முகப்பு> களஞ்சியம்> பாடல் பிறந்த கதை

பாடல் பிறந்த கதை

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்!
என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்!
துன்பத்தில் என் நல் துணை அவரே,
என்றென்றும் ஜீவிக்கிறார் - (2)
1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது,
பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது,
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது,
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் - ஜீவிக்கிறார்
2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே,
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே,
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே! - ஜீவிக்கிறார்

1960 களில் நாங்கள் பாளையங்கோட்டையில் இருந்தபோது திருச்சபைகளில் இப்பாடல் மிகவும் பிரபலமடைந்தது. கன்வென்ஷன் கூட்டங்களிலும், இளைஞர் இயக்கக் கூட்டங்களிலும், ஏன், ஞாயிறு பள்ளிகளிலும் இப்பாடல் ஓங்கி ஒலித்தது. ஒவ்வொரு கிறிஸ்தவரின் உள்ளத்தின் ஆழத்திலிருந்தும் வானுயர எழுந்தது. ஏனென்றால் அது கிறிஸ்தவர் அனைவருக்கும் மனப்பாடமாகத் தெரிந்த பாடலாக இருந்தது.

இப்பாடலை எமில் ஜெபசிங் என்ற ஆண்டவரின் ஊழியர் எழுதினார். இவர் அகில உலக வானொலி நிலையத்தின் தென் ஆசிய இயக்குனர் ஆக இருந்தார். இன்று நம் நாட்டின் மிகச்சிறந்த மிஷனரி இயக்கமாக விளங்கும் " நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவை ( Friends Missionary Prayer Band ) வித்திட்டு, உரமிட்டு, வளர்த்த தொடக்க காலத் தலைவர்களில் இவரும் ஒருவர். " பாடல் என்றால் எமில் " என்று இவ்வியக்க மக்கள் கூறுமளவிற்கு இம்மக்கள் உற்சாகமாகப் பாட வழிவகுத்தார். அழிந்துபோகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம் இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான இராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

சகோதர்ர் எமில் சிங் 10-01-1941 அன்று அருள்திரு நவமணி அவர்களுக்கும் கிரேஸி அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதர்ர் பி. சாம், சகோதர்ர் ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தமது 17 வது வயதில் ஆண்டவரின் அன்புக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டு, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால் பண்ணைவிளையைப் "பரிசுத்த பூமி" என்று இன்றளவும் எமில் நன்றியோடு நினைவுகூறுகிறார்.

ஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து, ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959 ஆம் ஆண்டின் பெரிய வெள்ளிக் கிழமையன்று, வழக்கம்போல் ஜெபத்திற்காக இந்த இளைஞர்குழு கூடியது. அன்று சிறப்பாகத் தியானம் செய்த ஆண்டவரின் திருப்பாடுகளும், சிலுவை மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப் பாடி, அதன் பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் தூயாவியார் எழிலுக்குள் செயல்பட்டார். அந்த அறையில் கரும் பலகை ஒன்று இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், தூயாவியாரின் வழிநடத்துதல்படியே, இப்பாடலை நேரடியாக கரும்பலகையில் மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இதற்கேற்ற இசையும் அவரது உள்ளத்தில் சுரந்தது.

"பெரிய வெள்ளிக் கிழமையன்றும் இயேசு ஜீவிக்கிறார்! பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்க ஈனச்சிலுவையில் தம்மை அர்ப்பணித்து மரித்தார். ஆயினும், இதோ அனைத்து நாட்களிலும் முடிவின்றி ஜீவிக்கிறார். அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்! என எமில் நம்பினார். " அவர் ஏன் என் உள்ளத்தில் வாழ்கிறார்" என்று எண்ணிய எமிலுக்கு " உன் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கே" என்ற ஆவியாரின் பதில், திருமறையில் உள்ள அரிய செயல்களை எண்ணத் தூண்டியது.

செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, விழி இழந்தோர் பார்வை பெறுதல், தொழுநோயுற்றோர் குணமடைதல், என பல அரிய செயல்களை அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும் பலகையில் பாடலாக உருவானது.

இப்பாடலை எமில் இசையுடன் பாடப், பாட அங்கு கூடியிருந்த இளைஞர் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக் கிழமையானது, அனைத்து நாட்களிலும் வாழ்ந்து, ஆட்சிபுரியும், மகிமை நிறைந்த ஆண்டவரை, அற்புத நாயகராய்த் துதிக்கும் வேளையாய் மாறியது.

சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற இளைஞர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர். இயேசுவைப் பாடனும், உற்சாகமாகப் பாடுங்கள்

நன்றி: அகஸ்டின் ஜீவகனி