முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> அந்நியபாஷை குழப்பம்
இனி அந்நியபாஷையைப்பற்றிய தெளிவான விளக்கத்தை நான் உங்களுக்காக எழுதப்போகிறேன்.
அதற்குமுன் அந்நியபாஷையைப்பற்றி தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம், பெந்தேகோஸ்தே சபையை சார்ந்த பிரசங்கிமார்கள், ஊழியர்களிடமும், பெந்தேகோஸ்தே சபை உபதேசத்தையும், அந்நிய பாஷையை முக்கிய அடையாளமாக உபதேசிக்கும் AOG சபையின் வேதாகம கல்லூரியின் விரிவுரையாளர்கள், லெக்சரர்கள் CPM சபை பாஸ்டர்கள் ஆகியவர்களிடம் நேரிலேயே சென்று பல மணி நேரம் உறையாடி தெரிந்துக்கொண்ட விவரங்களையும் நான் அவர்களிடம் எழுதி கொடுத்த கேள்விகளுக்கு அவர்கள் கடிதம்மூலம் எனக்கு எழுதிய பதில்களையும் வாசகர்கள் அறியவேண்டும் என்று 1996ம் வருடமே அந்த கடிதங்களை ஜாமக்காரனில் கொஞ்சம்கொஞ்சமாக வெளியிட்டேன். அதே கடிதங்களை புத்தகவடிவில் கொண்டு வரவும், வாசகர்கள் அறியவும் தொடர்ந்து ஜாமக்காரனில் வெளியிடப்போகிறேன். ஆகவே நான் எழுதப்போகும் கட்டுரையை வாசிக்குமுன் முதலில் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள்,ஊழியர்களின் விளக்கத்தை வாசியுங்கள்.
அதன்பின் கர்த்தர் எனக்குள் உணர்த்திய வசன தெளிவின் அடிப்படையிலும் இப்போதுள்ள அந்நியபாஷை பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களின், ஊழியர்களின் சாட்சி கெட்ட ஜீவியத்தின் மூலமாகவும், அவர்கள் செய்யும் ஊழியத்தில் மேடையில் வெளிப்படையாக பேசும் பொய் சாட்சிகளின் மூலமாகவும், இவர்களாகவே பொய் சாட்சி சொல்ல வைத்த விசுவாசிகளின் உண்மை விளக்கங்களையும், ஆதாரமாக வைத்து அந்நியபாஷை குழப்பம் என்ற தலைப்பில் ஆரம்பித்த கட்டுரையை முடிக்கப்போகிறேன். வேதத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு, அந்த வேதத்தை எழுதிய ஆவியானவரை துணைக்கு அழைத்து ஒவ்வொரு ஊழியர்கள் எழுதிய கடிதங்களையும் வாசித்து, முடிவாக நான் எழுதும் விளக்கங்களையும், ஜெபத்தோடு வாசித்து ஒரு முடிவுக்கு வரும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.
எந்த ஊழியர்களின் கடிதங்களையும், கூட்டியோ-குறைக்கவோ செய்யாமல் அவர்கள் எழுதியதை அப்படியே வெளியிடுகிறேன்.
THE PENTECOSTAL MISSION (Regd. under indian Societies Act XXI of 1860 and T.N. Act. 27/975 S.No. 19 of 1963) “That we may presant Every man perfect in Christ Jesus” (Col. 1:28)
Pastor. RAJAN
69, Gaudiya Mutt Road,
Royapettah, Madras-14
கர்த்தருக்குள் மிகவும் அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு, ஸ்தோத்திரம் கூறி எழுதிக் கொள்வது.
உங்களுடைய பத்திரிக்கை அந்நிய பாஷை குழப்பம் என்று எழுதப்பட்டது கிடைக்கப்பெற்றது, உடனே பதில் எழுத முடியவில்லை. மன்னிக்கவும். திறந்த மனதோடும் சுத்த இதயத்தோடும் இவைகளை வாசித்து பார்த்தேன். கீழே என்னுடைய பதில்களை தருகிறேன்.
பரிசுத்த ஆவியை காத்திருந்தே பிதாவிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும்.(லூக் 11:10, அப். 1:5) இதற்கு மாறாக ஸ்தோத்திரங்களை வேகமாக சொல்ல வைப்பதும் இயேசுவின் இரத்தம் என்று கூற வைப்பதும் வேகமான பாடல்களை தெரிந்தெடுத்து வாத்தியங்களை இதற்கு உதவியாக உபயோகிப்பதும், Drum வேகமாக அடிப்பதும் பாட்டின் உச்சகட்டத்திற்கு ஜனங்களை கொண்டுசென்று அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள வைப்பதும் தெய்வீக முறையே அல்ல. அது செயற்கை முறையாகும், இப்படி செய்வது மனிதனுடைய மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் உற்சாகமூட்டுவதற்குமேயொழிய பரிசுத்தஆவியை பெற்றுக் கொள்வதற்கல்ல. இதைப்பற்றி நீங்கள் எழுதினது சரியே.
நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளானபோதே பரிசுத்த ஆவியால் முத்திரைபோடப்படுகிறோம் என்று எழுதியிருந்தீர்கள். எபே. 1:13 வேத வசனத்தில் ஏற்றுக்கொண்டபோதே அதாவது அக்கனத்திலே என்று எழுதப்படாமல் விசுவாசிகளான போது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் KJV வேதாகமத்தின்படி After that ye believed என்று ஒரு மனிதனின் இரட்சிப்பை பெற்ற பிற்பாடு பெற்றுக்கொள்வதைப்பற்றி எழுதியிருக்கிறது. அதாவது அன்றோ மற்ற நாளோ அல்லது சில காலம் சென்றோ என்று அர்த்தமாகிறது. மேலும் அந்த வசனத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆவியால் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதன்படி வேத ஒழுங்கின்படி அப்போஸ்தலர் 2ல் கூறப்பட்டிருக்கும் முறைப்படி முத்திரை போடப்பட்டார்கள். தேவ ஒழுங்கு ஒருபோதும் மாறாது. இதைகுறித்து நீங்கள் எழுதியது தவறு.
பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தர் என்று ஒருவரும் சொல்லக்கூடாது என்று எழுதியிருக்கிறீர்கள். 1 கொரி. 12:3ல் நீங்கள் எழுதியபடி ஒருவன் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முதலில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை மிக அவசியமாகும். ஆவியானவரின் கிரியைதான் அவன் இயேசுவை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. மனந்திரும்ப வைக்கிறது என்பது சரியே. இதனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகள் யாவருக்கும் பரிசுத்த ஆவி உண்டு என்பது தவறு. இது ஒரு விசுவாச அறிக்கையே (ரோமர் 10:9) இதற்கு யோவான் 14:17 ஆதாரமாகும். மேலும் இயேசுவை தம்முடைய சீஷர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்பது ஆதியிலே தேவன் மனுஷனை பூமியின் மன்னிலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினத்திற்கு அடையாளமாக அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மனிதனுடைய ஜீவ சுவாசத்தை போன்றது என்பதாகும். இயேசுவானவர் சீசர்கள்மேல் தம் ஆவியைத்தான் ஊதினார். பரிசுத்த ஆவியை அல்ல. ஊதினவர் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் தாங்கள் இனிப்பெற்றுக்கொள்ள வேண்டியதைப் பற்றியே கூறினார் இதைப்பற்றி நீங்கள் எழுதியது தவறு. அதனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது இரண்டாம் அனுபவம் அல்ல அது ஒன்றே ஆகும்.
அந்நிய பாஷை பரிசுத்தாவிக்குறிய ஒரே அடையாளம் அல்ல. முதலாவது அடையாளமாகும். பிதா அருளிய வாக்குத்தத்ததின்படி பரிசுத்தாவியை பெற்று நீங்கள் இப்போது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார் என்று பேதுரு பேசினாரே. இங்கு இதைப் பொழிந்தருளினார் என்பது பரிசுத்தாவி ஆகும். அதாவது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இரண்டு அடையாளங்களுடைய பரிசுத்தாவியை என்பது மாறாத சத்தியமாகும். அதனால்தான் அந்நிய பாஷை பரிசுத்தாவி பெற்றுக் கொண்டவர்களுக்கு அடையாளம் என்கிறோம். மற்றது ஜீவியமாகும். மேலும் காண்பது என்பதற்கு முகப்பிரகாசம் என்று நீங்கள் எழுதியது தவறு. சரீர அனுபவமேயாகும் கூடியிருந்த பல பாஷைக்காரரும் அவர்களுடைய ஒவ்வொருவருடைய முகப்பிரகாசத்ததையும் காணமுடியுமா ? ஸ்தோவானுடைய முகம் பிரகாசித்திருந்தது என்று எழுதியிருந்தீர்கள். சனகரிப் சங்கத்திலே 70 பேருக்கு முன்பாக நிறுத்தப்பட்ட யோவான் அந்நிய பாஷை பேசினதாக நாம் வாசிக்கிறதில்லையே? காண்பது என்ற பரிசுத்தாவியின் அடையாளம் கேட்பது என்று அனுபவத்தோடே அல்லவா வருகிறது. இங்கு ஸ்தேவானுடைய அனுபவமும் அப் 2ல் சொல்லப்பட்ட அனுபவமும், வேறானவைகள் ஆகும்.
அப் 8:16, 17ல் பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டவர்கள் அந்நிய பாஷை பேசவில்லை என்று நீங்கள் எழுதியது தவறு. பரிசுத்த ஆவியை குறித்த தேவனுடைய ஒழுங்கு ஒருபோதும் மாறாது. மேலும் 8:18ல் பரிசுத்த ஆவி தந்தருளபடுகிறதை சீமோன் கண்டான், ஆனால் அவன் அவர்கள் அந்நிய பாஷை பேசினதை கேட்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள்.
சீமோனைப்பற்றி எழுதுவதற்கு முன்பாக 17ம் வசனத்தில் அவர்கள் பரிசுத்தாவியை பெற்றவர்கள் என்று லூக்கா எழுதினாரே, லூக்காவிற்கு அவர்கள் பரிசுத்த ஆவி பெற்றுக்கொண்டது எப்படி தெரியும்? கண்டவர்கள் சொன்னதினாலல்லவா?கண்டவர்களுக்கு எப்படி தெரியும்? அந்நிய பாஷையை கேட்டதினால்தானே மேலும் 20ஆம் வசனத்தில் பேதுரு அவனை நோக்கி தேவனுடைய வரத்தை பணத்தினால் சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் என்று ஏன் சொல்லவேண்டும். இங்கு வரம் என்று சொல்லப்பட்டது. அந்நிய பாஷையை அடையாளத்தோடுள்ள பரிசுத்தாவிதானே (அப். 2:4).
அப் 2:38, 2:41ல் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்த ஜனங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்களேயொழிய அவர்கள் பரிசுத்தாவிக்காக காத்திருந்தைதயோ, பெற்றுக்கொண்டதையோ அங்கு நாம் வாசிக்கிறதில்லையே. அவர்கள் ஜெபத்திலே மற்றவர்களோடு தரித்திருந்தார்கள் அவ்வளவே. இதைப்பற்றி நீங்கள் எழுதியது தவறு.
அந்நிய பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது என்று பவுல் எழுதினது சரியே. எப்படியெனில் ஒருவன் தனக்கு தெரிந்த ஹிந்தி பாஷையில் தேவனுடைய மகத்துவங்களை பேசுவானென்றால் அது அவனுக்கு அந்நிய பாஷையாகும். அது அங்கு புதிதாக வந்துள்ள ஹிந்தி தெரிந்த மனிதனுக்கு அது ஆச்சரியமும் அடையாளமாகும். அந்த மனிதன் ஹிந்தியில் பேசும்போது ஹிந்தி தெரியாத விசுவாசிகள் எப்படி அதை விளங்கிக் கொள்வார்கள். இது உண்மையிலே மற்ற விசுவாசிகளுக்கு ஆச்சரியமும் அடையாளமுமாயிருப்பதில்லையே. விசுவாசிகள் விளங்கிக் கொள்ளவிட்டாலும் அவன் பரிசுத்தாவியைப் பெற்றவன் என்பதை விசுவாசிகள் விளங்கிக் கொள்வார்கள் அல்லவா. அப்படியென்றால் தான் பெற்றுக்கொண்ட இந்த வரம் அவன் பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாய் இருக்கிறதே. இதை மனதில் வைத்தே பவுல் கொரிந்தியருக்கு அவ்விதம் எழுதினார். இதைப்பற்றி நீங்கள் எழுதியது தவறு.
