முகப்பு> களஞ்சியம்> கட்டுரைகள்

ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள் என்ன?

இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள்என்றும் காட்டிகொண்டும், வெளிப்பிரகாரமாக ஆடை அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்கு செல்வதில் தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்வதிலும், ஆழ்ந்த சத்தியங்களை கேட்பதினால் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்வதிலும், நேரத்தை வீண் அடிப்பார்கள். ஆனால் உண்மையில் யாரை வேதம் ஆவிக்குரியவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் அங்கீகரிக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம். பல ஆண்டுகள் சபைக்கு சென்று கூட்டங்களுக்கு சென்று சத்தியங்களை ஏன் கேட்கிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள். "ஆவிக்குரியவர்கள்" என்றால் கிரேக்க வார்த்தை "நிமோடிக்கோஸ்" (GK: pneumatikos) "தேவனுடைய ஆவியின் ஆளுகையில் இருப்பவன்".

அடையாளங்கள்:

1. எல்லாவற்றையும் நிதானித்து அறிவான்- 1 கொரி 2:15

"நிதானித்து" கிரேக்க வார்த்தை அனாக்ரிநோ - Gk:anakrino: 1. ஜாக்கிரதையாய் சோதனை செய்பவன், 2. தனக்குதானே கேள்வி கேட்பவன், 3. மதிப்பீடு செய்பவன், 4. குறை சொல்பவனை சோதனை செய்பவன், 5. சரியான தீர்மானங்களை எடுப்பவன், 6. உணர்ச்சி வசப்படாதவன், 7. நியாயத்தின் பக்கம் நிற்பவன். இந்த அர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தி என்பது உங்களுக்கே தெரியும். இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற நிலையில் தாங்கள் விவாதத்தில் ஜெயிக்கவேண்டும் என்று இருக்கிறார்களே தவிர, மேற்சொன்னதுபோல் நிதனிப்பது இல்லை. நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்பதை இதில் காட்டுங்கள். நிதானித்து முடிவெடுங்கள்.

2. பெலவானாய் இருப்பான்.- அப் 1:18, 1கொரி 4:20, 1கொரி 3:2, ஏசாயா 2:3

"பெலன்" கிரேக்க வார்த்தை: டுனாமீஸ், 1. சாத்தான் மேற்க்கொள்ளக்கூடிய பெலன், 2. பாவத்தை மேற்க்கொள்ளக்கூடிய பெலன், 3. சகித்துகொள்ளக்கூடிய பெலன், ஆவிக்குரியவர்கள் என்று கூறுவார்கள். தாங்கள் மற்றவர்களைவிட சத்தியத்தை சரியாய் கடைபிடிக்கின்றோம் என்று காட்டிக்கொள்வார்கள். மிகுந்த பரிசுத்தவான்கள்போல் பேசுவார்கள். ஆனால் யாராவது கொஞ்சம் சீண்டினால் மண்டையை உடைத்துவிடுவார்கள். அவர்களைப்போல கெட்ட வார்த்தை யாரும் பேச முடியாது. யானையைப்போல பீளிறுவார்கள். ஆனால் அவர்களுக்கு சகித்துக்கொள்ளக்கூடிய பெலன் இருக்காது. அதிகாலையிலோ, மற்ற நேரங்களிலோ, ஜெபிக்கமாட்டார்கள். நாம் ஆவிக்குரியவர்கள் என்று சகித்து கொள்வதில் காட்டவேண்டும்.

3. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சுவிசேஷ ஊழியத்தை செய்வான். 1கொரி 9:16

ஆவிக்குரியவன் சுவிசேஷ ஊழியத்தை மிக இலகுவாக எண்ணமாட்டான். இதற்குதான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். வீடு, பணம், மோட்டார் சைக்கிள், கார், கோழிகறி பிரியாணி, சாப்பாடு, ஆடைகள், சுகமான படுக்கைகள் எல்லாம் நாம் எப்படியவாது ஒரு மனிதனுக்கு சுவிசேஷம் அறிவித்து பரலோகம் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே தேவன் நமக்கு கொடுக்கின்றார். வாழ்க்கையில் இவ்வளவு பிரசங்கங்கள் கேட்டு, பல ஆண்டுகள் சபைக்கு சென்று, கூட்டங்களுக்கு சென்று, ஒருவன்கூட உங்கள்மூலம் மனந்திரும்பவில்லையென்றால் நீங்கள் ஆவிக்குரியவர்கள், கிறிஸ்தவர்கள், கர்த்தர் எங்களோடு இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வது அர்த்தமற்றது. ஆழமாய் யோசித்துப்பாருங்கள். இத்தனை காரியங்களின் விளைவுகள் என்ன?

