களுக்கு அக்கரையில்லை. அதைக்குறித்த எந்தத் தேவையும் அவர்களுக்கில்லை. எந்த ஒரு திருச்சபையின் நற்செய்திப் பணியிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறதில்லை. எல்லாவற்றையும் போல நேரடியாக அதை அவமதிக்கிறார்கள். திருச்சபை கூட்டங்களுக்கு வருகிறதில்லை. ஒருவன் மிகவும் உண்மையாக நடந்துகொண்டால், தன் சுய கற்பனைகளின் படி ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நினைப்பதுபோல் தோன்றுகிறது. எல்லா ஆவிக்குரிய ஊழியங்களையும் குறைகூறவும் குறைத்து மதிப்பிடவும் அவர்கள் ஆர்வமாயிருக்கிறார்கள். உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செயல்படும் ஊழிய ஸ்தாபனங்கள் ஒன்றும் செய்வதில்லை அவர்களை தாங்குகிறவர்களும் உற்சாகமற்றவர்கள் என்பது அவர்கள் வாதம். அவர்களுடைய வார்த்தைகளைவைத்து அவர்களை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், முனைபுடன் செயல்படும் கிறிஸ்தவ இயக்கங்கள் மூலமோ மற்றும் ஊழிய ஸ்தாபனங்கள் மூலமோ உலகம் எந்த பயனும் அடையவில்லை, உலகத்தை அது இருக்கிற விதமாகவே விட்டுவிடுவதே சிறந்தது என்பது அவர்கள் எண்ணம். இவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்? அவர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். வேலையில்லாமல் உட்கார்ந்துகொண்டும், அர்த்தமில்லாமல சிரித்துக்கொண்டும், விமர்சித்துக்கொண்டும் இருக்கிறார்கள் – இதுதான் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஓய்வு நேரம். அவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்?
நீங்கள் எங்களுக்கு செவிசாய்க்காவிட்டால், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு எதிர்த்து நிற்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக அவர்களுக்கு சொல்லுவோம். முழுவதும் விக்கிரக ஆராதனைக்குள்ளாக இருக்கும் நகரத்தை பார்த்து ஆவியில் “கலங்கி” அத்தேனேயின் தெருக்களில் நடந்து திரியும் கிறிஸ்தவ ஊழியனின் வல்லமையான மாதிரியை அவர்களுக்கு காட்டுவோம். இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் விக்கிரக ஆராதனையைபற்றி அவர்கள் ஏன் பவுல் உணர்ந்தவிதமாக உணரவில்லை என்று கேட்போம். கடந்த 2000 ஆண்டுகள் தேவனுடைய தன்மையிலும், விழுந்துபோன மனிதனுடைய தேவையிலும், விக்கிரக ஆராதனையின் பாவத்திலும், கிறிஸ்தவனின் கடமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்று கேட்போம். ஒரு பொறுப்புள்ள பதிலுக்காய் விருதாவாய் அவர்களிடம் கேள்வி கேட்போம் – அவர்களிடமிருந்து நாம் ஒரு பதிலும் பெறப்போவதில்லை. நம்முடைய எளிமையின் நிமித்தம் வரும் ஏளனச் சிரிப்புகள் நம்முடைய உன்னத நோக்கத்திற்கு எதிரானவையல்ல. நம்முடைய பெலனற்ற தன்மையினாலும் தோல்வியினாலும் வரும் ஏளனங்கள் நம்முடைய நோக்கங்கள் தவறு என்பதற்கான ஆதாரங்களல்ல.
ஆம்- அவைகளெல்லாம் உலகத்தின் பார்வையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் ஞானமாகவும் இருக்கலாம்; ஆனால் புதிய ஏற்பாட்டின் நித்திய நியமங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும், தவறில்லாமலும் இருக்கின்றன. வேதாகமம் வேதமாக இருக்கும் வரையில், ஆத்துமாக்களிடம் அன்புக்கூறுதல் என்பது முதன்மையான கிறிஸ்தவ பண்பு, புறஜாதிகள் மற்றும் அவிசுவாசிகளின் ஆத்துமாக்களுக்காக பிரயாசப்படுதலே முக்கியமான பணியாகும். இதைப்பற்றி ஒன்றும் தெரியாதவர் கிறிஸ்துவின் பாடசாலையில் சேர்ந்து பயில வேண்டும். இந்த உணர்வுகளை மதிக்காதவர் அப்போஸ்தலனாகிய பவுலை பின்பற்றுபவர்களல்ல, மாறாக, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று கேட்ட காயீனின் வழித்தோன்றல்கள்.