இயேசுவின் சுவிசேஷம் அறிவிக்கவே அந்நிய பாஷை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தவறு. பேதுருவும் அப் 2ம் அதிகாரத்தில் அந்நிய பாஷைபெற்ற மனிதன்தான். ஆனால் அவன் அன்று அந்நிய பாஷையில் சுவிசேஷம் அறிவிக்கவில்லையே. வேதத்தில் இதை எங்கும் நாம் காண்கிறதில்லையே. பாபேலில் சிதறப்பட்ட பாஷைக்காரரை ஒன்றாக்கும்படி தேவன் தந்த வரமே அந்நிய பாஷை என்று நீங்கள் எழுதினது சரியே. அந்நிய பாஷையில் பேசினார்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினார்கள். பேசினவர்களுக்கு தாங்கள் பேசின பாஷையின் அர்த்தத்தை விளங்கவில்லை. அந்தந்த பாஷைக்குரியவர்கள் விளங்கிக் கொண்டவர்கள். இது ஒரு அற்புத அடையாளம் மாத்திரமே. சுவிசேஷம் அறிவிக்கும்படியாய் அல்ல. சுவிசேஷம் அறிவிப்பதற்கு அபிஷேகமும் சுயசித்தம் அறிவும் ஞானமும் அவசியம். ஆனால் அந்நிய பாஷையில் பேசினவர்கள் தங்களுடைய சுயசித்தம் அறிவிற்கு அப்பாற்பட்டே பேசினார்கள். அப்படியில்லையென்றால் சத்தமாக கிரேக்க பாஷை தெரியாதவன் அந்த பாஷையிலே எப்படி பேசியிருப்பான்? இது ஆவியானவருடைய பரிபூரணமான கிரியையாகும். இதைக் குறித்து நீங்கள் எழுதினது தவறு.
ஒருவன் தன் தாய் பாஷையில் பிரசங்கம் செய்வதோ, ஜெபம் பண்ணுவதோ பாஷை அறியாத மனிதனுக்கு அந்நிய பாஷை என்று நீங்கள் எழுதினது தவறாகும். அந்நிய பாஷையில் பேசுகிற பாஷை இன்னதென்றே தெரியாது பேசுகிறான். இதுவே அந்த பாஷைக்குரிய மனிதனுக்கு அற்புத அடையாளமாகும். மற்றபடி அவனுடைய தாய் பாஷை எப்படி அடையாளமாக முடியும். மேலும் கொரிந்து சபையில் சீஷர்கள் ஆராதனை நடத்தினால் அங்குள்ள பல பாஷைக்காரருக்கும் எபிரேய பாஷை அந்நிய பாஷை, அதனால் தான் பரிசுத்த பவுல் அந்நிய பாஷையில் பேசினால் கண்டிப்பாக மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என்றுகூறினார். நீங்கள் எழுதினது தவறு.
அந்நிய பாஷையில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படி அதன் அர்த்ததை சொல்லாவிட்டால் (1கொரி 14:5) தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன் என்று பவுல் எழுதினாரே. இதன்படி அந்நிய பாஷையில் பேசுகிறவன் பொதுவாக தேவனோடு பேசினாலும் மற்றபடி அவன் பேசுவதற்கு அவனே அதன் அர்த்தத்தை சொல்ல வேண்டும். அதாவது தீர்க்கதரிசனம் சொல்லவெண்டும் என்ற அந்நிய பாஷையைக் குறித்த ஒழுங்கை சொல்லுகிறார். இந்த இடத்திலே பிரசங்கத்திற்கோ. ஜெபத்திற்கோ இடமில்லை.
அந்நிய பாஷை பேசுகிறவனுக்கு அதன் அர்த்தம் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்று நீங்கள் எழுதியது தவறு. அப் 2ல் சீஷர்கள் அந்நிய பாஷைகளைப் பேசினபோது அதன் அர்த்தர்தை அவர்கள் விளங்கிக்கொண்டார்களோ இல்லையே. மற்றவர்கள் அல்லவா விளங்கிக்கொண்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்நியபாஷையில் பேகிறவன் 1கொரி 14:2ன் படிமனுஷரோடு பேசாமல் தேவனோடு பேசுகிறான்-இதுவே அவனுடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதலாகும் (ஏசா 28:11) அவன் இந்த அனுபவத்தில் வளர்ந்து வரும்போது அதன் அர்த்ததை தீர்க்கதரிசனமாக உரைக்கிறான். இது சுயசித்தத்தின் படியல்ல. ஆவியின் சித்தப்படியாகும்.
பரியாச உதடுகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். இவர்கள் யாரை பரிகாசித்தார்களோ அந்த பரிகாசிக்கப்பட்ட பரியாச உதடுகளினால் யூதருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படும். இதுவே தீர்க்கதரிசனம் என்று நீங்கள் எழுதினது தவறு. சீஷர்களுக்கு இயேசுவை 30 வருடங்களாகத் தெரியாதே. எப்படி அவர்கள் பரியாசம் பண்ணியிருக்க முடியும். KJV வேதாகமத்தின்படி Stammering Lips என்றே எழுதப்பட்டிருக்கிறதேயொழிய பரியாச உதடுகள் என்றல்ல. இங்கு பரியாசம் என்பதற்கே இடமில்லை அதாவது நீங்கள் ஒரு இடத்தில் எழுதினபடி திக்கித்திக்கி பேசுகிற அனுபவமாகும். ஒரு சிறு குழந்தை பேச ஆரம்பிப்பதுபோல். நீங்கள் ஒப்புக் கொள்வீர்களேயானால் இயேசுவைப் பரியாசம் பண்ணித் துன்புறுத்தி சிலுவையில் அறைந்தவர்களைக்கொண்டு அப் 2ன் அனுபவத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்படியில்லையே.
பாஷை வரம் ஆவியானவர் கொடுப்பது. அதை நீ கைதட்டி உனக்குள்ளே பேசி அனுபவிக்க அல்ல என்று நீங்கள் எழுதினது தவறு. 1 கொரி 12:7 ன் படி ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. ஆவியின் அபிஷேகம். அக்கினி அபிஷேகம் என்பதற்கு நீங்கள் எழுதியது சரியே. ஆவியின் அபிஷேகம் வேறு. அக்கினி அபிஷேகம் வேறு என்பது தவறு. அவர் பரிசுத்த ஆவியானலும். அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் ஸ்நானகன் சொன்னதின் அர்த்தம் பரிசத்தாவி என்பது ஆவியானவர் ஆள்தத்துவமாய் நமக்குள் வருவதாகும். அக்கினி என்பது அவருடைய வல்லமையாகும். ஆள்தத்துவமுள்ள அதாவது திரித்துவத்தின் மூன்றாம் ஆவியாகிய பரிசுத்தாவியானவர் அக்கினியால் அதாவது வல்லமையாய் நமக்குள் வருவதேயாகும். இது இரண்டு அபிஷேகமல்ல, ஒரே அபிஷேகம் ஆகும்.