4. சாட்சியாக வாழ்வான் அப் 1:8

இந்த வசனத்தில் வருகிற சாட்சி என்ற வார்த்தை சபையில் தலை வலித்தது ஜெபித்தேன் சுகமானது என்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக சொல்லுகின்ற சாட்சி அல்ல. கிரேக்க வார்த்தை: "மார்ட்டியோ" GK:Marts of martio: அதாவது 1. இரத்தசாட்சியாக வாழ்வது, 2. இரத்த சாட்சியாக மரிப்பது. மரிப்பதைவிட இரத்தசாட்சியாக வாழ்வது கடினம். பவுல் கூறுகின்றார். நான் அனுதினமும் சாகிறேன்.ஆவிக்குரியவன் எந்த சூழ்நிலையிலும் சாட்சியை இழந்துப்போகமாட்டான். தன்னுடைய வாழ்க்கையில் எல்லா உபத்திரவங்களையும் தாங்கி கிறிஸ்துவை வெளிப்படுத்துவான். இன்றைக்கு ஊழியம் அநேகருக்கு வயிற்று பிழைப்பாகிவிட்டதினாலும், தேவனுடைய மன்னிப்பை எளிமையாக எடுத்து கொள்வதினாலும், சாட்சியில்லாத வாழ்க்கை அவர்களை மட்டுமல்ல, சாட்சியோடு வாழ்கிற மற்றவர்களையும் ஜனங்கள் தவறாக புரிந்துக்கொள்ள ஏதுவாகிறது. ஆவிக்குரியவன் என்றால் அவனுடைய சாட்சிதான் அவனை ஆவிக்குரியவன் என்று காட்டும். சாட்சியில்லாவிட்டால் 1000 ஆழமான பிரசங்கம் செய்தாலும் தேவன் கிரியை செய்யமாட்டார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

5. தனக்கு தேவன் (கர்த்தர்) கொடுத்த தோட்டமாகிய சபையில் இருப்பான். (மத் 20:1)

தோட்டம் என்றால் சபை என்று அர்த்தம் இது நமக்கு தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ 21:1. சாலமோனுக்கு ஒரு தோட்டம். உன் 8:11, நேசருக்கு தோட்டம் ஏசா 5:1.இயேசுவுக்கு ஒரு தோட்டம் இருந்தது. யோ 18:1. அதேபோல் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் ஒரு தோட்டம் உண்டு. அதை ஜெபித்து தேர்வு செய்யவேண்டும். அநேகர் சொல்வார்கள் அதுவும் சபைதானே அங்கும் பைபிளைத்தானே போதிக்கின்றார்கள். அங்கும் இயேசுவைத்தானே கும்பிடுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு சபையாக சென்று மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரம் என்று யூதா கூறுவதுபோல அலைந்து பிறகு எந்த சபையும் சரியில்லை என்று அவர்கள் ஒரு சபையை தேவன் சொல்லாமலே ஆரம்பிப்பார்கள். 100 சதவீதம் நல்ல சபை எதிர்ப்பார்ப்பவர்கள் உடனடியாக பரலோகம் செல்லலாம். ஆனால் 75 சதவீதம் நல்ல சபை எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடியுங்கள். நாம் சபையை மாற்றுவது அல்ல. சபை நம்மை மாற்றுவதுதான் விஷயம். சபை மாறிபோக வேண்டுமென்றால் சில காரியத்திற்காக
1. பெண்கள் விஷயத்தில் (பாஸ்டர்கள்) ஊழியன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால்,
2. ஒரு பாஸ்டர் அளவுக்கு மீறி தன் குடும்பத்திற்கு சொத்துசேர்க்க ஆரம்பித்தால்,
3. பாஸ்டர் தவறான உபதேசத்தை போதித்தால், மற்றபடி சிறிய சிறிய விஷயத்திற்குகெல்லாம் அல்லது சின்ன பிரச்சனைக்கெல்லாம் சபையை மாற்றுவது சரியல்ல.

ஆகவே ஆவிக்குரியவன் கர்த்தர் தன் வேலைக்கு அமர்த்தின (தோட்டத்தில்) சபையில் இருந்து வேலை செய்து கூலியை பெற்றுக்கொள்வான். விசுவாசிகளாகிய நாம் யாவருக்கும் ஒருநாள் எல்லோரும் ஓரிடத்தில் ஒரே மேய்ப்பன் இயேசுவின் கீழ் இருக்கபோகிறோம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.