இப்பொழுது, இந்த புறஜாதியாரின் அப்போஸ்தலனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளுவதற்கு உன்னதமான காரியம் ஒன்றும் இல்லையா? இதை வாசிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்விதமாக மிக முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களின் சுருக்கத்தை தருகிறேன். சுருக்கம் என்று சொல்லுகிறேன். உங்கள் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு விதைகளாக, அவைகளை தூவுகிறேன்.
அ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு சத்தியத்தை கற்றுக்கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நம்முடைய போதனையில் சாரம்சம், இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும். நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டம், கற்றவர்களோ, கல்லாதவர்களோ, உயர் குலமோ எளிமையானவர்களோ, கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டார் – கிறிஸ்து – கிறிஸ்து – கிறிஸ்து – சிலுவையிலறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பரிந்து பேசுகிறார், விடுவிக்கிறார், மன்னிக்கிறார், ஏற்றுக்கொள்ளுகிறார், இரட்சிக்கிறார் – நம்முடைய போதனையின் மையப்பொருள் கிறிஸ்த்துவாக இருக்க வேண்டும். இந்த காரியங்களைவிட நற்செய்தியை நாம் மேம்படுத்தவே முடியாது. இதைவிட சிறப்பாக செயல்படக்கூடிய எந்த ஒரு தலைப்பையும் நாம் காண இயலாது. பவுல் அறுவடை செய்தது போல நாமும் அறுவடை செய்ய வேண்டுமென்றால், பவுல் விதைத்ததுபோல நாமும் விதைக்க வேண்டும்.
ஆ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு நடைமுறைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தனி ஒருவனாக கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதற்கு நாம் ஒருபோதும் பயப்படக்கூடாது. தேவைப்பட்டால் துன்மார்க்கமுள்ள திருச்சபையின் மத்தியில் தனியாகவும் – நம்முடைய நாட்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும், கொல்கொத்தாவிலும், சென்னையிலும், திருச்சியிலும் தனியாக நில்லுங்கள் – எங்கு இருந்தாலும் அங்கு தனியாக நில்லுங்கள். தேவனின் சத்தியம் நம்பக்கம் இருக்குமென்றால் நாம் அமைதிகாக்க வேண்டியதில்லை. அத்தேனேயில் ஒரு பவுல், உலகத்திற்கு எதிராக ஒரு அத்தானாசிஸ், ரோம கத்தோலிக்க பீடாதிபதிகளின் படைகளுக்கு எதிராக ஒரு விக்ளிப், வார்ம் நகரில் ஒரு லூத்தர், இவர்கள் நம் கண்களுக்கு முன்னால் நிற்கும் களங்கரை விளக்கங்கள். மனிதன் பார்க்கும் விதமாக தேவன் பார்க்கிறதில்லை. கூடியிருக்கும் மக்களின் தலைகளை எண்ணிக்கொண்டு நாம் நிற்கக் கூடாது. கிறிஸ்துவை தன் இருதயத்திலும், வேதத்தை தன் கரங்களிலும் கொண்டிருக்கும் ஒரு மனிதன், பெருங்கூட்ட விக்கிரக ஆராதனைக்காரர்களைவிட வலிமையானவன்!
இ) இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி கிறிஸ்தவ சமயத்தின் ஒரு அங்கம் என்பதை வலிமையாக எடுத்துரைப்பதின் முக்கியத்துவத்தை, தேவையை அறிந்துகொள்ளுங்கள். வேதத்தின் அற்புதங்களை கேலி செய்யும், உபயோகமற்ற மரக்கட்டைகளைப்போல கட்டி தூக்கி எறிய இடைவிடாமல் முயற்சிசெய்யும், எடுபடாத விளக்கங்கள் மூலம் அவைகள் அற்புதங்களே அல்ல என நிரூபிக்க முயற்சிசெய்யும் அவிசுவாசிகள், சந்தேகப் பேர்விழிகள் அநேகருண்டு என்பதை இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்களை எதிர்க்கொள்ள நாம் ஒருபோதும் பயப்படாமல், பவுலைப்போல நம்முடைய நிலையில் உறுதியாயிருக்க வேண்டும். பவுலைப்போல, உறுதியுடன் கிறிஸ்து என்ற ஆதாரத்துடன் எல்லா மனிதரையும் எதிர்க்கொள்ளவும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நேராக வழிநடத்தவும் வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட சமயத்தின் எதிராளிகள் அந்த ஆதாரத்தை மறுதலிப்பதில்லை, அவர்கள் மறுதலிக்கவும் முடியாது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவர் பரமேறிய பிறகு, அப்போஸ்தலர்களின் போதனைகளும், செய்கைகளும், தீர்க்கமுடியாத புதிராகியிருக்கும். ஆனால், நாம் விசுவாசிக்கிறபடி, கிறிஸ்துவின் உயிர்தெழுதல் மறுக்கமுடியாத உண்மையானால், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சமயத்திற்கு எதிரான, கட்டுக்கதைகளான விவாதங்கள் புறந்தள்ளப்பட்டு, வீழ்ந்துபோகும். உன்னதமான அதிசயமான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற சிறு அற்புதங்கள் சாத்தியமற்றவை என்று சொல்லுவது புத்தியீனமானது.
ஈ) அத்தேனேயில் பவுலின் செய்கையிலிருந்து, நமது விசுவாசத்தை உற்சாகப்படுத்தும் பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நாம் நற்செய்தியை பிரசங்கிப்போமென்றால், அது தன் பணியை செய்யும் என்ற நம்பிக்கையுடன் நாம் செய்வோம். மார்ஸ் மேடையில் தனியாக நின்ற தர்சு பட்டணத்து யூதன் அச்சமயத்திலே ஒன்றும் செய்யாதவன் போல் காணப்பட்டான். ஏதோ தோல்வியில் முடிந்ததுபோல அவன் தன் வழியே போய்விட்டான். அனேகமாக, ஸ்தோயிக்கர்களும், எப்பிக்கூரியர்களும் ஏதோ தாங்கள் வென்றுவிட்டதுபோல, பவுலை ஏளனம்செய்து சிரித்திருக்கலாம். ஆனால் அந்த தனி யூதன், ஒருபோதும் அனைக்க இயலாத ஒரு விளக்கை அங்கே ஏற்றியிருந்தான். அத்தேனேயில் அவன் அறிவித்த வார்த்தையானது, வளர்ந்து பெருகி, மிகப்பெரிய மரமானது. அந்த சிறிய புளித்த மாவு, பின் நாளில் முழு கிரேக்கத்தையும் புளிக்கவைத்தது. பவுல் பிரசங்கித்த நற்செய்தி விக்கிரக ஆராதனைக்கு மேலாக வெற்றிபெற்றது. இன்றைக்கு உள்ள வெறுமையான பார்த்தினன் கோயில், அத்தேனியரின் சமயம் மரித்துப்போய்விட்டது என்பதற்கு ஆதாரமாகும். ஆம்; நாம் நல்ல விதையை விதைப்போமென்றால், நாம் கண்ணீரோடே விதைத்திருக்கலாம், “ஆனாலும் நாம் அறுத்த அரிகளை கெம்பீரத்தோடே சுமந்துக்கொண்டு வரலாம்” (சங் 126:6).