மேலே குறிப்பிட்ட ஆவி-அக்கினி என்பதை Parallelism என்று நீங்கள் எழுதியது தவறு. வேத்தில் பல இடங்களில் முக்கியமாக பழைய ஏற்பாட்டில் இதைக் காண்கிறோம். ஒரு காரியத்தை மிகைப்படுத்திக் கூறும்போது ஒருபோகும் நிலை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேதத்தில் எந்த இடத்திலும் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கட்டளை கொடுத்தபோது இந்த முறை பின்பற்றப்படவேயில்லை. தேவனுடைய கட்டளைகள் தெளிவாயும் தீர்க்கமாயும் சந்தேகத்திற்கு இடமில்லாமலிருக்கிறதே. Born of Water and of the Spirits என்றவர் Born of water the Spirits என்றல்லவா கூறியிருக்க வேண்டும். இங்கு இயேசு ஒருபோகும் நிலையை பின்பற்றவில்லை.
காத்திருப்புக் கூட்டங்களை பற்றி நீங்கள் எழுதியது தவறாகும். ஜனங்களைக் கூட்டி அந்நிய பாஷை பேச வைப்பதல்ல. ஆனால் பரிசுத்தாவியையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ள செய்வதேயாகும். மேலும் காத்திருப்புக் கூட்டங்களைப் பற்றி வேதாகமத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை என்று நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும் ஒருவன் ஒரு நாளை கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான். (ரோம 14:6). இதிலே தவறு என்ன இருக்கிறது.
சபையில் பாஸ்டர் சொல்லி அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள் என்பது தவறு. கூட்டத்தை நடத்துகிற பாஸ்டர் கூட்டத்தை ஆவியானவருடைய நடத்தின் படியே நடத்துகிறார். எல்லோரும் தொடர்ந்து அந்நிய பாஷை பேசிக்கொண்டேயிருந்தால் எப்போது கூட்டத்தை முடிப்பது. ஆதே ஆவியானவர் விசுவாசிகளுக்குள்ளும் இருக்கிறாரே. நடத்திப்பு தேவனின் முக்கிய ஒழுங்காகும். பாஸ்டருக்குள் இருக்கிற ஆவியானவர் அவர் மூலம் அந்நியபாஷையை நிறுத்த சொல்கிறார். சபை மக்களும் அப்படி நிறுத்திவிடுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?.
நீங்கள் எழுதியபடி போலியான அந்நிய பாஷைகள் பெருகிவருகிறது. பலர் பரிசுத்தாவிக்கும் ஜீவியத்திற்கும் முக்கியத்துவம் கொடாது அந்நிய பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் பல ஆயிரங்கள் தவறாக நடத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் அநேகரை அசுத்தாவிகள் பிடிக்கிறது. இது கண்டிக்கப்படவேண்டும். நான் இதை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் இதின் உண்மையான அனுபவங்களுக்கு விரோதமாக எழுதுவதற்கும். பேசுவதற்கும் நாம் பயப்பட வேண்டும். தங்கள் சிந்தித்து ஆராயுங்கள்.
குறிப்பு : மேலே வாசித்த விமர்சனத்தை எழுதிய பாஸ்டர்.ராஜன் அவர்கள்தான் 1997 ஜீன் மாதம் கர்த்தருக்கள் நித்திரையடைந்தார்.
சிலோன் பெந்தேகோஸ்தே (TPM) சபை பாஸ்டரின் கடிதத்துக்கு என் பதில்:
TPM சபையிலேயே கன்வென்ஷனில் பேசுவதற்கென்றே சில பாஸ்டர்கள் உண்டு. எல்லா தலைமை பாஸ்டர்களாலும் பாஸ்டர்.ராஜன் அவர்கள் கன்வென்ஷன் செய்தியாளராக அங்கீகரிக்கப்பட்டவர். அந்த வகையில் நல்ல வேத ஞானம் உள்ளவர்தான் பாஸ்டர்.ராஜன் அவர்கள். இவர் சேலம் TPM சபை பாஸ்டராக ஊழியம் செய்தபோது அடிக்கடி இவர் என் வீட்டுக்கு வருவார். நாங்கள் நல்ல ஆவிக்குரிய நண்பர்களாகவும் இருந்தோம். மேலும் அவருக்கு என்னிடத்தில் மிகுந்த மரியாதை உண்டு. சேலம் விட்டு நெய்வேலி TPM சபைக்கு மாற்றலானபோதும் நான் கடலூர் போகும் வழியில் என் வாகனத்தில் நெய்வேலி TPM சபைக்கு சென்று ஒருமுறை அவரை சந்தித்து பேசி பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.
அந்த ஆவிக்குரிய நெருக்கம் எங்கள் இருவருக்குள்ளும் இருந்ததால் பெந்தேகோஸ்தே சபைகளின் பல தவறான உபதேசங்களைக்குறித்தும், தவறான சில ஒழுக்கங்களைக்குறித்தும் நாங்கள் மனம்விட்டு பேசியிருக்கிறோம். அந்த சூழ்நிலையில் பாஸ்டர்.ராஜன் அவர்கள் சென்னை தலைமை சபைக்கு மாற்றலானவுடன் அந்நியபாஷையைப்பற்றிய விவரங்கள் சேகரிக்க ஒருமுறை சென்னைக்கு நேரில் சந்தித்து பேசினேன். பலமுறை கடிதங்கள் மூலமாகவும் அந்நியபாஷை விவரங்களை சேகரித்தேன். அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் பல என்னிடம் இப்போதும் உண்டு. அப்படியே TPM தலைமை பாஸ்டர்களில் ஒருவரான பாஸ்டர்.பாபின் அவர்களுடனும் எனக்கு நெருக்கம் உண்டு. என் பாடல்களை அவர் மிகவும் விரும்புவார். காரணம் அவரும் TPM கன்வென்ஷனுக்கு பாடல்கள் இயற்றி ராகம் அமைப்பதில் தாலந்து பெற்றவர். அந்நியபாஷை விஷயமாக TPM சபை பாஸ்டர்களில் இவர்கள் இரண்டு நபர்களிடம்தான் கூடுதல் ஆலோசனைகளை பெற்றேன். பாஸ்டர். பாபின் அவர்களை தூத்துக்குடி TPM சபையில் ஊழியம் செய்தபோதும் பலமுறை நான் தூத்துக்குடிக்கு நேரில் சென்று அவரை பார்த்து பேசி வருவேன். இவர்கள் இருவரும் தங்கள் சபைகளின் வசன அடிப்படையில்லாத பல விஷயங்களை சம்மதித்தாலும் தன்னுடைய சபைக்கென்று உள்ள உபதேசத்தை சற்றேனும் விட்டுக்கொடுக்காமல் பேசினார்கள். தங்கள் சபையை அந்த அளவு அவர்கள் நேசித்து சபைக்கும்,சபை உபதேசத்துக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
பாஸ்டர்.ராஜன் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் பல விஷயங்கள் அவர் என்னிடம் கூறி பல கருத்துக்கள் அவர் தனிப்பட்ட அனுபவங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. அந்நியபாஷை விஷயமாக ஜாமக்காரன் பத்திரிக்கைக்காக அவர் எழுதிய முதல் கடிதத்தில் அவரின் ஆரம்ப கருத்துக்களே மிக தவறானவையாகும். ஆங்கில அறிவு பெற்ற அவர் பரிசுத்தஆவியை காத்திருந்ததுதான் பிதாவினிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். பரிசுத்த ஆவியானவரை கேட்டு பெற்றுக்கொள்ளும்படி புதிய ஏற்பாட்டு சபைக்கு வேதத்தில் கட்டளையில்லை. இவர் குறிப்பிட்டுள்ள லூக் 11:10, அப் 1:5 இரண்டும் இவரின் தவறான உபதேசத்துக்கு ஆதாரமாக காட்டுகிறார். இந்த இரண்டு வசனங்களில் ஒன்று இயேசு மரிக்கும்முன் கூறியது. அந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி போகிறவராக இருந்தார். பிதாவின் வாக்குத்தத்தமான மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற அனுபவம் உலகக்கு அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் இயேசு கூறியதாகும்;. ஆகவே தேவையான சமயத்தில் பரிசுத்த ஆவியானவர் கேட்கிற எவனுக்கும் உதவி செய்ய பிதா ஏற்பாடு செய்திருந்தார்.
அப் 1:5ல் பிதாவால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதும் இயேசுவால் யோ 14:16ல் என்றென்றும் நம்மோடு, நமக்குள் தங்கும் திட்டத்துக்காக மேல்அறையில் காத்திருக்கும்படிகூறினார். அதுவரை பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கம் நடைபெறவில்லை என்பதை கவனிக்கவேண்டும். அந்த முதல் இறக்கத்துக்காகவும் யோ 14:16ல் இயேசு கூறியதை நிறைவேற்றுவதற்காகவும் காத்திருக்கும்படி கூறினார். சீஷர்கள் கீழ்ப்படிந்தனர், காத்திருந்தனர். வாக்கு மாறாத தேவன் பரிசுத்த ஆவியானவரை காத்திருந்த அவர்கள்மேல் அருளினார். அப்படி வந்து இறங்கிய பரிசுத்தஆவியானவர் பழைய ஏற்பாட்டின் காலத்தில் நடந்ததுபோல திரும்ப போகவில்லை. அப் 1:5 வசனத்தில் காணப்படும் இந்த காத்திருப்பை மனதில்கொண்டு ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் ஆவியானவருக்காக காத்திருப்பது என்பது அர்த்தம் இல்லாததாகும். இது மிகவும் தவறான உபதேசமாகும். இந்த உபதேசத்தை TPM சபையைபோல் வேறு எந்த பெந்தேகோஸ்தே சபையினரும் பின்புற்றுவதில்லை என்பதையும் கவனிகக்வேண்டும்.
சீஷர்கள் யாரும் பரிசுத்த ஆவியானவரை அழைக்கவில்லை. அப்படி அழைத்ததாக வேதத்தில் யாராவது காட்டமுடியுமா?. இதுதான் TPM சபையின் முதல் பிழையான உபதேசமாகும். இந்த காத்திருப்பில் தான் பிழையான செயற்கை பாஷைகள் படிப்பிக்கபடுகின்றன. இங்கு பாஷைகளை கற்று ஞாயிறு ஆராதனையில் அந்நியபாஷையில் துதிக்கவேண்டும் . சபை முழுவதும் இதன் மூலம் தவறான வழியில் நடத்தப்படுகிறது. கற்று ஞாயிறு ஆராதனையில் அந்நியபாஷையில் துதிக்க வேண்டும். சபை முழுவதும் இதன்மூலம் தவறான வழியில் நடத்தப்படுகிறது.
ஆகவே பரிசுத்த ஆவியானவரை காத்திருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுகூறிய பாஸ்டர்.ராஜன் அவர்களின் கருத்து மிகவும் பிழையானது. மட்டுமல்ல வேத வசனத்துக்கு முரணானது. காத்திருக்கவேண்டும் என்ற வார்த்தை எப்போது கூறப்பட்டது. எந்த சூழ்நிலையில்கூறப்பட்டது. அந்த முதல் காத்திருந்த அனுபவத்திற்கு பிறகு புதிய ஏற்பாடு முழுவதிலும் வேறு எங்காவது சீஷர்களோ புதிய ஏற்பாட்டு சபை மக்களோ பரிசுத்த ஆவியானவரின் வருகைக்கு காத்திருந்ததாக எழுதப்பட்டுள்ளதா? அப்போஸ்தலர் முதல் அதிகாரத்தில் காணப்டும் அந்த முதல் ஆவியானவரின் இரகத்துக்குபின் யாராவது எங்காவது காத்திருந்ததாக ஆதாரம் உண்டா? இதை வாசிக்கும் TPM பாஸ்டர்கள் விசுவாசிகள் பதில் கூறமுடியுமா? எழுதுங்கள். ஜாமக்காரனில் வெளியிடுகிறேன்.
பாஸ்டர்.ராஜன் அவர்களின் கடிதத்தில் எழுதிய ஒப்புதல் வாக்குமூலம்.
பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ள ஸ்தோத்திரங்களை வேகமாக சொல்ல வைப்பது. இயேசுவின் இரத்தம் என்ற வார்த்தையை வேகமாக கூற வைப்பதும் வேகமாக பாடும் பாடல்களை தெரிந்தெடுத்து அந்த வேகத்தை உற்சாகப்படுத்த வாத்தியங்களை இதற்கு உதவியாக உபயோகிப்பதும், drumமை வேகவேகமாக அடித்து உற்சாகத்தை தூண்டிவிடுவதும் பாடும்பாட்டின் உச்சக்கட்டத்திற்கு ஜனங்களை கொண்டு சென்று அபிஷேகத்தையும் அந்நியபாஷையையும் பெற்றுக்கொள்ள வைப்பதும் தெய்வீகமுறையே அல்ல- அது செயற்கை முறையாகும் என்று எழுதியிருக்கிறார். இதைப்பற்றி நீங்கள் எழுதியது சரியே என்றும் சம்மதித்திருக்கிறார்.
பாஸ்டர் கடிதத்தில் எழுதியது மட்டுமல்ல, என்னோடு நேரில் பேசும்போதும் இது என் சபையில் மட்டுமல்ல, எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் இந்த சத்தங்கள்கூச்சல்கள் மிகுதியாக காணப்படுகிறது. இதற்கு காரணம் எங்கள் சபை மக்கள் அப்படியே பழகிவிட்டார்கள். என்ன செய்ய? என்றார்.
ஜாமக்காரன்: இன்று பெந்தேகோஸ்தே சபைகளில் மட்டுமல்ல, CSI சபைகளிலும் இப்போதெல்லாம் புது டிரண்ட் Praising Worship துதி ஆராதனை என்ற பெயரில் பல பாடல்களை எழுந்து நிற்க வைத்து பாடுகிறார்கள். இது தவறல்ல. ஆனால் இது பெந்தேகோஸ்தே சபையினரை காப்பி அடிப்பதுபோல் காணப்படுகிறதே . வேகமாக பாடும் பாட்டு தெரிந்தெடுப்பது, அல்லேலுயா சத்தம் ஆமென் ஆமென் என்ற சத்தம். இவைகள் யாவும் பல CSI கன்வென்ஷன்களில் காணப்படுகிறது. இது ஜனங்களை பரவச உணர்ச்சியின் உச்சக்கட்டத்துக்கு மக்களை கூட்டி செல்கிறது.
சபைகளில் இப்படியாவது நம் ஜனங்களை உற்சாகப்படுத்தி அல்லேலுயா சத்தமாககூற வைத்தால் ஜனங்கள் பெந்தேகோஸ்தே சபைகளுக்கு போகாமல் தடுத்துவிடலாம்; என்று தப்பு கணக்கு போடுகிறார்கள். துதி பாடலுக்கு அதிக நேரமும் பிரசங்கத்துக்கு சில நிமிடங்கள் என்று ஆராதனை முறைமைகளை மாற்றிக்கொண்டுவருகிறார்கள். துதி பாடலுக்கு நான் எதிரியல்ல. நானே துதி பாடல் நடத்துகிறேன். ஆனால் எல்லாவற்றையும் ஒழுங்கும் கிரமுமாக ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் நம் ஆராதனை சிறப்பாக அமையும்.
சிலோன் பெந்தேகோஸ்தே (TPM) பாஸ்டரின் கடிதத்துக்கு என் பதில்: பரிசுத்த ஆவியானவர் எப்போது மனிதனுக்குள் வருகிறார்?
எபே 1:13ன்படி வசனத்தைகேட்டு (மனந்திரும்பும்போது) அதாவது விசுவாசிகளான போது ஆவியானவரை பெற்றுக்கொள்கிறோம் என்ற வார்த்தையை பாஸ்டர் அவர்கள் காத்திருப்பு கூட்டத்தில் தான் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளமுடியும் என்று நாம் நம்புவதற்கு கூடவே அப் 2ல் சீடர்கள் மேல்அறையில் காத்திருந்த முறைப்படி அவர்கள் முத்திரை போடப்பட்டார்கள் என்று கூற முயலுகிறார். வசனத்தை எப்படி யெல்லாம் தங்கள் TPM சபை உபதேசத்துக்கு ஏற்றவாறு மாற்றி அர்த்தம் கொள்ள வைக்க முயலுகிறார் என்பதை இதை வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளலாம். அதற்கு KJV ஆங்கில மொழிபெயர்ப்பை ஆதாரமாக கொண்டுவருகிறார் After That Ye Belived என்பதற்கு ஒருவன் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட பிறகு சபையில் வந்து சில நாட்கள் அல்லது சில மாதங்களில்தான் அவன் பரிசுத்த ஆவியை பெறுவான் என்று அர்த்தம் கொடுக்க முயலுகிறார். இது ஆதியாகமத்தில் கர்த்தர் சொன்ன வார்த்தையையே பிசாசு மாற்றி வேறு அர்த்தம் கொள்ளுமாறு ஏவாளிடம் கூறி நம்பவைத்ததற்கு ஒப்பானது ஆகும். இது மிகவும் ஆபத்தானது. இப்படி சொந்த இஷ்டத்துக்கு வசனத்தை வியாக்கியானக்கிக்கூடாது.
பாஸ்டர்.ராஜன் அவர்கள் குறிப்பிட்ட KJV மொழிபெயர்ப்பு மட்டுமல்ல, William, Back, KJV ஆகிய எல்லா மொழிபெயர்ப்புகளிலும் வசனத்தைகேட்டு இரட்சிக்கப்பட்டவுடன் என்ற அர்த்தத்தில்தான் அனைத்து மொழிபெயர்ப்புகளும் கூறுகிறது. அதைவிட முக்கியமாக மூல பாஷையை கவனியுங்கள். அதிலும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட உடனேயே பரிசுத்தஆவியினால் முத்திரையிடப்பட்டீர்கள் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அடுத்த பாராவில் நான் எழுதியதை சுட்டிக்காட்டி இவரே மாட்டிக்கொண்டார். 1கொரி 12:3 பரிசுத்த ஆவியானவராலேயன்றி இயேசுவை கர்த்தர் என்று ஒருவரும் சொல்லக்கூடாது என்பதாகும். இதை வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். நீங்கள் எழுதியது சரிதான் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் அதை தொடர்ந்து மறுபடியும் தன் சபை உபதேசத்தை உறுதிப்படுத்த தவறான கருத்தை வலியுறுத்துகிறார்.
இரட்சிக்கப்படும்போது ஆவியானவரின் உதவி அல்லது கிரியை மனிதனுக்குள் போகாது. அப்படியானால் எப்படி ஒருவன் இயேசுவை கர்த்தர் என்று கூறமுடியும். எப்படி மனந்திரும்ப முடியும். சபைக்குள் வந்து அநேக நாள் கழித்து காத்திருப்பு கூட்டத்தின்மூலமாகத்தான் ஆவியானவர் உள்ளே வருவாரா? பாஸ்டரின் வியாக்கியானத்தில் உள்ள தவறை வாசகர்கள் விளங்கிக்கொண்டீர்களா? இரட்சிக்கப்பட்ட எல்லாருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் உண்டு என்பது தவறு என்று பாஸ்டர் ராஜன் கூறுகிறார். இதற்கு ரோ 10:9, யோ 14:17 வசனத்தை குறிப்பிடுகிறார். ரோ 10:9ல் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால், வாயினால் அறிக்கையிட்டு உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் என்று பவுல் கூறிய வசனத்துக்கும் இரட்சிக்கப்படும்போது பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்துவிடுகிறார் என்பதற்கும் என்ன சம்பந்தம். வசனத்தை கேள்விப்படாமல் எப்படி இரட்சிக்கப்படமுடியும் இரட்சிக்கப்படாமல் ஒருவர் எப்படி வாயினால் அறிக்கை செய்யமுடியும்?
அடுத்தது, யோ 14:17ல் அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளேயேயி ருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள். இந்த வசனத்துக்கும் இரட்சிக்கப்பட்டஉடன் ஆவியானவர் மனிதனின் மனதின் உள்ளே வருவதில்லை என்பதற்கும் என்ன சம்பந்தம்?. மனந்திரும்பின சீஷர்களோடு இயேசு பேசும்போது மனந்திரும்பின உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை நீங்களே அறிவீர்கள் என்றுதானே இயேசு கூறுகிறார். பவுலும் ரோமர் 8ம் அதிகாரம் முழுவதிலும் எழுதியதை வாசித்துப்பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை நீங்களே அறிவீர்களே என்கிறார். இதற்கு அந்நியபாஷை அடையாளமாக இருக்க வேண்டியதில்லையே.
அந்நியபாஷை பரிசுத்தாவியானவரின் முதல் அடையாளம் என்கிறார். இப்படி இவர் மட்டுமல்ல மற்ற ஊழியர்கள் எல்லாரும் முதல் அடையாளம், இரண்டாம் அடையாளம், மூன்றாம் அடையாளம் என்று கூறி வேதம் போதிக்காத உபதேசத்துக்குள் இவர்கள் யாவரும் சென்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட இவர்களை எப்படி புரிய வைப்பது? பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கத்தில் அப்போஸ்தல நடபடிகைகளில் அன்று பற்பல பாஷைகளில் பேசியதைக்குறித்து பேதுரு பேசும்போது இப்போது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதை பொழிந்தருளினார் என்ற வார்த்தைக்கு இவர்கள் அதாவது காண்கிறதும்,கேட்கிறதும் என்று கூறிய இரண்டு வார்த்தைகளைக் அந்நியபாஷைக்கு அடையாளமாக சுட்டிக்காட்டுகிறார். இதனால்தான் பரிசுத்தஆவியை பெற்றுக் கொண்டவர்களுக்கு அந்நியபாஷையை அடையாளம் என்கிறோம் என்கிறார்.
இவ்வளவு அனுபவம் பெற்ற இவர் சரித்திர சம்பந்தமான பரிசுத்தாவியானவரின் இந்த முதல் இறக்கத்தில் ஏற்பட்ட இந்த இரண்டு காரியங்களை மட்டும் நேரிடையாக எடுத்துக்கொண்டு இந்த இரண்டு காட்சிகளை கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவுக்கு அடையாளமாக குறிப்பிடுகிறார். ஒரு வசனத்தை வாசிக்கும்போது மேலேயும் கீழேயும் வாசித்து எந்த காலத்தில் நடைபெற்றது. எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எதற்காக அந்த பாஷைகள் பேசப்பட்டது என்று இவர்களால் கணிக்க முடியவில்லையே. காரணம் இவர்களுக்கு வேதாகம கல்லூரி படிப்பின் அடிப்படை அனுபவம் இல்லை.
இதன்மூலம் இவர்களின் வேத வாசிப்பு முறையே சரியில்லை என்றும் கூறுகிறேன். வேதத்தை எப்படி தியானிப்பது அல்லது ஆராய்வது என்ற அடிப்படை ஞானமே இவர்களுக்கு இல்லை என்பதால்தான் எல்லா வசனங்களையும் மிகவும் பிழையாகவும், இவர்களுக்கு சாதகமாகவும் விளங்கிக் கொள்கிறார்கள். இந்த குறிப்பிட்ட TPM சபை மட்டுமல்ல, எல்லா பெந்தேகோஸ்தே சபைகளின் பாஸ்டர்களுக்கும்; வேத வசனத்தை ஆராயும்முறை மிகவும் தவறானதாக இருக்கிறது.
குறிப்பாக எல்லா பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்களுக்கும் வேதாகம கல்லூரி படிப்பின் அனுபவம் இல்லாததால் ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கு காரணம் என்று விளங்குகிறது. இதன் காரணமாக வேதத்தின் சரித்திரம் இவர்களுக்கு தெரியவில்லை. AOG சபைகளுக்கு மட்டும் இப்போது வேதாகம கல்லூரி மதுரையிலும், பெங்களுரிலும் இருக்கிறது. இந்த கல்லூரியிலும் அந்நியபாஷை என்ற பிழையானதும் வசன அடிப்படையில்லாததுமான உபதேசத்தை மையமாக கொண்டே கல்லூரி சேர்க்கை இருப்பதால் இவர்களின் கல்லூரி படிப்பு பிழையான உபதேசத்துடன் அமைந்துள்ளது.
ஏசா 28:11ம் வசனத்தை இவர்கள் அந்நியபாஷையாகவே எடுக்கிறார்கள். இதை தீர்க்கதரிசனம் என்று பாஸ்டர்.ராஜன் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இவரோ 1 கொரி 14:2யும், ஏசா 28:11யும் ஒன்றாக இணைத்தே பேசுகிறார். ஆகவே இவர் எழுதிய கடிதத்துக்கு வார்த்தைக்கு வார்த்தை விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாடிக்காமல் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பிலிருந்து அ,ஆ,இ,ஈ என்று சொல்லிக் கொடுப்பதுபோல இவர்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டியது அவசியம் என்று உணருகிறேன்.
ஏசா 28:11ம் வசனத்தை அந்நியபாஷைக்கு ஆதாரமாக யார் எடுக்கிறார்களோ, அது எவ்வளவு பெரிய ஊழியராக இருந்தாலும், பாஸ்டராக இருந்தாலும் அவர்களுக்கு வேத வசனத்தை ஆராயவோ, வியாக்கியானிக்கவோ தெரியவில்லை என்று தைரியமாக கூறலாம்.
அதேபோல அப் 2ம் அதிகாரத்தில் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கத்தில் சீஷர்கள் பேசியது ஒரே ஒரு பாஷைஅல்ல. ஒரே ஒரு பாஷையானால் பாஸ்டர்கூறுவதைப்போல அந்த பாஷையை அறியாதவனுக்கு அவன் பேசியது அந்நியபாஷை என்று கூறலாம். ஆனால் அன்று ஒரு சீஷனுடைய வாயிலிருந்து ஒரு பாஷை அல்ல பற்பல பாஷைகள் வெளிவந்தன. அப்படி ஒவ்வொரு சீஷனுடைய வாயிலிருந்தும் வெளிவந்தது பற்பல பாஷை ஆகும். அத்தனை பாஷைக்கும் அர்த்தம் இருந்தது. மேலும் அந்த பாஷை பேசும் நபர்கள் அங்கு இருந்தார்கள் என்பது தெளிவு.
வேதத்தில் உள்ள Parallelism என்பது ஒரு கருத்தை இரண்டு இரண்டு வார்த்தைகளில் விளங்கவைப்பது. ஒரு வார்த்தையை உறுதிப்படுத்த எபிரேயர்கள் அப்படி எழுதுவார்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என்று இயேசுகூறினார். ஆமென் ஆமென் என்று இரண்டுமுறை உபயோகிப்பது வார்த்தையை உறுதிப்படுத்துவதாகும். ஜலத்தினாலும், ஆவியினாலும், ஆவி-அக்கினி ஆகிய இவைகள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரை குறிக்க Parallelism என்ற முறையில் உபயோகிக்க பயன்படுத்தப்பட்டதாகும். இதை தமிழில் ஒருபோகும் நிலை என்று கூறலாம்.
ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் என்ற பரலோகம் போகமுடியாது என்பதை ஞானஸ்நானத்துக்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தையேயல்ல. இந்த குறிப்பிட்ட வார்த்தையை கூறி ஜனங்களை பயமுறுத்தியே ஞானஸ்நானம் எடுக்க வைத்துவிடுவார்கள். இதற்கு பயந்தே பலர் ஞானஸ்நானம் எடுத்து விடுவார்கள். இதுவும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்கள் மக்களை ஞானஸ்நானம் எடுக்கவும் மக்களை பயமுறுத்துவதற்கும் உபயோகப்படுத்தும் ஏமாற்று வசனமாகும்.
இப்படி பல வசனங்களின் உண்மை அர்த்தத்தை இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். சபையில் சபை விசுவாசிகள் அந்நியபாஷையில் பேசிக்கொண்டிருக்கும் போது வேகமாக பாடல் பாடுபவர்கள், அப்போது drum அடிப்பவர்கள், சபை மக்கள் பரவச உணர்வின் உச்சநிலை எட்டும்போது வாத்திய கருவிகளை இயக்குபவர்களுக்கு பாஸ்டர் ஒரு இரகசிய செய்கை காட்டுவார் அதை புரிந்து drum,வாத்திய கருவிகள் வாசிப்பது நிற்கும்- உடனே விசுவாசிகள் அந்நியபாஷை பேசுவதையும் நிறுத்துவார்கள்.
இது ஆவியானவரின் கிரியையா? என்று இதைக்குறித்து பாஸ்டரிடம் கேட்டு எழுதியதற்கு எனக்கு அவர் எழுதிய பதில் கடிதத்தில் அது சபையின் முக்கிய ஒழுங்காகும் என்கிறார். மேலும் அவர் இதை குறிப்பிட்ட எனக்கு எழுதும்போது சபையில் எல்லாரும் அந்நியபாஷையில் பேசிக்கொண்டேயிருந்தால் எப்போது கூட்டத்தை? முடிப்பது?ஆராதனையை எப்போது முடிப்பது?. ஆகவேதான் பாஸ்டர் பேச சொல்லும்போது பேசுவதும், நிறுத்த சொல்லும் போது நிறுத்தவும் செய்யமுடிகிறது என்கிறார். இதை சபையின் ஒழுங்கு என்று கூறுகிறார்.
ஆக ஒன்று தெளிவாக விளங்குகிறது இவருடைய சபையின் விசுவாசிகளை நோக்கி பாஸ்டர் பேச சொன்னால் அந்நியபாஷையில் பேசலாம். பாஸ்டர் நிறுத்த சொன்னால் அந்நியபாஷையை நிறுத்தலாம். இதை வைத்தே இது ஆவியானவரின் கிரியை அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா?.
மேலும் கொட்டு (drum) அடித்து வேகமாக பாடும் பாடலை திரும்பதிரும்ப பாடி ஸ்தோத்திரத்தை வேவேகமாக திரும்பதிரும்ப சொல்லவைத்து அந்நியபாஷை என்ற பெயரில், அபிஷேகம் என்ற பெயரில் சபை மக்களை உளரவைக்கும் முறை TPM பாஸ்டர்.ராஜன் அவர்கள் எங்கள் சபையில் நடக்கும் மிகவும் தவறான ஏற்பாடு ஆகும் என்று ஒத்துக்கொண்டவரின் TPM சபைகளில் அப்படிப்பட்ட போலி பாஷை பேசும் ஏற்பாடு தொடருகிறதே- அதை தன் சபையிலாவது தவறு என்று அவர் போதிக்ககூடாதா? இன்று அந்த வேகமாக பாடும் பாடலும் இசைக்கருவிகளும் ஸ்தோத்திரத்தை திரும்பதிரும்ப சொல்லும் வழக்கமும் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளிலும் காணப்படுகிறதே! ஆனால் இவைகளை நியாயப்படுத்த TPM பாஸ்டர்.ராஜன் அவர்கள் சபையின் ஒழுங்கு என்று கூறுகிறார்.
பொதுவாக எல்லா பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களுக்கும் வேதத்தின் சரித்திரத்தில் ஏற்றுக்கொள்ள விரும்பாத இரண்டு விஷயங்கள்:
1). பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்காக எழுதப்பட்டது. இது முதல் யுகம் என்று அழைக்கப்படுகிறது.
2). புதிய ஏற்பாடு இரண்டாவது யுகம் என்று கூறலாம். இதில் சுவிசேஷ புத்தகங்கள் இயேசுவை அறியாத உலக மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க எழுதப்பட்டது. அப்போஸ்தல நடபடிகள், நிருபங்கள் ஆகிய யாவும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைத்து உலக மக்களுக்காக எழுதப்பட்டது. இது இரண்டாம் யுகம் என்பார்கள். இதை மனதில் வைத்து பரிசுத்த ஆவியானவரைப்பற்றி தியானித்தால் மட்டுமே சரியான விளக்கம் கிடைக்கும்.